25 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் 3 தமிழ் படங்கள்!

25 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் 3 தமிழ் படங்கள்!

செய்திகள் 17-Oct-2014 12:40 PM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கைந்து படங்கள் ரிலீஸாகும் இன்றைய சூழ்நிலையில், ஒரு படம் ஒரு வாரம் ஓடினாலே போதும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற நிலைமைதான் தற்போதைய கோலிவுட்டில் நிலவி வருகிறது. அதிலும் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஆனால், இதில் ஒரு படம்கூட அடுத்த வாரத்தைகூட எட்டிப்பிடிக்க முடியாமல் போனதுதான் சோகம். இது ஒருபுறமிருக்க செப்டம்பர் 19ஆம் தேதி வெளியான ‘அரண்மனை’ படமும், 26ஆம் தேதி வெளியான ‘மெட்ராஸ்’, ‘ஜீவா’ படங்களும் இன்னமும் திரையரங்குகளை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

ஆம்... சுந்தர்.சி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை ஆக்ரமிப்பார்கள். அதிலும் அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் ‘அரண்மனை’ பேய்ப்படம் என்பதால் இன்னும் எகிறியது எதிர்பார்ப்பது. கூடவே இளைஞர்களைக் கவர ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, ஆன்ட்ரியா என மூன்று கிளாமர் குயின்களை களமிறங்கியிருக்கிறார் சுந்தர்.சி. தவிர சந்தானமும் தன் பங்கிற்கு சரவெடி காமெடிகளை கொளுத்திப்போட படம் வெளிவந்ததும் மொத்த கும்பலும் ‘அரண்மனை’யைப் பார்க்க ஓடி ஓடி வந்தது. படம் குறித்து விமர்சனங்கள் அப்படி இப்படியிருந்தாலும், ரசிகர்களின் கூட்டமும் கொஞ்சமும் குறையவில்லை. கிட்டத்தட்ட 30 நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘அரண்மனை’.

‘அட்டகத்தி’ ரஞ்சித்தின் இயக்கம், கதையை நம்பி களமிறங்கிய கார்த்தி, வடசென்னையின் வாழ்க்கை, சந்தோஷின் மயக்கும் இசை என ‘மெட்ராஸ்’ படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிய, தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இப்படம். இதோடு வெளிவந்த சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்திற்கும் நல்ல ரிப்போர்ட்தான். படம் பி,சி சென்டர்களில் சுமாராக ஓடினாலும் ‘ஏ’ சென்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிக்கெட் தேர்வுமுறையின் முறைகேடுகளை சுசீந்திரன் தோலுரித்த விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்ததால், இப்படமும் நான்காவது வாரமாக தியேட்டரில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த வாரம் தீபாவளி வெளியீடாக ‘கத்தி’, ‘பூஜை’ போன்ற பெரிய படங்கள் வெளியாவதால், இந்த வெள்ளிக்கிழமை எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை. இதனால் அக்டோபர் 21ஆம் தேதி வரை மேற்கண்ட படங்களே தியேட்டரில் இருக்கும். தொடர்ந்து 25 நாட்களாக 3 படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது இந்த வருடத்தில் இதுவே முதல்முறை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;