பிரம்மாண்ட ‘ஐ’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்...

பிரம்மாண்ட ‘ஐ’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்...

செய்திகள் 16-Sep-2014 10:19 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து பிரம்மாண்டமான முறையில் தயாராகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இவ்விழாவில் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர படத்தில் பங்காற்றிய இயக்குனர் ஷங்கர், விக்ரம், எமி ஜாக்ஸன், ஏ.ஆர்.ஆர்.ரஹ்மான், மதன் கார்க்கி, கபிலன், அனிருத் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். பாடகி சின்மயியும், ‘ஜிகர்தண்டா’ புகழ் பாபி சிம்ஹாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அரங்கத்திற்குள் நுழைய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 6 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய விழா நிகழ்ச்சிகள் பிரபலங்கள் பலரும் வந்து அமர்ந்த பிறகும்கூட ஆரம்பிக்கப்படாமல். 7.30 மணிக்குப் பிறகுதான் ஆரம்பமானது. இதனால், அவ்வப்போது அரங்கத்திற்குள் சில சலசலப்புகளும் ஏற்பட்டன. அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மெத்தனமாகவே இருந்ததாக பலரும் முணுமுணுத்தார்கள். இதை எல்லாம் தாண்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமானவுடனே அத்தனை பார்வையாளர்களும் மீண்டும் உற்சாகத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.

முன்னதாக ‘அர்னால்ட்’ வருகிறார் என்ற எதிர்பார்ப்போடு ஆவலாக எழுந்து நின்று ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கே நுழைந்தவரைக் கண்டு மொத்த அரங்கமும் சிரிப்பொலியால் அதிர்ந்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்தான். இதன்பிறகு ஒவ்வொரு பிரபலங்களாக விழா மேடைக்கு முன்பு அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பிரத்யேக நாற்காலிகளில் வந்தமர்ந்தனர்.

விழாவில் படத்தின் ஆடியோவை ரஜினிகாந்த் வெளியிட, புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு ரஜினிகாந்த் பேசும்போது,

இதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மேடையில் நடந்தன. அதில் விக்ரம் மனித உடலுடனும், மிருக தலையுடனும் கூடிய ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து எமி ஜாக்சனுடன் நடனம் ‘என்னோடு நீ இருந்தால்...’ பாடலுக்கு ஆடினார். அந்த நடனத்துக்கு அரங்கமே அதிரும் வகையில் அப்படியொரு அப்ளாஸ்! ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத், ஹரிச்சரண் முதலானோர் பாடிய படத்தின் பாடல்களுக்கும் பலத்த கரகோஷம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, ‘ஐ’ படத்தின் மேக்கிங் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஷங்கர்,விக்ரமுக்கு ஸ்பெஷல் மேக்-அப் போட்டுள்ள ஹாலிவுட் வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஷான், லூக் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கவிஞர்கள் கபிலன், கார்க்கி வைரமுத்து, விக்ரம், எமி ஜாக்ஸன், வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் முதலானோரின் ‘ஐ’ குறித்த கருத்துக்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இந்த விழாவில் தெலுங்கு நடிகர் ராணா கலந்துகொள்ள இருந்தார். ஆனால் ராணா விழாவுக்கு வரவில்லை. இதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் நேற்று மதியம் 3 மணிக்கே தெரிவித்துவிட்டார். இந்த விஷயம் ‘ஐ’ விழா சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். இதனால் ராணா விழாவுக்கு வந்திருக்கிறார் என்று நினைத்த சின்மயி அவரை வரவேற்று பேசியபோதும், நிகழ்ச்சிக்கு இடையே அவரை மேடைக்கு அழைத்தபோதும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்மட்டுமல்ல நடிகர் விக்ரமும், ஆஸ்கார் கம்பெனியைச் சேர்ந்தவர்களும்கூட ராணா வந்திருப்பதாக நினைத்து அவரை அடிக்கடி அழைத்தபடி இருந்தனர்.

‘ஐ’ படத்தின் டீஸர் திரையிட்டுக் காட்டியபோது மொத்த அரங்கமும் பேச முடியாமல் திகைத்து நின்றது. பின்னர் இயல்பு வந்த பார்வையாளர்களின் கைதட்டல் ஓசை அடங்கவே சில மணித்துளிகள் பிடித்தது. அந்த கைதட்டல்கள் இதுவரை எந்த ஒரு படவிழாவிலும் கேட்டதாகத் தெரியவில்லை.

விழா ஏற்பாடுகளில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், ‘ஐ’ படத்தைப் போலவே இந்த ஆடியோ விழாவும் பிரம்மாண்டமாய் நடந்து முடிந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;