அன்னபெல் - ஹாலிவுட் விமர்சனம்

பேய்ப் படம் அல்ல.... பொம்மை படம்!

விமர்சனம் 10-Oct-2014 5:20 PM IST Top 10 கருத்துக்கள்

நீண்டநாட்கள் கழித்து ‘ஹாரர்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கடந்த வருடம் வெளிவந்த ஹாலிவுட் ஹாரர் படமான ‘கான்ஜூரிங்’. தற்போது அப்படக் கதையின் முந்தைய காலகட்டத்தில் பயணிக்கும் கதையோடு வெளிவந்திருக்கிறது அதன் இரண்டாம் பாகமான ‘அன்னபெல்’. தியேட்டருக்கு வந்த ரசிகர்களை ‘போற போக்கில் ஒரு காட்டு’ காட்டிய ‘கான்ஜூரிங்’கின் பீதியை இந்த ‘அன்னபெல்’லும் ஏற்படுத்தியிருக்கிறதா?

கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி மியாவுக்கு (அன்னபெல் வேலிஸ்) அன்புப் பரிசு ஒன்றை வாங்கித் தர நினைக்கிறான் ஜான் (வார்டு ஹார்டன்). இயற்கையாகவே பொம்மைகளின் மீது அதிக ஆசை கொண்ட மியாவுக்கு, பெரிய ‘அன்னபெல்’ பொம்மை ஒன்றை அவன் வாங்கித் தருகிறான். அது வீட்டிற்குள் நுழைந்த நேரம், அன்றிரவு பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கும் ஒரு சைக்கோ தம்பதியால் ஜானும், மியாவும் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அதோடு அந்த அன்னபெல் பொம்மையையும் தூக்கிக் கொண்டு வேறொரு ரூமிற்குள் நுழைகிறாள் அவர்களில் ஒரு பெண். சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் போலீஸாரால் அவர்கள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு ஜானும், மியாவும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எல்லாம் சரியாகி மீண்டும் வீடு திரும்பும் மியாவுக்கு, அங்கு ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது தோன்றுகிறது. அந்த அன்னபெல் பொம்மை காரணமாக இருக்கலாமோ என மியா நினைக்க, அதனால் அந்த பொம்மையை வெளியில் தூக்கி எறிகிறான் ஜான். அதன் பின்னரும் அடுத்தடுத்து சில மர்மமான சம்பவங்கள் நடக்க, மியா குழந்தை பெற்ற கையோடு வேறொரு வீட்டிற்கு மாறுகிறார்கள். அந்த வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களோடு அந்த அன்னபெல் பொம்மையும் மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறது. இதன் பிறகு நடக்கும் பரபர சம்பவங்களே ‘அன்னபெல்’ படத்தின் க்ளைமேக்ஸ்!

‘கான்ஜூரிங்’கின் படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் இந்த ‘அன்னபெல்’லுக்கு உண்மையிலேயே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பே இப்படத்திற்கு ‘மைனஸா’கவும் மாறிவிட்டது. தமிழில் ‘பீட்சா’ கொடுத்த வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான ‘வில்லா’வுக்கு எப்படி பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு, அதனாலேயே அந்தப் படம் தோல்வியடைந்ததோ, அதேபோன்ற ஒரு நிலையைத்தான் இந்த ‘அன்னபெல்’ திரைப்படமும் சந்தித்திருக்கிறது.

படத்தின் முதல் 1 மணி நேரம் ரொம்பவும் மெதுவாக நகர்கிறது. அதோடு, ‘இதோ வரப்போகிறது...’ ‘அதோ வரப்போகிறது’ என்கிற ரீதியில் பின்னணி இசையையும், கேமரா கோணங்களையும் காட்டிவிட்டு ‘சப்’பென்று ‘சைலன்ஸா’க்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜான் ஆர்.லியோனெட்டி. கடைசி அரை மணி நேரத்தில்தான் ரசிகர்களை பயமுறுத்தவே ஆரம்பிக்கிறது ‘அன்னபெல்’. இருந்தாலும், சதை பிய்ந்து தொங்கும் கோரமான முகத்தையோ, ரத்தத்தைக் குடிப்பது போன்ற காட்சிகளையோ வைக்காமல், காட்சிகளின் வழியேயும், பின்னணி இசை மூலமும் ரசிகர்களை பயமுறுத்த முயன்றதற்காக இயக்குனரை பாராட்டலாம். அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

‘கான்ஜூரிங்’ வெற்றிக்குக் காரணமே... எந்த நொடியில் எது வந்து தாக்குமோ என்ற பயத்தை ரசிகர்களுக்கு உண்டாக்கியதிலும், எந்த கேரக்டருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்பை ஏற்படுத்திலும்தான் இருந்தது. ஆனால், இந்த ‘அன்னபெல்’லில் அது சுத்தமாக மிஸ்ஸிங். ‘எதையாவது காட்டி பயமுறுத்துங்கப்பா...’ என ரசிகர்களே தியேட்டர்களில் கெஞ்சும் அளவுக்கு ரொம்பவும் பொறுமையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘அன்னபெல்’ பேய்ப் படம் அல்ல.... பொம்மை படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;