‘ஐ’ டீஸர் விமர்சனம்

‘ஐ’ டீஸர் விமர்சனம்

கட்டுரை 16-Sep-2014 12:17 PM IST Chandru கருத்துக்கள்

ஒரே ஒரு எழுத்து மொத்த சினிமா உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கம், விக்ரமின் கடுந்தவ உழைப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒப்பற்ற ஒளிப்பதிவு, ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு என ஒவ்வொரு துறையிலும் ‘ஐ’ உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இத்தனை சிறப்பம்சம் வாய்ந்த ‘ஐ’ டீஸர் நேற்று வெளியாகி இருக்கிறது. ‘ஐ’ பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?

இப்படி ஒரு டீஸரை நிச்சயம் இந்திய சினிமா இதுவரை கண்டிருக்காது... என்ன உழைப்பு....? என்ன ஒரு மேக்அப்? இது தமிழ் சினிமாவா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ‘ஐ’ டீஸர். சிங்க முக தோற்றத்துடன் அறிமுகமாவது விக்ரமா? யாராலும் நம்ப முடியவில்லை. எத்தனை தோற்றங்கள்.... கட்டுமஸ்தான உடம்புடன் ஜிம் விக்ரம், கலர்ஃபுல் ஆடைகளுடன் மாடல் லுக் விக்ரம், உடம்பு முழுக்க தடிப்புகளுடன் பார்ப்பதற்கே அருவெறுப்பான கோர விக்ரம், சிங்கமுக தோற்றத்துடன் கம்பீர விக்ரம் என எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாரோ அவர். அத்தனையையும் சாத்தியப்படுத்தியிருப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது ஹாலிவுட் கலைஞர்களின் மேக்அப்பும், கிராபிக்ஸும்தான். நிச்சயம் இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவை வேறொரு உயரத்திற்கு ‘ஐ’ கொண்டு போகப்போவது உறுதி.

எமி ஜாக்ஸனுக்கு மாடல் அழகி வேடமாக இருக்கலாம். அவர் இந்த டீஸரில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பி.சி.யின் கேமரா கவிதை படைத்திருக்கிறது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தைக் காட்டி ரசிகர்களை பிரம்மில் ஆழ்த்தியிருக்கிறார் ஷங்கர். பாடல்களில் மீண்டும் பழைய ரஹ்மானைக் காட்டியவர், பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார்.

இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம்குமார், சந்தானம் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் இந்த டீஸரில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முக்கிய வேடமா? அல்லது வெறும் திருப்புமுனைக் காட்சிக்காக பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது முழுநீள டிரைலர் வரும்போதே தெரிய வரும். இந்த டீஸரில் பாலிவுட் நடிகர் உபன் பட்டேல் ஒரு காட்சியில் வந்துபோகிறார். அனேகமாக முக்கிய வில்லன்களில் அவரும் ஒருவராக இருக்கலாம்.

நிச்சயம் இப்படம் தொழில்நுட்ப விஷயங்களில் வேறெந்த படங்களுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு ‘ஐ’ இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரைக்கதையிலும் சுவாரஸ்யம் இருக்கும் பட்சத்தில் ‘ஐ’ தமிழ் சினிமாவின் உச்சபட்ச வசூல் செய்யும் படமாக இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;