‘கத்தி’ டிரைலர் விமர்சனம்

‘கத்தி’ டிரைலர் விமர்சனம்

விமர்சனம் 19-Oct-2014 7:03 PM IST Top 10 கருத்துக்கள்

பல நாட்கள் காத்திருந்து காத்திருந்து ஒரு வழியாக ரிலீ ஸாகிவிட்டது ‘கத்தி’ டிரைலர். ‘இளையதளபதி’ ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கும் தீனி போட்டிருக்கிறதா இந்த 1 நிமிட 36 வினாடிகள் கொண்ட டிரைலர்?

‘கத்தி’ ஃபர்ஸ்ட்லுக் டீஸரின் முதல் ஷாட்டையே இந்த டிரைலரிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த ஷாட்டில் ‘மாஸ்’ விஜய்யின் என்ட்ரி ஆகி கன்னத்தில் கை வைத்து நெட்டி முறிக்கிறார். அது அப்படியே ‘துப்பாக்கி’ படத்தில் ஜெகதீஷ் கேரக்டரின் மேனரிஸம் போல் உள்ளது. அதேபோல் இந்த டிரைலரின் 55 வினாடி முதல் 1.05 வினாடி வரை வரும் பின்னணி இசையும் ‘துப்பாக்கி’யின் தீம் மியூசிக்கை ஞாபகப்படுத்துவதுபோல் உள்ளது. ‘கத்தி’க்கும் ‘துப்பாக்கி’க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கே வெளிச்சம்.

டீஸரில் விஜய்யைத் தவிர வேறு யாருடைய காட்சியும் இடம்பெறவில்லை. இந்த டிரைலரில் சமந்தாவின் என்ட்ரி, சதீஷின் என்ட்ரியோடு வில்லன் நீல் நிதின் முகேஷின் என்ட்ரியும் வருகிறது. ‘‘கத்திங்கிற ‘கதிரேசன்’ வில்லாதி வில்லன்’’ என வில்லன் நீல் நிதின், ‘கதிரேசன்’ கேரக்டரின் குணாதிசயத்தை வசனமாக பேசுகிறார்.

‘கத்தி’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், டீஸரிலே, டிரைலரிலோ, இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலோ... எதிலுமே இரண்டு விஜய்யும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சியே இடம்பெறவில்லை. இதனால் இப்படத்தில் விஜய், ‘அஞ்சான்’ சூர்யா போன்று இரண்டு கேரக்டர் பெயர்களில்தான் வருகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதேபோல், இந்த டிரைலரில் ‘கதிரேசன்’ என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது... ஆனால், ஜீவனாந்தம் குறித்த எந்த வசனமும் இடம்பெறவில்லை. மேலும் ‘தீபாவளி வெளியீடு’ குறித்த வாசகமும் இடம் பெறாதது சிறிது ஏமாற்றமே!

டீஸரில் கதை குறித்த எதுவும் தெரிய வராதபோதும், இந்த டிரைலரில் ‘கத்தி’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. கார்பொரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் கிராமத்தை காப்பதற்காக போராடுபவராகவே விஜய் இதில் நடித்திருக்கிறார். குறிப்பாக.... ‘‘கார்ப்ரேட்ங்கிறது ஒரு பெரிய சிலந்தி வலை... அதுல மாட்டிருக்கிற ஒரு சின்ன பூச்சிதான் உன் கிராமம்!’’ என வில்லன் பேசும் வசனமும், ‘‘அரிசி, பருப்பு, காய்கறி, கொத்திமல்லி எல்லாமே கிராமத்திலிருந்து வரணும்... ஆனா ஒரு கிராமத்தான் செத்தான்னா மூக்க மூடிக்குவாங்களா...? லோக்கல் சேனல்ல இருந்து நேஷனல் சேனல் வரைக்கும் இப்ப எப்டி வராங்கன்னு பாருங்க’’ என விஜய் கோபமாக பேசும் காட்சிகளையும் பார்கும்போது ‘கத்தி’ படத்தில் சமூக பிரச்சனையை கையில் எடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது.

மொத்தத்தில் ‘கத்தி’ டிரைலரின் ரன்னிங் டைம் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருப்பதாலோ என்னவோ, சதீஷின் காமெடிகளோ, வேறு பாடல்கள் காட்சிகளோ எதுவும் இடம் பெறவில்லை. ஆனால், படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த டிரைலர் ஏற்படுத்தியிருப்பது உண்மை!

‘கத்தி’.... சஸ்பென்ஸ் சரவெடி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;