ரெட்ட வாலு - விமர்சனம்

கெட்ட பையனின் உண்மைக்காதல்!

விமர்சனம் 19-Sep-2014 11:43 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : பிரணவ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : தேசிகா
நடிப்பு: அகில், சரண்யா நாக், தம்பி ராமையா, கோவை சரளா
இசை : செல்வகணேஷ்
ஒளிப்பதிவு : சிட்டிபாபு
எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்

‘கல்லூரி’, ‘மாசாணி’ போன்ற படங்களில் நடித்துள்ள அகில் நடிப்பில் ‘வாலு’ என்ற பெயரில் உருவாகி, பிறகு ‘ரெட்ட வாலு’வாக மாறி வெளிவந்திருக்கும் படம்.

கதைக்களம்:

கெட்ட பழக்கங்களைக் கொண்ட ‘வாலு’ என்று அழைக்கப்படும் அகிலை அவனது தந்தையும், அண்ணனும் சேர்ந்து சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பெரியவனாகி அங்கிருந்து வெளியே வரும் அகில், பழைய குணமுடையவனாகவே இருக்கிறான். திருட்டை தொழிலாகக் கொண்ட அவனை போலீஸ் தொடர்ந்து துரத்த, வேறொரு கிரமத்தில் தஞ்சமடைகிறான். அந்த கிராமத்தின் தலைவர் தம்பி ராமையாவின் மகள் சரண்யா நாக்கிற்கும் அகிலுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் தம்பி ராமையாவுக்கு தெரிய வர, ஊருக்கே தீர்ப்பு சொல்லும் தம்பி ராமையா தன் மகளின் காதல் விஷயத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதே பரபர க்ளைமேக்ஸ்!

படம் பற்றிய அலசல்

பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாகிறது என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குனரான தேசிகா. அதை சென்டிமென்ட், குடும்ப பாசம், காதல் ஆகியவற்றை கலந்து சொல்லியிருக்கிறார். படத்தின் இடைவேளை வரை மெல்ல நகரும் திரைக்கதை, அகிலின் உண்மை முகம் சரண்யாவுக்கும், தம்பி ராமையாவுக்கும் தெரிய வந்த பிறகு சூடு பிடிக்கிறது. களவுத் தொழிலை கைவிட்டு, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் அகில், தன் காதலி தன்னை கைவிட்டுப் போனதை அறிந்ததும் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

பாசத்துக்கும், அன்புக்கும் ஏங்கும் இளைஞனாக அகில் உணர்வுபூர்வமாக நடித்துள்ளார். தன் காதலுக்காக அப்பா தம்பி ராமையாவுடன் போராடும் காட்சிகளில் மனதில் பதிகிறார் சரண்யா நாக். பாசக்கார அப்பாவாக, ரோஷக்கார ஊர்த் தலைவராக தம்பி ராமையா அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். விபச்சார கும்பல் தலைவியாக வருகிறார் சோனா! கோவை சரளா, ‘பசங்க’ சிவகுமார், செந்தில் என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தாலும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.

பலம்:

1. நல்ல மெசேஜ் சொல்லியிருக்கும் படத்தின் கதை.
2. விறுவிறுப்பான இரண்டாம் பாதி.
3. செல்வகணேஷின் இசையும், பாடல்களும்.

பலவீனம்:

1. போரடிக்கும் முதல்பாதி திரைக்கதை.
2. நிறைய லாஜிக் மீறல்கள்
3. சிரிப்பையே வரவழைக்காத காமெடி காட்சிகள்
4. ஒளிப்பதிவில் அதிக கவனம் செலுத்தாதது.

மொத்தத்தில்...

காதல், சென்டிமென்ட், குடும்ப பாசம் என அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ள இப்படத்தின் க்ளைமேக்ஸை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால், வழக்கமான காதல் படங்களிலிருந்து இது ஒரு மாறுபட்ட படம் என்ற பெயர் கிடைக்கலாம்.

ஒருவரி பஞ்ச்: கெட்ட பையனின் உண்மைக்காதல்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;