வெண்நிலா வீடு - விமர்சனம்

சீரியஸ் வீடு!

விமர்சனம் 10-Oct-2014 12:38 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஆதர்ஷ் ஸ்டுடியோ
இயக்கம்: வெற்றி மகாலிங்கம்
நடிப்பு : ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி
இசை : தன்ராஜ் மாணிக்கம்
ஒளிப்பதிவு : டி.கண்ணன்
எடிட்டிங் : சாபு ஜோசப்

இன்றைய ஆடம்பர வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் வாங்கி அணிய ஆசைப்படும் ‘தங்கம்’ எனும் உலோகத்தால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்ல வந்திருக்கிறது இந்த ‘வெண்நிலா வீடு’.

கதைக்களம்

தன் கணவர் ‘மிர்ச்சி’ செந்திலின் முதலாளி வீட்டு கல்யாணத்திற்கு செல்வதற்காக பக்கத்து வீட்டு தோழியிடம் தங்க நகைகளை இரவல் வாங்கி அணிந்து செல்கிறார் விஜயலட்சுமி. திருமணம் முடிந்து திரும்புகையில் அந்த நகைகள் களவாடப்படுகின்றன. இதனால்... கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் மதிப்புடைய அந்த நகைகளை திட்டமிட்டு களவாடிவிட்டார்கள் என்ற பழி செந்தில், விஜயலட்சுமி மீது விழுகிறது. இந்த இக்கட்டான சூழலுக்குப் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள்தான் ‘வெண்நிலா வீடு’!

படம் பற்றிய அலசல்

கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து வசிக்கும் ஒரு நடுத்தர குடுமபத்தினரின் வாழக்கைப் போராட்டங்களை யதார்த்தமாக சித்தரித்திருக்கிறது இப்படம். அதில் சென்னையின் கந்துவட்டி கலாச்சாரத்தையும், மொபைல் ஃபோன் மூலம் குடும்ப பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளையும் கலந்து ஒரு ரசிக்கக்கூடிய படமாகக் கொடுத்திருக்கிறார் வெற்றி மகாலிங்கம். ‘இப்படம் நடுத்தர குடும்பங்களுக்கு சமர்ப்பணம்’ என்ற வாசகத்தோடு படத்தை முடித்திருக்கும் இயக்குனர், தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார். இருந்தாலும்... கதைக்கு சம்பந்தமேயில்லாமல் வரும் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கிருஷ்ணா ஆகியோர் ஆடும் அந்த பாட்டை தவிர்த்திருக்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

‘மிர்ச்சி’ செந்தில் தன் இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். ‘‘இருக்கிற நிலத்தை இப்படி கூறுபோட்டு வித்தா யார் சோறு போடுவா?’’ என்று உணர்ச்சிவசப்படும் போதும், கந்துவட்டி காரரை பழிவாங்கும் இடத்திலும் செந்திலின் நடிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்! பொறுப்புள்ள மனைவியாக, ஆசைகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழும் ஒரு கிராமத்து அப்பாவி பெண்ணாக வரும் விஜயலட்சுமி நிச்சயம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பார். கந்துவட்டிக்காரராக ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன் மிரட்டியிருக்கிறார். கதைக்கேற்ற சரியான வில்லன்! ப்ளாக் பாண்டி சில இடங்களில் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் படத்தின் தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார்கள்.

பலம்

1. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதையும், போராடிக்காமல் படம் பார்க்க வைத்த திரைக்கதையும்.
2. ஐந்து கோவிலானின் வசனங்களும், கிராமத்து காட்சிகளும்.
3. யதார்த்தமாக அமைந்துள்ள நடிகர்களின் நடிப்பு

பலவீனம்

1. ஹீரோ, ஹீரோயினின் கிராமத்து ஃப்ளாஷ்பேக் காட்சிகள்.
2. பாடல்களும், பின்னணி இசையும்.
3. முழுப்படமும் ‘கனத்த சோக’த்துடனே நகர்வது.

மொத்தத்தில்...

தங்க மோகத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களுக்கு பாடம் புகட்டுவதுபோல் சொல்லியிருக்கும் ‘வெண்நிலா வீட்’டில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருந்தால் பெரிய அளவில் கவர்ந்திருக்கும்.

ஒருவரி பஞ்ச் : சீரியஸ் வீடு!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;