இளமைக் கவிஞர் வாலி! - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

இளமைக் கவிஞர் வாலி! - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

கட்டுரை 29-Oct-2014 12:27 PM IST Top 10 கருத்துக்கள்

இன்னும் ஒரு கனவுபோலத்தான் இருக்கிறது கவிஞர் வாலி இப்பூவுலகைவிட்டு விண்ணுலகு சென்றது. திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் சாதனை வரலாறு ஒரு பக்கத்தில் அடங்கிவிடக்கூடியதா? இன்று... (அக்டோபர் 29) கவிஞர் வாலியின் பிறந்தநாள். அவரைப் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை...

‘பேசும் படம்’ பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலி என்றழைக்கப்படும் டி.எஸ்.ரங்கராஜன் பிறந்தார். பிறந்தது திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறை என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கம் மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர். படித்ததெல்லாம் பாசுரங்கள்! எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். ஒரு ஓவியராகவேண்டும் என்று விரும்பியவரை காலம் கவித்துறைப் பக்கம் திருப்பிவிட்டது நம் தமிழ்மக்கள் செய்த பாக்கியம்.

‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’ என முருகன் பாடல் ஒன்றை ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு போஸ்ட்கார்டில் எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார். அந்தப் பாடல் டி.எம்.எஸ்ஸை பரவசப்படுத்தியதோடு வாலியை சென்னைக்கும் வரவழைத்தது. டி.எம்.எஸ்ஸின் நட்பு பிரபலங்கள் பலரை வாலிக்கு அறிமுகப்படுத்தியது. 1958-ல் வெளிந்த ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்தில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது குணச்சித்திர நடிகரான வி.கோபாலகிருஷ்ணன்.

இதையடுத்து 1962-ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடி ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம்பெற்ற ‘பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா...’ பாடல் வாலிக்கு தமிழ்சினிமாவில் தனி முகவரி கொடுத்தது. அடுத்து ‘கற்பகம்’ படத்தின் மூலம் பாட்டெழுத வாய்ப்பளித்து வாலியின் வாழ்க்கைக்குக் கை கொடுத்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய வாலி தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாதவராக மாறிப் போனார். கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் உள்ளே நுழைந்தாலும் வாலிக்கும் ஒரு தனி சிம்மாசனம் போட்டுக் கொடுத்தது தமிழ்சினிமா.

எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழ்சினிமாவின் ஜாம்பவான்களையே தனது பாடல்களால் மயக்கிய வாலிக்கு அதன்பின் வந்தவர்களை வசீகரிப்பதில் பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என வாலி தொடாத ஏரியாவே இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அப்படியே விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள சிவகார்த்திகேயன் வரை எல்லா தலைமுறை நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார் வாலி. மெல்லிசை மன்னர்களுடன் பணிபுரிந்த இவரால் அவர்களுக்குப்பின் முப்பது வருடம் கழித்து வந்த இசைப்புயலுடனும், அவருக்குப்பின் இருபது வருடம் கழித்து இன்றுவந்த அனிருத்துடனும் இணைந்து பணியாற்ற முடிந்தது என்றால் அதற்குக் காரணம் வயதாக வயதாக, இளமையாகிக்கொண்டே வந்த அவரது மனதுதான்.

எம்.ஜி.ஆரின் 63 படங்களுக்கு பாடல் எழுதி இருக்கும் வாலி, எம்.ஜி.ஆருக்காக ‘படகோட்டி’ படத்தில் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ என எம்.ஜி.ஆரின் பெரும்பாலான வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார். கண்ணதாசனுக்கு பின்னர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பையும் பெற்றார் வாலி. தீவிர அரசியலில் இறங்காமல் கடைசிவரை தன்னை தி.மு.க.வின் அனுதாபியாகவே அடையாளப்படுத்திக்கொண்ட வாலி கடைசிவரை கலைஞர் கருணாநிதியுடன் பிரிக்க முடியாத நட்பிலேயே இருந்தார்.

திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ள வாலி ‘சிட்டுக்குருவி’, ‘ஒரேயொரு கிராமத்தில்’, ‘சாட்டை இல்லாத பம்பரங்கள்’ உள்பட 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதிராவ் என்பவருடன் சேர்ந்து ‘வடைமாலை’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ராமானுஜ காவியம்’, ‘கிருஷ்ண விஜயம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இயக்குனர் கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’யில் ஒரு சிறுவேடத்தில் நடித்த வாலி கமலின் அன்பைத் தவிர்க்க முடியாமல் ‘சத்யா’ மற்றும் ‘ஹே ராம்’ படங்களிலும் மீண்டும் பாலசந்தரின் ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலும் நடித்தார். பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை என்பது ஆச்சர்யம். அதனாலேயே அவரை, ‘பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்’ என்று நட்பு வட்டாரத்தில் சொல்வார்கள்.

1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுதத் தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கி இன்னும் வெளிவராத ‘காவியத் தலைவன்’ படத்துக்கும் பாடல் எழுதிக்கொடுத்து விட்டுத்தான் சென்றுள்ளார். இவரது பாடல்களைப் பாடாத பாடகர்களோ, இவரது பாடல்களுக்கு இசையமைக்காத இசையமைப்பாளர்களோ, இவரது பாடல்களைப் பாடி நடிக்காத நடிகர்களோ தமிழ்சினிமாவில் யார் யார் இருக்கிறார்கள் என எண்ணத் தொடங்கினால் ஒற்றை இலக்கத்தில் முடிந்துவிடும் அது.

ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்ற வாலி, தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசு வாலிக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. ஆனால், 1973-ல் ‘பாரத விலாஸ்’ படத்தில் அவர் எழுதிய ‘இந்திய நாடு என்வீடு’ என்ற பாடலுக்கு மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை சில காரணங்களால் வாங்க மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

‘மன்னன்’ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் அந்தப் பாடல் வரிகள் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது வேறெந்த கவிஞருக்கும் கிடைக்காத மணிமகுடம்.

காதல் திருமணம் செய்துகொண்டவர் வாலி. வாலியின் காதல் மனைவி ரமணதிலகம் சில வருடங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். இவர்களுக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். தமிழ்சினிமாவில் இளமைத்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த 82 வயதான அந்த வாலி என்னும் இளைஞனை காலதேவன் இன்னும் சிலகாலம் நம்முடன் விட்டுவைத்திருந்தால்தான் என்ன?

- சின்னமனூர் விஜயகுமார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;