‘கத்தி’ விமர்சனம்

இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

விமர்சனம் 22-Oct-2014 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர்கள்: விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்

‘துப்பாக்கி’ தந்த சூப்பர்ஹிட் கூட்டணி என்பதோடு, கடைசி நேர ரிலீஸ் பரபரப்பும் சேர்ந்துகொள்ள எக்கச்சக்க எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கிறது ‘இளையதளபதி’யின் கத்தி!

கதைக்களம்

கொல்கத்தா சிறையிலிருந்து தப்பி வெளியே வரும் கதிரேசன் (விஜய்), சுடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜீவானந்தத்தைச் (விஜய்) சந்திக்கிறார். அச்சு அச்சலாக இரண்டு பேரும் ஒன்றுபோல இருப்பதால், உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தன் அடையாளங்களை மாற்றி வைத்து ஜீவனாந்தமாக மாறும் கதிரேசன் அவருடைய இடத்திற்கு செல்ல, அங்கே அவருக்கு அடுத்தடுத்து காத்திருக்கிறது அதிர்ச்சி.

ஒரு புறம் வில்லன் மூலம் கிடைக்கும் 25 கோடி ரூபாய் பணம், இன்னொரு புறம் தங்களின் நிலத்திற்காகப் போராடும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் பணி என ஜீவானந்தமாக மாறிய கதிரேசன் முன்பு இரண்டு வாய்ப்புகள் வர, கதிரேசன் எதைத் தேர்ந்தெடுக்கிறார்? ஜீவானந்தம் என்னவாகிறார் என்பதே ‘கத்தி’.

படம் பற்றிய அலசல்

பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் இந்தியாவின் வாழ்வாதாரமான விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவதற்காக களமிறங்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு பெரிய சபாஷ்! இதுபோன்ற சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதையில், கமர்ஷியல் மாஸ் ஹீரோ விஜய் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகவே அவருக்கும் பாராட்டுக்கள். ஆனால் அதில் பிரச்சனைகளின் வீரியத்தை பெரிதாகக் காட்டாமல், ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதுதான் கொஞ்சம் படத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.

‘ரமணா’ படத்தில் அரசு அதிகாரிகளின் ஊழல் பிரச்சனையை சாட்டையடியாக சொல்லிய ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தில் ஒரு இடத்தில் கூட விஜய்காந்த் என்ற ஹீரோவுக்காக படத்தை நகர்த்தியிருக்க மாட்டார். கதாநாயகியுடன் ஹீரோ டூயட் பாடுவது போலவோ, தேவையில்லாத காமெடியையோ எந்த இடத்திலும் அவர் வைக்கவில்லை. தான் சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தியே முழுப்படத்தையும் நகர்ந்தியிருந்தார் முருகதாஸ். ஆனால், இந்த ‘கத்தி’யில் விவசாயிகளின் கண்ணீரை, விஜய்யின் ஹீரோயிசம் மறக்கடிக்கச் செய்கிறது.

என்றாலும், ஒரு சில இடங்களில் விவசாயிகளின் வேதனையை அற்புதமாக படம்பிடித்திருக்கிறார் முருகதாஸ். குறிப்பாக, தங்களின் நிலத்திற்காக 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சி தியேட்டரில் மொத்த ரசிகர்களையும் உறையச் செய்கிறது. அதேபோல், கிராமத்தில் இருக்கும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையை, சிட்டியில் வாழும் ஜனங்களுக்கு புரிய வைப்பதற்காக ஹீரோ எடுக்கும் முடிவும் படத்திற்கு பெரிய பலம்.

நடிகர்களின் பங்களிப்பு

அமைதியான ஜீவானந்தமாகவும், அதிரடியான கதிரேசனாகவும் தீனி போடும் இரட்டை வேடங்கள் விஜய்க்கு. ஜீவானந்தம் நடிப்பில் மிரட்ட, வில்லாதி வில்லன் கதிரேசன் டான்ஸ், ஃபைட், ஸ்டைல் என மத்த ஏரியாக்களில் புகுந்து விளையாடியிருக்கிறார். விஜய்க்கு வயதாக வயதாக அழகும் கூடிக் கொண்டே போகிறது. சுத்திப் போடுங்க பாஸ்!

மூன்று பாடல்களுக்கு விஜய்யுடன் நடனம் ஆடும் வாய்ப்பு சமந்தாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. நன்றாகவே ஆடியிருக்கிறார். சதீஷிற்கு காமெடி செய்யும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. எந்த இடத்திலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்கவே முடியவில்லை. அழகான வில்லன் நீல் நிதின் முகேஷ், தமிழுக்கு நல்ல வரவு. அடுத்தடுத்த படங்களிலும் இவரைப் பார்க்கும் வாய்ப்பு வரும் அளவுக்கு தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

பலம்
1. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய விஷயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை.
2. விஜய்யின் டான்ஸ், ஃபைட்!
3. அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும்.

பலவீனம்
1. கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை.
2. சதீஷின் காமெடிகள் பெரிதாக கை கொடுக்காதது.
3. கதாநாயகியின் பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பு.
4. லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்...

இந்தக் கதைக்கு ‘கத்தி’ என்ற பெயரோ, கதாநாயகியோ, ஹீரோவுடன் சுற்றிக் கொண்டேயிருக்கும் காமெடியனோ எதுவுமே தேவையில்லை. ஆனால், விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக அதை கதையில் திணித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் இப்படம் ஒரு முழுமையான முருகதாஸ் படமாகவும் இல்லை.... விஜய்யின் வழக்கமான பொழுதுபோக்குப் படமாகவும் இல்லை. ‘கத்தி’ சொல்ல வந்த விஷயம் வரவேற்கப்பட வேண்டியதுதான்... ஆனால், அதை சொல்லியவிதம்தான் மனதில் ஆழமாகப் பதியவில்லை.

ஒரு வரி பஞ்ச்: இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

ரேட்டிங்: 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;