‘ஐ’ - இசை விமர்சனம்

‘ஐ’ - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 15-Sep-2014 10:56 AM IST Chandru கருத்துக்கள்

நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்ல வேண்டியதில்லை. கூடவே, விக்ரமின் சிங்க முக கெட்அப் வேறு... இந்திய சினிமா மொத்தமும் ‘ஐ’ படத்துக்கு மட்டுமல்ல, ரஹ்மானின் இசைக்காகவும் காத்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுத்துள்ளதா ‘ஐ’ ஆல்பம்!

மெரஸலாயிட்டேன்...
பாடியவர்கள் : அனிருத், நீத்தி மோகன்
பாடலாசிரியர் : கபிலன்


‘ஐ’ ஆல்பத்தைக் கேட்கத் துடித்துக் கொண்டிருந்த ரசிகர்களை முதல் பாடலிலேயே மிரள வைக்க வேண்டும் என்பதற்காக இளமை துள்ளும் ‘டெக்னோ பீட்’களுடன், லோக்கல் பாஷையில் பின்னி பெடலெடுத்திருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் டீம்! அனிருத்தின் வாய்ஸில் இருக்கும் எனர்ஜியை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ஆர். அவரின் குரலில் உருவான பாடல்களில் இப்பாடல் நிச்சயம் தனி இடம் பிடிக்கும். மொத தபா, பேஜாராகி, கிருஷ்ணாயில், மெரஸலாயிட்டேன், மாங்கா பத்த, மாஞ்சா நூலு, மாட்டுக் கொம்பு, வண்ணாரப்பேட்ட என மெட்ராஸ் தமிழில் இலக்கியம் படைத்திருக்கிறார் கபிலன். ‘வானவில்லு நீ... பின்னி மில்லு நான்...’ ‘வெண்ணிலா மூட்ட நீ.... வண்ணாரப் பேட்ட நான்’ என ஒவ்வொரு வரியும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே போகிறது. நீத்தி மோகன் பாடலுக்கிடையே அவ்வப்போது வந்து ‘மெரஸல்’ ஏத்திவிட்டுப் போகிறார்.

என்னோடு நீ இருந்தால்...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடலாசிரியர் : கபிலன்


காதல் பிரிவின் வலியை பியானோவின் இசையில் ரஹ்மான் வெளிக்கொணர்ந்திருக்கும் பாடலே ‘என்னோடு நீ இருந்தால்...’. ‘காற்றைத் தரும் காடுகள் வேண்டாம்... போ... தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்...’ என ஆரம்ப வரிகளிலேயே அசத்தியிருக்கிறார் கபிலன். ‘கடல்’ படத்தில் ‘அடியே...’ பாடலைப் பாடியே சித் ஸ்ரீராமின் குரலில் மீண்டும் ஒரு சூப்பர் ராக் பாடல். பியானோவில் ஆரம்பித்து புல்லாங்குழலின் மயக்கும் இசை, டிரம்மின் அதிரடி பீட்ஸ், அதிரடிக்கும் எலக்ட்ரிக் கிடார் என போகப்போக பாடலில் எனர்ஜி ஏறிக்கொண்டே போகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகள் இப்பாடலில் இருந்தும் தவிர்த்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை?

லேடியோ...
பாடியவர் : நிகிதா காந்தி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


ஹெட்போன்களில் பாடல்கள் கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த ‘லேடியோ...’. முழுக்க முழுக்க வெஸ்டர்னில் புகுந்து விளையாடியிருக்கிறார் ரஹ்மான். லேடி காகா தமிழில் பாடியதைப்போன்று ஹைடெஸிபலில் பாடி கலக்கியிருக்கிறார் நிகிதா காந்தி. கார்க்கி எழுதியிருப்பது தமிழ் வார்த்தைகளா, ஆங்கில வார்த்தைகளா என யோசிக்கும் முன்பே அடுத்தடுத்த வரிகளுக்கு பாடல் பயணித்துக் கொண்டே இருக்கிறது. கேட்க கேட்க பிடிக்கும் ரகம். இப்பாடலை காரில் ஒலிக்கவிட்டுக் கொண்டே ஈ.சி.ஆர் ரோட்டில் இளைஞர்கள் பறக்கப்போவது நிச்சயம்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


2014ன் ‘டாப் 10 மெலோடி’ லிஸ்டில் இடம்பிடிக்க அத்தனை தகுதிகளும் இருக்கிறது இந்த ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...’ பாடலுக்கு. ‘ஐ என்றால் அது அழகென்றால் ‘ஐ’களின் ஐ அவள்தானோ, ஐ என்றால் கடவுள் என்றால் கடவுளின் துகள் அவள்தானோ’ என ஒவ்வொரு வரியையும் ‘ஹைக்கூ’வாக படைத்திருக்கிறார் கார்க்கி. ஹரிச்சரணின் கர்நாடிக் குரலும், ஷ்ரேயா கோஷலின் ஹிந்துஸ்தானி குரலும் இணைந்து தாலாட்டுப் பாடியிருக்கிறது. ‘ஜீன்ஸ்’ படத்தின் ‘அதிசயம்...’ பாடலைப் போன்று ஒரு சூப்பர் விஷுவல் விருந்து இப்பாடலுக்கு திரையில் காத்திருக்கிறது. ரிப்பீட் மோட்!

அய்ல அய்ல...
பாடியவர்கள் : ஆதித்யா ராவ், நடாலி டி லூசியோ
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


ரஹ்மானின் இசையில் உருவான பாடலா இது? என ஒரு கணம் சந்தேகிக்க வைக்கும் வித்தியாசமான பாடல் இது. வார்த்தைகளும் இசையும் ஒன்றாக கலந்து ஒலிக்காமல் தனித்தனியாக பயணித்திருக்கிறது. காட்சிகளோடு பார்க்கும்போது பெரிய அளவில் கவனம் ஈர்க்கலாம்.

என்னோடு நீ இருந்தால்... (ரீப்ரைஸ்)
பாடியவர்கள் : சின்மயி, சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : கபிலன்


ஆல்பத்தின் இரண்டாவது பாடலான ‘என்னோடு நீ இருந்தால்’ பாடலின் வேறொரு வெர்ஷன். சின்மயியின் மயக்கும் குரலில் முதல் வெர்ஷனைவிட மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல். கேட்டவுடன் பிடித்துப்போகிறது இந்த சூப்பர் மெலோடி.

மெர்ஸலாயிட்டேன்... (ரீமிக்ஸ்)
பாடியவர்கள் : அனிருத், நீத்தி மோகன்
பாடலாசிரியர் : கபிலன்


ரீமிக்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. ரஹ்மான் அதில் வல்லவர். முதல் வெர்ஷனின் வெஸ்டர்ன் பீட்டுடன், லோக்கல் குத்தையும் கொஞ்சம் ஸ்பீடாகக் கலந்து இதில் தந்திருக்கிறார். ‘க்ளப்’களில் ஒலிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இப்பாடலை ‘இயர் போனி’ல் கேட்கும்போது பெரிய சுவாரஸ்யம் தருகிறது.

20 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களின் ‘ஐகான்’ஆக ரஹ்மான் இருப்பதற்கான காரணத்தை விளக்க இந்த ஒரு ஆல்பமே போதும். காலத்துக்கும், கதைக்கும் தகுந்தபடி தன்னால் எப்போதும் இசையமைக்க முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் ரஹ்மான். சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘காவியத் தலைவன்’ பாடல்களும், இப்போது வெளிவந்திருக்கும் ‘ஐ’ பாடல்களும் எதிரெதிர் துருவம். ஆனால் இரண்டு துருவங்களிலும் உச்சத்தில் நிற்கிறார் ரஹ்மான்.

மொத்தத்தில்... ‘ஐ’ என்றால் ஆச்சரியம்... ‘மெரஸலாக்கிவிட்டார்’ ரஹ்மான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;