‘பூஜை’ - விமர்சனம்

மசாலா தூக்கலான ஆந்திரா மீல்ஸ்!

விமர்சனம் 23-Oct-2014 4:29 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : விஷால் ஃபிலிம் ஃபேக்டரி
இயக்கம் : ஹரி
நடிப்பு : விஷால், ஸ்ருதிஹாசன், சூரி, சத்யராஜ், முகேஷ் திவாரி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : ப்ரியன்
எடிட்டிங் : வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்

தீபாவளியன்று ‘கத்தி’யுடன் களமிறங்கியிருக்கும் ‘பூஜை’ ரசிகர்களை எந்தளவு கவர்ந்துள்ளது?

கதைக்களம்
கூலிப்படையை நடத்திவரும் தாதா ஒருவனுக்கும், எதற்கும் துணிந்த தைரியசாலி ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து சொல்லியிருப்பதே பூஜை.

கோயம்புத்தூரில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ராதிகாவின் மகன் விஷால், பிரச்சனை ஒன்றின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து சென்று, அவினாசி மார்க்கெட்டில் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்து வருகிறார். ஒரு சந்திப்பின்போது விஷாலுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாய் மாறுகிறது.
இன்னொருபுறம் அதே ஊரில் அறங்காவலர் பதவியில் இருந்து கொண்டே, மறைமுகமாக கூலிப்படையை நடத்தி வருகிறார் மனோஜ் திவாரி. அதோடு விஷால் குடும்பத்துக்கு சொந்தமான கோவில் நிலத்தையும் திட்டம்போட்டு பறிக்க முயல்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் கோவில் நிர்வாகம் விஷாலின் சித்தப்பாவான ஜெயப்பிரகாஷை அறங்காவலர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறது. இதைத் தாங்க முடியாமல் மனோஜ் திவாரியின் ஆள் ஜெயப்பிரகாஷை தாக்க, மனோஜ் திவாரியின் வீடு புகுந்து அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்கிறார் விஷால். இதனால் அவமானமாகும் மனோஜ் திவாரி, விஷால் குடும்பத்தில் இருப்பவர்களை ஒவ்வொருவராக கொலை செய்யப்போவதாக சவால் விடுகிறார். இந்த சவாலை விஷால் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘பூஜை’.

படம் பற்றிய அலசல்
ஹரியின் அதே ஃபார்முலாதான். நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள், பத்து பதினைந்து டாட்டா சுமோ, அரிவாள், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, இடையே கொஞ்சம் காதல்... இதேதான் இந்த ‘பூஜை’ படத்திலும். ஆனால் பரபரக்கும் தன்னுடைய திரைக்கதை யுக்தியால் படம் பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு படத்திலும் போரடிக்கவிடாமல் பார்த்துக் கொள்வதில் அவர் கில்லாடி.

படம் தொடங்கியதும் கதையும் தொடங்கிவிடுகிறது... இவர்தான் வில்லன், இவர்தான் ஹீரோ, இது அவரது குடும்பம், காதல், இவர்கள் உங்களை படம் நெடுக சிரிக்க வைப்பார்கள் என ‘பட் பட்’டென ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டே இன்னொருபுறம் ஆக்ஷன் அரிவாளை வீசிக்கொண்டே பறக்கிறது ‘பூஜை’.

ஒளிப்பதிவாளரும், எடிட்டர்களும் உண்மையிலேயே கடுமையான உழைப்பை இப்படத்தில் கொட்டியிருக்க வேண்டும். 2 மணி 40 நிமிட நேர படத்தில் எந்த இடத்திலும் எந்தவொரு காட்சியும் நின்று நிதானமாக பயணிக்கவே இல்லை. ஒவ்வொரு காட்சிக்கும், எத்தனை கோணங்கள்... எவ்வளவு ஷாட்கள்... அப்பப்பா பார்க்கும் நமக்கே ‘டயர்டா’கிறது. இதை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்பதை நினைத்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனாலும் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதும், நிறையமுறை பார்த்துவிட்ட கதை என்பதாலும் ‘பூஜை’ சில இடங்களில் ரசிகர்களை சோர்வடைய வைத்திருப்பதையும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட இடங்களில் உடனடியாக சூரியை உள்ளே நுழைத்து ரசிர்களின் கவனத்தை சாமர்த்தியமாக திசை திருப்பியிருக்கிறார் ஹரி.

நடிகர்களின் பங்களிப்பு
விஷாலுக்கு செமத்தியான ஆக்ஷன் ஹீரோ ரோல். அவருடைய கட்டுமஸ்தான உடம்பும், கணீரென்ற குரலும் ‘வாசுதேவன்’ கேரக்டருக்கு ‘நச்’சென பொருந்தியிருக்கிறது. ஆக்ஷன் மட்டுமின்றி ரொமான்ஸ், சென்டிமென்ட் ஏரியாவையும் ஒரு கை பார்த்திருக்கிறார். மாடர்ன் கேர்ளாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு மூன்று பாடல்களில் வருவதோடு நின்றுவிடாமல், படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புள்ள கேரக்டர். அக்கமார்க் ஹரி பட ஹீரோயின். நன்றாகவே செய்திருக்கிறார். ‘போக்கிரி’ புகழ் வில்லன் மனோஜ் திவாரியின் கொடூரமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம். நடிப்பிலும், ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சத்யராஜ் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். சூரி, ‘பிளாக்’ பாண்டியின் காமெடிகள் பழைய கவுண்டமாணி, செந்தில் காமெடியை மீண்டும் திரையில் பார்த்ததுபோன்று இருக்கிறது. நிறைய இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், ராதிகா, தலைவாசல் விஜய், கௌசல்யா, பிரதாப் போத்தன் என நட்சத்திரப் பட்டியலில் இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரவர் பங்கை சரிவர செய்திருக்கிறார்கள்.

பலம்
1. ஹரியின் பரபர திரைக்கதையும், அதை சரிவர படமாக்குவதில் பெரும்பங்கு வகித்திருக்கும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.
2. ஆக்ஷன் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கும் பின்னணி இசை.
3. சூரி, பிளாக் பாண்டியின் காமெடிக் காட்சிகள்.
4. பெண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சென்டிமென்ட் காட்சிகள்.

பலவீனம்
1. புதிய விஷயங்கள் எதுவுமே இல்லாத டெம்ப்ளேட் கதை.
2. வன்முறைக் காட்சிகள் நிறைய இருப்பது.
3. படத்தின் ஓட்டத்திற்கு ‘பிரேக்’ போடும் பாடல்கள்

மொத்தத்தில்...
ஹரி படம் இப்படித்தான் இருக்கும், ஆனால் நிச்சயம் பொழுதுபோக்கலாம் என நினைப்பவர்கள் தாராளமாக ‘பூஜை’க்கு விசிட் அடிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : மசாலா தூக்கலான ஆந்திரா மீல்ஸ்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;