73ல் அடியெடுத்து வைக்கும் பாலிவுட்டின் நிரந்தர சூப்பர்ஸ்டார்!

73ல் அடியெடுத்து வைக்கும் பாலிவுட்டின் நிரந்தர சூப்பர்ஸ்டார்!

கட்டுரை 11-Oct-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘பாலிவுட் சூப்பர்ஸ்டார்’ அமிதாப் பச்சனுக்கு இன்று பிறந்தநாள். 1942ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்த அமிதாப், 1969ஆம் வருடம் தேசிய விருது பெற்ற ‘புவன் ஷோம்’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதற்கடுத்து சில படங்கள் வெளிவந்தாலும் எதுவும் அமிதாப்பிற்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லை. 1973ஆம் ஆண்டு பிரகாஷ் மேரா இயக்கத்தில் வெளிவந்த ‘ஸன்ஜீர்’ ஹிந்திப் படத்தில் இன்ஸ்பெக்டர் விஜய் கண்ணாவாக நடித்தார் அமிதாப் பச்சன். இந்தப் படம் அமிதாப்பின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதோடு அந்த வருடத்தில் அதிக வசூல் குவித்த படமாகவும் ‘ஸன்ஜீர்’ மாறியது. 1977ஆம் ஆண்டு அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் அமிதாப் நடித்த ‘அதாலத்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு முதல் ‘ஃபிலிம் ஃபேர்’ விருது கிடைத்தது.

சினிமாவில் மளமளவென மேலேறிக் கொண்டிருந்த அமிதாப், 1984ஆம் வருடம் சினிமாவிற்கு தற்காலி ஓய்வு கொடுத்துவிட்டு, தனது நண்பர் ராஜீவ் காந்தியுடன் அரசியலில் களமிறங்கினார். பிறகு 1988ஆம் வருடம் ‘ஷாஹென்ஷா’ படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டிற்குத் திரும்பினார். பின்னர் 1996ஆம் வருடம் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை முதலீடாக வைத்து ‘அமிதாப் பச்சன் ஃபிலிம் கார்பொரேஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பாக ‘தேரே மேரே சப்னே’ படத்தில் சிம்ரனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் அமிதாப். தமிழில் விக்ரம், அஜித்தை வைத்து ‘உல்லாசம்’ படத்தையும் இவரது ‘ஏபிஎஃப்சி’ நிறுவனமே தயாரித்தது.

பாலிவுட்டின் ‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்ற அமிதாப்பின் ஹீரோ பயணம் 1999ஆம் ஆண்டே முடிவுக்கு வந்தது. ஆனால் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் தான் எப்பவும் ‘சூப்பர்ஸ்டார்’தான் என்பதை நிரூபித்தார் அமிதாப். இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகு அவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது எனலாம். ‘மொஹபத்தீன்’, ‘கபி குஷி கபி காம்’, ‘காக்கி’, ‘பிளாக்’ என அவர் வித்தியாசமான வேடங்களில் நடித்த படங்கள் பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீனி கம்’ படத்தில் அமிதாப்பின் நடிப்பு இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அதேபோல் 2008ல் வெளிவந்த ‘பா’ படத்தில் தன் மகன் அபிஷேக் பச்சனுக்கு மகனாக நடித்து இளையதலைமுறை நடிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

தென்னகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த இந்திப்படங்களில் பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்துதான். தமிழில் சூப்பர்ஸ்டாராக நடித்துக்கொண்டே இந்தியில் ஏன் இப்படி இரண்டு, மூன்று பேரில் ஒருவராக நடிக்கிறீர்கள் என கேட்டபோது, “இந்தியில் அமிதாப் பச்சன் ஒருவருக்குத்தான் (அந்த சமயத்தில்) தனி ஹீரோவா நடிச்சா டிஸ்ட்ரிபியூட்டர் வர்றாங்க. மத்தவங்க படம்னா கூட நடிக்கிறது யாருன்னு கேட்குறாங்க.. இதுதான் காரணம்” என்றாராம். இதைவிட அமிதாப்பை பற்றி சொல்வதற்கு வேறு என்ன வேண்டும்?

தனது 73வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அமிதாப் இப்போதுகூட ‘வெல்கம் பேக்’, ‘பிக்கு’, ‘டூ’ என 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அமிதாப்பிற்குப் பிறகு ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் என பல ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்திகள்’ பாலிவுட்டில் அடியெத்து வைத்திருந்தாலும் ‘பாலிவுட்டின் நிரந்தர சூப்பர்ஸ்டார்’ அமிதாப் மட்டுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;