‘கத்தி’ - இசை விமர்சனம்

‘கத்தி’ - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 18-Sep-2014 11:56 AM IST Chandru கருத்துக்கள்

ஐந்தே ஆல்பங்களில் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வளைத்துப் போட்டிருக்கும் அனிருத், முதல்முறையாக ‘இளையதளபதி’ விஜய்க்கு இசையமைத்திருக்கிறார் என்றால், அந்த ஆல்பத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பிருக்கும்? கூடவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என்ற எதிர்பார்ப்பு வேறு...? இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் ‘கத்தி’ விருந்து படைத்திருக்கிறதா?

பக்கம் வந்து...
பாடகர்கள் : அனிருத், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி


‘குருவி’ படத்தின் ‘ஹேப்பி நியூ இயர்...’ பாடலை ஞாபகப்படுத்துகிறது இப்பாடல். ஆனாலும் கேட்பதற்கு அதைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது. பாடல் முழுக்க மூச்சுவிடாமல் பாடி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி அதகளம் செய்ய, இடையிடையே அனிருத் மெலடி சுவை கொடுத்துக் கொண்டே போகிறார். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனிருத் ரசிகர்களுக்கும் இப்பாடல் புதிய அனுபவமாக இருக்கும். பார்ட்டி, ‘பப்’களில் பட்டையைக் கிளப்புவதற்கு ஏற்ற பாடல். முதல்முறை கேட்கும்போது பிடிக்காதவர்களுக்கும் இப்பாடலை திரும்பத் திரும்ப கேட்கும்போது பிடிக்கத் துவங்கிவிடும்.

பாலம்...
பாடகர்கள் : சங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன்
பாடலாசிரியர் : யுகபாரதி


கல்யாண ஊர்வலத்தில் பாடப்படும் பாடல்போல் தோன்றுகிறது. பேன்ட் வாத்தியங்கள் முழங்க, ஹிந்தி வார்த்தைகளோடு ஆரம்பிக்கும் பாடலில் சங்கர் மகாதேவனின் குரல் புகுந்ததும் புத்துணர்ச்சி பிறக்கிறது. அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீடு ஏத்தி, பாடலின் முடிவில் செம குத்து குத்தியிருக்கிறார் அனிருத். இசை மட்டுமின்றி பாடல் வரிகளும் ரசனையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றது. ஆனாலும், ஏற்கெனவே கேட்டதுபோன்ற உணர்வையும் இப்பாடல் தருகின்றது.

செல்ஃபி புள்ள...
பாடகர்கள் : விஜய், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


ஆல்பம் வெளியாவதற்கு முன்பே ‘ஹிட்’டடித்த விஜய் ரசிகர்களின் ஸ்பெஷல் பாடல். வெஸ்டர்ன் இசையையும், லோக்கல் உறுமியையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் அனிருத். கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு தியேட்டர்கள் அதிரப்போவது நிச்சயம்! குழந்தைகளுக்கும் அதிகம் பிடிக்க வாய்ப்புள்ள பாடல். விஜய்யின் வாய்ஸில் அந்த ‘உம்மா....’ சப்தம் கிறங்கடிக்கிறது. டெரா ஃபைட், செல்ஃபி, போட்டோ ஷாப், இன்ஸ்டாகிராம், ஃபில்டர் என ‘டெக்னாலஜிக்கல் கவிஞர்’ கார்க்கியின் வரிகள் பாடலுக்கு பெரிய பலம். ‘கூகுள்... கூகுள்..’, ‘வாங்கண்ணா....’ ‘கண்டாங்கி...’ வரிசையில் சூப்பர்ஹிட் ரகம் இந்த ‘செல்ஃபி புள்ள...’.

நீ யார் பெற்ற...
பாடகர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடலாசிரியர் : யுகபாரதி


விஜய்யின் கேரக்டர் பெருமையைச் சொல்லும் பாடலாக இதைப் பாடியிருக்கிறார் ‘தெய்வீகக் குரலு’க்குச் சொந்தக்காரரான ஜேசுதாஸ். வார்த்தைகளும், குரலும் கேட்பவர்களை நெகிழச் செய்யும் அளவுக்கு இசையை மிக மென்மையாக ஒலிக்கவிட்டிருக்கிறார் அனிருத். காட்சிகளோடு பார்க்கும்போதுதான் இப்பாடலின் முழு உணர்வும் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

ஆத்தி...
பாடகர்கள் : அனிருத், விஷால் தட்லானி
பாடலாசிரியர் : பா.விஜய்


ஆல்பத்தின் சூப்பர் பாடல் என்று இதை தாராளமாகச் சொல்லலாம். அனிருத்தின் ஸ்டைல் என்பதை இப்பாடலில்தான் நம்மால் முழுதாக உணர முடிகிறது. வித்தியாசமான மெலடியாக உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு விஷால் தட்லானி, அனிருத்தின் குரல்கள் புதிய ‘கலர்’ தந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் ரகம்!

இந்த 5 பாடல்களைத் தவிர்த்து ‘கத்தி தீம்’ என்ற இசையும், ‘பேட் ஐஸ்...’ என்ற இசையும் சேர்ந்து மொத்தம் 7 பாடல்களைக் கொண்டிருக்கிறது ‘கத்தி’ ஆல்பம். விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த ஆல்பம் பெரிய புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ போன்ற ஆல்பங்களைக் கேட்டு மெய்மறந்த அனிருத் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தைத் தரலாம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் பாடல்கள் படம் வெளிவந்த பிறகுதான் பெரிய வெற்றியைப் பெற்றன. இதேபோன்றதொரு மேஜிக் ‘கத்தி’யிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது.

மொத்தத்தில்... விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறார் அனிருத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;