‘அரண்மனை’ - விமர்சனம்

திகிலூட்டும் காமெடி பங்களா!

விமர்சனம் 19-Sep-2014 4:37 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : விஷன் ஐ மீடியாஸ்
இயக்கம் : சுந்தர்.சி
நடிப்பு :சுந்தர்.சி, வினய், ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, சந்தானம்
இசை : பரத்வாஜ்
ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த்

எப்பவும் சிரிக்க வைக்கும் சுந்தர்.சி, இந்தமுறை பயமுறுத்த முடிவு செய்திருக்கிறார். பலன் கிடைத்ததா?

கதைக்களம்

தங்களது பூர்வீக சொத்தான அரண்மனை ஒன்றை விற்பதற்காக வினய், ஆன்ட்ரியா, லக்ஷ்மி ராய், கோவை சரளா, மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன், சந்தானம் என பெரிய குடும்பம் ஒன்று கூடுகிறது. தன் தங்கை ஆன்ட்ரியாவிற்காக சுந்தர்.சியும் அரண்மனைக்கு வருகிறார். அரண்மனைக்குள் நுழைந்ததும் ஆன்ட்ரியாவின் உடம்புக்குள் பேயாக ஹன்சிகா புகுந்துகொள்ள அழகான அரண்மனைக்குள் அமானுஷ்யம் புகுந்து கொள்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் சுந்தர்.சி. ஹன்சிகா யார்? எதனால் அவர் இப்படி ஆன்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்திருக்கிறார்? ஆன்ட்ரியாவை அந்த பேயின் பிடியிலிருந்து சுந்தர்.சி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிப்படம்.

படம் பற்றிய அலசல்

பேய் படத்திற்கே உரிய வழக்கமான ‘டெம்ப்ளேட்’ கதையோடு, சுந்தர்.சி.யின் வழக்கமான காமெடி கலாட்டாக்களையும் சேர்த்தால் ‘அரண்மனை’ ரெடி! தன் படத்திற்கு வரும் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு, கிளுகிளுப்புக்கு ராய் லக்ஷ்மி, சென்டிமென்ட்டுக்கு ஹன்சிகா, படபடக்க வைக்க ஆன்ட்ரியா, கலகலப்புக்கு சந்தானம், கோவை சரளா அன்ட் கோ என ‘செம’ கூட்டணி அமைத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இதே ஃபார்முலாவைதான் அவர் பயன்படுத்துகிறார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ‘பொழுதுபோக்க’ வைக்கிறார். இதுதான் சுந்தர்.சியின் மேஜிக்!

பொதுவாக திகில் படங்கள் என்றால், அதில் டெக்னிக்கல் விஷயங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, சிஜி, எடிட்டிங், பின்னணி இசை ஆகியவை ‘ஆவரேஜ்’ ரகம்தான். தவிர படத்தில் எந்தப் பாடலும் ரசிக்கும்படி இல்லை. கூடவே பயமுறுத்த வேண்டிய சில காட்சிகளில் ‘ஹாலிவுட்’ பேய் படங்களும் எட்டிப் பார்த்துச் செல்கின்றன. இந்த விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ‘அரண்மனை’யின் பிரம்மாண்டம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோவாக வினய்யும், சுந்தர்.சியும் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க ஹீரோயின்களின் ராஜ்ஜியம்தான் இப்படத்தில். குறிப்பாக ஆன்ட்ரியாதான் பேயாட்டம் ஆடியிருக்கிறார். பேயாக மாறி அவர் செய்யும் அட்டூழியங்கள் அதகளம்! ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஹன்சிகா கண்கலங்க வைத்திருக்கிறார். வித்தியாசமான கிராமத்து பெண்ணாக அவர் ஏற்றிருக்கும் செல்வி வேடம் மனதில் அழுத்தமாகப் பதிகிறது. ராய் லக்ஷ்மி தன் கடமையாக சரியாகச் செய்து ‘யூத்’களின் பல்ஸை எகிற வைத்திருக்கிறார். சந்தானத்தின் காமெடிகள் படத்திற்கு பெரிய பலம். ஆனால், மனிதர் மறுபடியும் ‘டபுள் மீனிங்’ டயலாக்கை கையிலெடுத்திருப்பதுதான் கொஞ்சம் நெருடல். கோவை சரளாவுக்கு மீண்டும் ஒரு ‘காஞ்சனா’. இவர்களைத்தவிர இன்னும் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வரவும் போகவும் செய்கிறார்கள்.

பலம்

1. படத்தை கொஞ்சமும் போரடிக்க விடாத திரைக்கதையும், அதற்கு கைகொடுத்திருக்கும் காமெடிகளும்!
2. சிற்சில இடங்களில் பயமுறுத்தும் ‘திக் திக்’ காட்சிகள்.
3. சுந்தர்.சியின் இயக்கமும், நடிகர்களின் பங்களிப்பும்.

பலவீனம்

1. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் கொண்ட ‘டெம்ப்ளேட்’ கதை.
2. டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
3. இடையூறை ஏற்படுத்தும் பாடல்கள்!

மொத்தத்தில்...

சுந்தர்.சி படம் இப்படித்தான் இருக்கும், ஆனால் கண்டிப்பாக ‘டைம் பாஸ்’ செய்யலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கிருந்தால், தாராளமாக விசிட் அடிக்கலாம் இந்த ‘அரண்மனை’க்கு!

ஒரு வரி பஞ்ச்: திகிலூட்டும் காமெடி பங்களா!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;