ஆடாம ஜெயிச்சோமடா- விமர்சனம்

காமெடி விளையாட்டு!

விமர்சனம் 20-Sep-2014 12:34 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : அப்ஷோட் ஃபிலிம்ஸ்
இயக்கம் : பத்ரி
நடிப்பு : கருணாகரன், விஜயலட்சுமி, ‘பாபி’ சிம்ஹா, கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ‘ஆடுகளம்’ நரேன்
இசை : சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு : துவாரகேஷ்
எடிட்டிங் : கே.ஜே.வெங்கட்ராமன்

கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’கை மையமாக வைத்து காமெடியாக எடுக்கப்பட்டுள்ள படம்.

கதைக்களம்

கால் டாக்சி ஓட்டும் கருணாகரன், நண்பனின் சகோதரியை காதலித்து திருமண்ம் செய்கிறார். கடன்களில் தத்தளிக்கும் கருணாகரனுக்கு சூதாட்ட புரோக்கர் பாலாஜியின் நட்பு கிடைக்கிறது. சென்னையில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் கருணாகரனின் 10 லட்சம் கடனை அடைக்க பாலாஜி உதவுவதாக கூறுகிறார். இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் பாலாஜியை அழைத்து வர அந்த ஹோட்டல் அறைக்கு செல்லும் கருணாகரன், பாலாஜி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். கொலைப் பழி கருணாகரன் மீது விழுகிறது! அந்தப் பழியிலிருந்து கருணாகரன் தப்பித்தாரா, தனது 10 லட்ச கடனை அடைத்தாரா என்பதை க்ளைமேக்ஸ் விளக்குகிறது.

படம் பற்றிய அலசல்

படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் லாஜிக்கை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடுக்கப்பட்டுள்ள படம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் பத்ரி. கால் டாக்சி ஓட்டுநராக கருணாகரன், அவரது மனைவியாக விஜயலட்சுமி, கொலையைக் கண்டுபிடிக்க வரும் காமெடி போலீஸ்காரர்களாக சிம்ஹா, சேத்தன், போலீஸ் கமிஷனராக கே.எஸ்.ரவிக்குமார், சினிமா ஃபைனாசியராக ராதாரவி, தியேட்டர் ஓனராக ‘ஆடுகளம்’ நரேன் என இவர்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் சிரிப்புக்கு உத்திரவாதம். ‘கக்கூஸ் இருக்கா என்றுதானே கேட்டேன், கடன் இருக்கா என்று கேட்கவில்லையே’, ’‘விஸ்வரூபம் படத்துல ஆஃப்கான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசுறாங்க, அப்படியிருக்க மும்பை போலீஸ் தமிழ் பேசுறதுல என்ன ஆச்சர்யம்?’’ என இதுபோன்ற நிறைய பஞ்ச் காமெடி வசனங்கள் படத்தில்! படத்தின் வசனகர்த்தா சிவாவுக்கு ஒரு சபாஷ் போடுவதோடு, பாலாஜி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை விளக்கும் க்ளைமேக்ஸ் காட்சிக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

இதுவரை சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த கருணாகரன் இப்படத்தில் ஹீரோவாக புரொமோஷன் பெற்றுள்ளார். அப்பாவி மாதிரியான கேரக்டரில் இயல்பாக நடித்து பாஸ் மார்க் வாங்குகிறார். கருணாகரனின் மனைவியாக வரும் விஜயலட்சுமிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும், தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சிம்ஹாவுக்கு மாறுபட்ட வேடம். போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரை அவர் சமாளிக்கும் காட்சிகளில் ‘ஆஹா’ என சொல்ல வைக்கிறார் சிம்ஹா. படத்தைத் தயாரித்து அதை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தியேட்டர் ஓனர் நரேன், ஃபைனான்சியர் ராதாரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் வெடிச் சிரிப்பு! எல்லோரும் அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்துள்ளனர்.

பலம்

1. அலுப்பை தாராத படத்தின் திரைக்கதையும் இயக்கமும்
2. காமெடி வசனங்கள்
3. நேர்த்தியான ஒளிப்பதிவு
4. சீன் ரோல்டனின் பின்னணி இசை

பலவீனம்

1. லாஜிக் பற்றி கவலைப்படாதது
2. பாடல்கள்

மொத்தத்தில்...

இரண்டு மணிநேரம் சிரித்தால் போதும்... லாஜிக்கைப் பற்றி எந்த கவலையுமில்லை என நினைப்பவர்களுக்கு இப்படம் உத்திரவாதம்!

ஒருவரி பஞ்ச் : காமெடி விளையாட்டு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - கருக்கு கல்லாங்கோலு பாடல் வீடியோ


;