ஜீவா - விமர்சனம்

சுவாரஸ்ய கிரிக்கெட்டின் ‘பகீர்’ பக்கம்!

விமர்சனம் 26-Sep-2014 11:23 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம், வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன்
இயக்கம் : சுசீந்திரன்
நடிப்பு : விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, சூரி, லக்ஷமன், சார்லி, மாரிமுத்து, டி.சிவா
ஒளிப்பதிவு : மதி
இசை : டி.இமான்
எடிட்டிங் : ரூபென்

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கபடி விளையாடிய இயக்குனர் சுசீந்திரன், இப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்திருக்கிறார். இந்த விளையாட்டில் சுசீந்திரன் சிக்ஸர் அடித்திருக்கிறாரா?

கதைக்களம்

சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் ஜீவாவுக்கு (விஷ்ணு) உயிர்! என்றாவது ஒருநாள் இந்திய அளவில் பேசப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்பது அவனது கனவு! இதற்காக ஏராளமான பயிற்சிகள், போட்டிகள் என்று கடுமையாக உழைக்கும் ஜீவாவின் வாழ்க்கையில் காதலும் குறுக்கிடுகிறது. கிரிக்கெட் விளையாட்டு - காதல் என்று பயணிக்கும் ஜீவாவின் லட்சியத்தில் நிறைய குறுக்கீடுகள் வருகிறது. கடைசியில் அவனது லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை விளக்குவதே ‘ஜீவா’ படம்.

படம் பற்றிய அலசல்

கிரிக்கெட்டில் ஜெயிப்பதற்கு திறமையைவிட சிபாரிசே இந்தியாவில் அவசியம் என்பதை சாட்டையடி வசனங்களுடன் சொல்லியிருக்கும் சுசீந்திரன், இம்முறையும் கைதட்டல்களை அள்ளிக் குவித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் விஷ்ணுவின் சிறு வயது கிரிக்கெட் ஆர்வம், நண்பர்களுடன் அரட்டை, ஸ்ரீதிவ்யாவின் காதல் என சாதாரணமாக பயணிக்கிறது. விஷ்ணு, ஸ்ரீதிவ்யாவின் பள்ளிக்கால காதல் காட்சிகளில் ‘ரொமான்ஸ்’ கலாட்டா! இடைவேளைக்குப் பின்பு முழுக்க முழுக்க கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

‘உன்ன மாதிரி பிள்ளைகளுக்கு படிப்புதான் சோறுபோடும். கிரிக்கெட் பணக்காரங்க விளையாட்டு... அதை மறந்துடு’ன்னு விஷ்ணுவிடம் அவரது தந்தை கூறும் காட்சியும், ‘விளையாடி தோற்றிருந்தா நான் கவலைப்படிருக்க மாட்டேன், ஆனா விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே தோத்து போயிட்டோமே’ என்று விஷ்ணு வேதனைப்படுகிற காட்சியும் இன்றைய கிரிக்கெட்டின் வெளிவராத பின்னணிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஏழைக் குடும்பத்து இளைஞன் ஜீவாவாக விஷ்ணு! இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பில் எல்லோரையும் கவர்கிறார். இயல்பாக கிரிக்கெட் விளையாட்டில் அபாரமான திறமை அவருக்கு இருப்பதால், ஜீவா கேரக்டருக்கு விஷ்ணு ஏக பொருத்தம். விஷ்ணுவின் காதலி ஜெனியாக ஸ்ரீதிவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பாவாடை, தாவணியில் வந்து கலக்கியவர் இதில் பள்ளி சீருடையில் வந்து அசத்தியிருக்கிறார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்துவிட, ‘‘சின்ன வயசுலேயிருந்து நான் அப்பா அழுததை பாரத்தது கிடையாது ஜீவா, அவர் அழுவதை என்னால பார்க்க முடியல’’ என்று விஷ்ணுவிடம் கதறும் ஒரு காட்சி போதும் ஸ்ரீதிவ்யாவின் நடிப்புக்கு மார்க் போட! விஷ்ணுவுடன் விளையாடும் சக வீரர் ரஞ்சித்தாக ‘அன்னக்கொடி’ புகழ் லக்ஷ்மண் நடித்திருக்கிறார். ரஞ்சித் டிராஃபிக்கு விளையாட தேர்வாகவில்லை என்பதை அறிந்ததும், கோபம் கொப்பளிக்க, கிரிக்கெட் கிளப்புக்கு சென்று அங்குள்ளவர்களின் முகமூடியை கிழிக்கும் லக்ஷமன், இறுதியில் எடுக்கும் முடிவு பரிதாபத்தை அள்ளுகிறது. சிரிப்புக்கு சூரி இருந்தாலும், அவ்வளவாக சிரிக்க முடியவில்லை. ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக தயாரிப்பாளர் டி.சிவா, விஷ்ணுவின் அப்பாவாக மாரிமுத்து, வளர்ப்பு தந்தையாக சார்லி என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் ‘ஜீவா’வுக்கு ஜீவன் கொடுத்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்யா ஒரு சீனில் தலைகாட்டியிருக்கிறார்.

பலம்

1. கிரிக்கெட்டின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கும் திரைக்கதை.
2. சாட்டையடி வசனங்களும், நடிகர்களின் பங்களிப்பும்
3. காட்சிகளுக்கேற்ற டி.இமானின் அருமையான பின்னணி இசை
4. பரபரப்பாக விளையாடப்படும் கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு தெளிவாகக் காட்டியிருக்கும் மதியின் ஒளிப்பதிவு

பலவீனம்

1. மெதுவாக நகரும் முதல்பாதி திரைக்கதை.
2. படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் பாடல்கள். (குறிப்பாக ‘நட்டி’ நட்ராஜின் தேவையில்லாத பாடல்).
3. யூகிக்கக்கூடிய வகையில் அமைந்த ஒரு சில காட்சிகள்.

மொத்தத்தில்...

விளையாட்டுத் துறையில் நாம் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்களை புட்டு புட்டு வைத்திருக்கும் இப்படத்தை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

ஒரு வரி பஞ்ச் : சுவாரஸ்ய கிரிக்கெட்டின் ‘பகீர்’ பக்கம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;