தியேட்டர்கள் மீது தாக்குதல்... ‘கத்தி’ ரிலீஸாகுமா?

தியேட்டர்கள் மீது தாக்குதல்... ‘கத்தி’ ரிலீஸாகுமா?

செய்திகள் 21-Oct-2014 9:04 AM IST Chandru கருத்துக்கள்

நாளை தீபாவளித் திருநாள். தங்கள் அபிமான ஹீரோவின் படத்திற்காக தவம் கிடக்கிறார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். நேரம் நெருங்க நெருங்க அறிவித்தபடி ‘கத்தி’ ரிலீஸாவதில் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக ‘கத்தி’ எதிர்பாளர்களுடனும், தியேட்டர் அதிபர்களுடனும் பட ரிலீஸ் குறித்து தயாரிப்புத் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட ‘கத்தி’ பட பத்திரிகை விளம்பர போஸ்டரில் (இன்று அது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது) தயாரிப்பு நிறவனங்களின் பெயர்களும், தயாரிப்பாளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், படம் கண்டிப்பாக ரிலீஸாகும் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று இரவு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு படம் கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீஸாகும் என இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இரவு 10.23 மணிக்கு ‘‘கத்தி ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை... அக்டோபர் 22ஆம் தேதி உலகமெங்கும் ‘கத்தி’ வெளியாகும்!’’ என ட்வீட் செய்திருந்தார். எனவே நேற்று இரவு 12.00 மணிக்குப் பிறகு ரிசர்வேஷன் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், திடீரென மர்ம நபர்கள் சிலர் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்திச் சென்றது ‘கத்தி’ ரிலீஸை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. குறிப்பாக சென்னை சத்யம் திரையரங்கத்தின் வெளிப்புற கண்ணாடி சுவர்களை தாக்கி உடைத்திருக்கிறார்கள். அதேபோல் உட்லண்ட்ஸ், உதயம், தேவி போன்ற தியேட்டர்கள் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு, தாக்குதல் நடத்தியது யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனராம். கூடவே, ஒரு சில தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்த தாக்குதல்கள் நடந்தபிறகு, ‘கத்தி’ டீமிலிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் குறித்து, தான் செய்திருந்த ட்வீட்டையும் தற்போது நீக்கியுள்ளார். மேலும் இன்று சென்னை நகரில் எங்கும் ‘கத்தி’ பட ரிலீஸ் போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. ‘கத்தி’யோடு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘பூஜை’ படத்திற்கான எல்லா ரிலீஸ் வேலைகளும் சுமூகமான முறையில் போய்க்கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், ‘கத்தி’ குறித்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, ரிசர்வேஷன் தொடங்குமா என்பது தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;