ஆள் - விமர்சனம்

‘ஆள்’ வித்தியாசமானவன்!

விமர்சனம் 19-Sep-2014 12:47 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : சௌந்தர்யன் பிக்சர்ஸ்
இயக்கம் : ஆனந்கிருஷ்ணா
நடிப்பு : விதார்த், ஹர்த்திகா ஷெட்டி, விடியல் ராஜு
இசை: ஜோஹான்
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
எடிட்டிங் : எம்.ரமேஷ்பாரதி

2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆமீர்’ என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக்தான் இந்த ‘ஆள்’.

கதைக்களம்

சிக்கிமில் புரொபசராகப் பணிபுரியும் விதார்த், தன் குடும்பத்தைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் மர்ம நபர் ஒருவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தை மிரட்டி சில வேலைகளை செய்யச் சொல்கிறான். ‘‘அந்த மர்ம நபர் யார்? அவனுக்கு தன்னைப் பற்றிய முழு விவரங்கள் எப்படி கிடைத்தன? அவன் எதற்காக அந்த வேலைகளை செய்யச் சொல்கிறான்?’’ என்ற விஷயங்கள் தெரியவரும்போது பதறிப் போகிறார் விதார்த்! அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் ‘ஆள்’.

படம் பற்றிய அலசல்

ஜிகாத் (புனிதப்போர்) என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத செயல்களில் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது இப்படம். இதுபோன்ற படங்களில் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைக்க வேண்டியது அவசியம். ஆனால் அதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் ஆனந் கிருஷ்ணா! முஸ்லிம் இளைஞன் ஒருவன் ‘‘உங்களுக்கு ஜிகாத் பிடிக்குமா?’’ என சிக்கிமில் கேட்கும்போது, அதை அப்போது அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் விதார்த், அதன் பொருளை சென்னைக்கு வந்ததும் தெரிந்து கொள்ளும் இடம் செம சர்ப்ரைஸ்! மர்ம நபரால் மிட்டப்படும் விதார்த், என்ன செய்வதென்று தெரியாமல் நீண்டநேரம் அலைந்து கொண்டே இருக்கிறார். இதுபோன்ற நீளமான காட்சிகளில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி படத்தை இன்னும் விறுவிறுப்பாக்கியிருந்தால் ‘ஆள்’ ரசிகர்களை மிரட்டியிருப்பான்!

நடிகர்களின் பங்களிப்பு

அனைவரையும் நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவராக வரும் விதார்த்தின் நடிப்பு இயல்பு! தான் செய்யப்போகும் செயலால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து விதார்த் எடுக்கும் முடிவு ரசிகர்களை உறையச் செய்கிறது. அனைவரது மனதிலும் ஆழமாக பதியும்படி தீவிரவாத செயல்களுக்கான விளக்கங்களைச் சொல்லும் தீவிரவாத தலைவனாக நடித்திருக்கும் விடியல் ராஜுவின் நடிப்பு மிரட்டல் ரகம்! விதார்த்தின் காதலியாக வரும் ஹர்த்திகா ஷெட்டிக்கு நடிக்க வாயுப்பு குறைவாக இருந்தாலும் வந்த காட்சிகளில் பளிச்சிடுகிறார்!

பலம்:

1. பிரச்சனைக்குரிய ஒரு கதையைக் கையிலெடுத்து அதை சரியாகக் கையாண்டிருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.
2. கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் சிக்கிம் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
3. குத்துப்பாட்டு, தேவையில்லாத காமெடிகளைச் சேர்க்காமல் படத்தை 2 மணி நேரத்திற்குள்ளாகவே முடித்திருப்பது.
4. பின்னணி இசையும், சில இடங்களில் கவரும் ஒளிப்பதிவும்.

பலவீனம்:

1. முதல் பாதியிலுள்ள இழுவையான காட்சிகள்.
2. தேவையில்லாத கேரக்டர்களைக் கூட அடிக்கடி குளோஸ்-அப்பில் காட்டியிருப்பது.

மொத்தத்தில்...

எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாததுக்கு துணை போகிறவர்கள் அல்ல என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கும் இந்தப் படத்திற்கு முஸ்லிம் இன மக்களிடம் மட்டுமல்ல எல்லாதரப்பு ரசிகர்களிடம் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்.

ஒரு வரி பஞ்ச்: ‘ஆள்’ வித்தியாசமானவன்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;