யான் விமர்சனம்

சறுக்கல்!

விமர்சனம் 2-Oct-2014 1:58 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்
இயக்கம் : ரவி கே.சந்திரன்
நடிப்பு : ஜீவா, துளசி நாயர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, கருணாகரன்
ஒளிப்பதிவு : மனுஷ் நந்தன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத்

ஒளிப்பதிவாளர்களான ஜீவா, கே.வி.ஆனந்த், சந்தோஷ் சிவன், வேல்ராஜ் வரிசையில் இயக்குனராகியிருக்கிறார் ரவி கே.சந்திரன். ‘யான்’ படம் என்ன சொல்கிறது?

கதைக்களம்

காதலுக்காக வேலைக்குச் செல்ல நினைக்கும் ஜீவா மும்பையிலிருந்து பஸிலிஸ்தானுக்குச் செல்கிறார். அங்கே... ஏர்போர்ட்டில் வைத்து அந்த நாட்டு போலீஸாரால் போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறார். டிராவல் ஏஜென்ட்டால் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் ஜீவா, அந்த சிறையிலிருந்து விடுதலையாகி இந்தியாவிற்கு செல்லும் தம்பி ராமையா மூலம் தன் காதலி துளசிக்கு நடந்த விவரங்களை கடிதம் எழுதி அனுப்புகிறார். ஜீவாவைக் காப்பாற்ற பஸிலிஸ்தானுக்கு வருகிறார் துளசி. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘யான்’!

படம் பற்றிய அலசல்

மேலே சொல்லப்பட்ட கதையைப் படித்ததும், ‘‘காதலுக்காகதான் ஹீரோ வேலைக்குப் போறாரா? இல்லைனா வேலைக்கே போக மாட்டாரா? மும்பையிலகூட இல்லாத அளவுக்கு பஸிலிஸ்தான்ல அவருக்கு அப்படி என்ன வேலை? வழக்கமாக ஹீரோயினைக் காப்பாத்துறதுக்கு ஹீரோதானே போவார்... இதென்ன புதுசா இருக்கு?’’ என அடுக்கடுக்காக உங்களுக்கு கேள்விகள் கேட்கத் தோன்றும். படம் பார்த்த ரசிகர்களுக்கும் இதேபோன்ற கேள்விகளைத்தான் படம் நெடுக ஏற்படுத்தியிருக்கிறார் ‘யான்’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் ரவி கே.சந்திரன்.

முதல் பாதி முழுக்க கதைக்கு சம்பந்தமேயில்லாமல் நகர்ந்து, இடைவேளையின்போது ஒரு ‘திடுக்’ திருப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதன்பிறகு இரண்டாம்பாதியை இழுத்தடித்து க்ளைமேக்ஸிற்கு முன்பு மீண்டும் ஒரு திருப்பம்! கடைசியில் மொத்த லாஜிக்கையும் பஸிலிஸ்தான் பாலைவனத்துக்குள் குழிதோண்டி புதைத்துவிட்டு ‘சுபம்’ போடுகிறார்கள். பரபரப்பான க்ளைமேக்ஸில் நடுப்பாலைவனத்தில் முள்வேலி ஒன்றைப் போட்டுவிட்டு, அதில் ‘பார்டர்’ என்ற போர்டை தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைத் திரையில் பார்த்ததும் மொத்த தியேட்டரும் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இதுகூட பரவாயில்லை... மும்பையில்தான் எங்கு பார்த்தாலும் தமிழ் பேசுகிறார்கள் என்றால்... பஸிலிஸ்தானிலும் எல்லோரும் தமிழிலேயே பேசுகிறார்கள்!

ஒளிப்பதிவு மட்டுமே படம் பார்க்கும் ஆவலை கொஞ்சமும் குறைக்காமல் பார்த்துக் கொள்வதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. ஹாரிஸின் பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போல் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ஆனால், படத்தில் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை. ஒரு வரிக் கதையை கையில் வைத்துக் கொண்டு, அதை இரண்டரை மணி நேர சுவாரஸ்ய படமாகத் தருவதில் சறுக்கியிருக்கிறது ‘யான்’.

நடிகர்களின் பங்களிப்பு

ஜீவா பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போன்று அழகாக இருக்கிறார். சண்டை, நடனம், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் அதே கல கல ஜீவாதான். குறிப்பாக, தன் காதலியின் நண்பனிடம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்...’ எனும் இடம் தியேட்டரில் சிரிப்பலை! துளசி நாயருக்கு அதிக காட்சிகளில் தோன்றும் அளவுக்கு படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோருக்கு சீரியஸ் கேரக்டர். ஆனால் சிரிப்பை வரவழைத்திருக்கிறது! மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்துபோகிறார் ஜெயப்பிரகாஷ்.

பலம்

1. அழகான படப்பிடிப்புத் தளங்களும், அதை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய ஒளிப்பதிவும்.

பலவீனம்

1. ஆக்ஷன் த்ரில்லருக்குரிய எந்த பரபரப்பும் இல்லாத திரைக்கதையும், இயக்கமும்.
2. லாஜிக் ஓட்டைகள்
3. சம்பந்தமேயில்லாமல் பாடல்களை இடையிடைய சேர்த்திருப்பது.
4. அபத்தமான க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்...

‘யான்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ரவி கே.சந்திரன், இப்படத்தின் ஒளிப்பதிவாளரை திறம்பட வேலை வாங்கியிருக்கிறார்!

ஒரு வரி பஞ்ச் : தலைப்புக்கு என்ன அர்த்தம்?

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;