கடைசி 3 மாதங்களில் ரிலீஸாகவிருக்கும் பெரிய படங்கள்!

கடைசி 3 மாதங்களில் ரிலீஸாகவிருக்கும் பெரிய படங்கள்!

கட்டுரை 4-Oct-2014 11:11 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் சில முக்கியப் படங்கள் இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்களில் வெளியாகவிருக்கின்றன. ‘சேட்டை’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையில் (அக்டோபர் 17) எந்த பெரிய படங்களும் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால் அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களுடன் வேறு சில சின்ன படங்களும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ‘கத்தி’யும், ‘பூஜை’யும் அனைத்து திரையரங்குகளையும் ஆக்ரமிக்கப்போவதால் தீபாவளியைத் தொடர்ந்து வரும் இரண்டு வெள்ளிக்கிழமைகளிலும் (அக் 24, 31) வேறு பெரிய படங்கள் ரிலீஸாவதும் சந்தேகம்தான்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘உத்தமவில்லன்’ வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஷங்கர், விக்ரமின் ‘ஐ’ படம் நவம்பர் 14ஆம் தேதியே வெளியாகும் என்று கூறுகிறார்கள். பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால், ‘கத்தி’, ‘பூஜை’, ‘ஐ’ ஆகிய மூன்று படங்களுக்கும் தியேட்டர் பிரிக்கப்படும்போது ‘ஐ’க்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என்கிறார்கள். அதோடு இப்படத்திற்கான கடைசி கட்ட சிஜி வேலைகளும் இன்னும் மீதமிருக்கின்றனவாம்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் சிம்புவின் ‘வாலு’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியிருக்கிறதாம். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் என சூப்பர் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘வாலு’ படம் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகுமாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படத்தை ஏற்கெனவே அறிவித்தபடி ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றனவாம். ஆனால் இன்னமும் வேலைகள் நிறைய இருப்பதால் திட்டமிட்டபடி குறித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற பதட்டமும் இருக்கிறதாம். ஒருவேளை டிசம்பர் 12ல் ‘லிங்கா’ வெளியாகவில்லை என்றால், 2015 பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என்கிறார்கள். அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதுபோல் டிசம்பர் மாதம் ‘தல 55’ படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டிசம்பர் தவறினால், ‘லிங்கா’வுடன் இணைந்து இப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து கமலின் ‘விஸ்வரூபம் 2’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’, ‘லூசியா’ ரீமேக்கான சித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’, பிரபுசாலமன் இயக்கிவரும் ‘கயல்’, சிவகார்த்திகேயனின் ‘டாணா’ போன்ற படங்களும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;