‘மெட்ராஸ்’ - விமர்சனம்

யதார்த்த சினிமா பட்டியலில் இனி ‘மெட்ராஸு’ம் ஒரு முக்கிய அட்ரஸு!

விமர்சனம் 26-Sep-2014 6:00 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்
இயக்கம் : பா.ரஞ்சித்
நடிப்பு : கார்த்தி, கேத்ரின் தெரஸா, கலையரசன், நந்தகுமார்
ஒளிப்பதிவு : ஜி.முரளி
இசை : சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங் : பிரவீன்.கே.எல்.

‘அட்டகத்தி’ மூலம் அறிமுகமான பா.ரஞ்சித், வடசென்னையின் லோக்கல் அரசியலை மையமாக வைத்து ‘மெட்ராஸ்’ தந்திருக்கிறார்.

கதைக்களம்

ஒரு பெரிய சுவரில் விளம்பரம் எழுதுவதற்காக இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகார பிரச்சனைகளும், அதற்காக காவு கொடுக்கப்படும் மனித உயிர்களுமே ‘மெட்ராஸ்’ படத்தின் மையக்கதை. அதில் வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை, காளி (கார்த்தி), அன்பு (கலையரசன்) எனும் இரண்டு இணைபிரியாத நண்பர்களின் நட்பு, காளிக்கும் கலையரசிக்கும் (கேத்ரின் தெரஸா) உண்டாகும் காதல், அரசியல்வாதிகளின் நம்பிக்கை துரோகம், பலிக்குப் பலி வாங்கத் துடிக்கும் வன்மம், ஏரியாவில் அதிகாரத்தை செலுத்த நினைக்கும் ஒருவனின் வெறி என ‘மெட்ராஸ்’ படம் ஒரு பெரிய வாழ்க்கையை காட்டியிருக்கிறது.

படம் பற்றிய அலசல்

ஒரு படத்திற்கு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது. அந்தளவுக்கு இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் ‘அட்டகத்தி’ ரஞ்சித். சமீபகாலத்தில் வடசென்னை வாசிகளின் வாழ்க்கையை இவ்வளவு இயல்பாக எந்தப் படமும் காட்டவில்லை. பாஷை, நடை. உடை, அவர்களின் பொழுதுபோக்கு, விளையாட்டு, வாழ்க்கை முறை என பெரம்பூர், வியாசர்பாடி ஏரியாவுக்குள் நாமும் வாழ்ந்தது போன்ற உணர்வை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது இப்படம். அடிமட்ட அரசியலில் நடக்கும் அதிகார பிரச்சனைகளை தோலுரித்துக் காட்டியிருக்கும் இயக்குனர், வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமே அதைக் கொடுக்காமல் முதல் பாதியில் நட்பு, காதல், பாசம் என பயணிக்க வைத்து, இரண்டாம்பாதியில் தடதடக்கும் ஆக்ஷன் மூலம் அதிர வைத்திருக்கிறார். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதைப் போன்ற உணர்வு ஏற்படுவதையும், க்ளைமேக்ஸில் வேறொரு படத்தின் ஞாபகம் வந்து போவதையும் தவிர்த்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோயிஸம், பஞ்ச் டயலாக் இல்லாத இயல்பான கார்த்தி மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். ‘நான் மகான் அல்ல’ படத்திற்குப் பிறகு அவரின் நடிப்புக்கு தீனி போடும் சரியான கேரக்டர் என்று ‘காளி’யை தாராளமாக சொல்லலாம். நண்பனுக்காக மல்லுக்கட்டுவது, அம்மாவிடம் திட்டு வாங்குவது, காதலியிடம் ரொமான்ஸ் செய்வது, வெகுண்டெழுந்து எதிரிகளைப் பந்தாடுவது என அத்தனை ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வெல் ரிட்டர்ன் கார்த்தி!

கதையில் பெரிதாக வேலையில் இல்லையென்றாலும், ‘‘யாருப்பா இந்த பொண்ணு ‘எக்ஸ்பிரஷன்ஸ்’ல மிரட்டுது’’ என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கேத்ரின் தெரஸா. நடிக்கத் தெரிந்த ஒரு அழகான கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு ரெடி! சின்ன கேரக்டர்களில் நடித்து கைதட்டல்களை அள்ளிவரும் கலையரசன், இப்படத்திற்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படுவார். மனிதர் நடித்திருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ‘அன்பு’ கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு படத்தின் கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், படம் முழுக்க ஆங்காங்கே ஏதாவது ஒரு காட்சியில் மட்டும் தோன்றி, ஆனால் தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல் வாங்கிய ஒரு கேரக்டர் ‘மெட்ராஸி’ல் இருக்கிறது. அது ஜானி கேரக்டர்! மனநலம் சரியில்லாதவராக இவர் பேசும் சென்னை பாஷையும். உடல்மொழியும் க்ளாஸ்!

இதுதவிர, இப்படத்தில் மாவட்டத் தலைவராக நடித்திருப்பவர்கள், அவர்களின் அடியாட்கள், காளியின் அப்பா, அம்மா, ஆயாவாக, நண்பர்களாக நடித்திருப்பவர்கள், அன்புவின் மனைவியாக நடித்திருப்பவர், இட்லி விற்கும் பெண்மணி என இன்னும் இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பலம்

1. லோக்கல் அரசியலின் நிதர்சனத்தை, வடசென்னை வாசிகளின் இயல்பான வாழ்க்கை மூலம் கண்முன் நிறுத்தியிருக்கும் பா.ரஞ்சித்தின் கதையும் இயக்கமும்.
2. கார்த்தியின் ‘கம்பேக்’ பெர்ஃபாமென்ஸ்!
3. கதாபாத்திர வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும்.
4. பாடல், பின்னணி இசை என இரண்டு ஏரியாவிலும் உச்சம் தொட்டிருக்கும் சந்தோஷ் நாராயணின் இசை.
5. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்

1. ஒரு சில இடங்களில் மட்டும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுவது.
2. படத்தின் முக்கிய திருப்புமுனைக் காட்சி ஒன்றை முன்கூட்டியே யூகிக்க முடிந்திருப்பது.

மொத்தத்தில்...

காமெடிக்கென தனியாக டிராக் வைக்காமல், பாடலுக்காக வெளிநாட்டுக்குப் பறந்து செல்லாமல், ஹீரோயிசஸத்துக்காக பஞ்ச் டயலாக் வைக்காமலும் ஒரு பொழுதுபோக்கு ஆக்ஷன் படத்தைத் தர முடியும் என்பதை ‘மெட்ராஸ்’ காட்டியிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : யதார்த்த சினிமா பட்டியலில் இனி ‘மெட்ராஸு’ம் ஒரு முக்கிய அட்ரஸு!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;