வானவராயன் வல்லவராயன் - விமர்சனம்

கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் சலிப்பு!

விமர்சனம் 13-Sep-2014 1:00 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : மகாலட்சுமி மூவீஸ்
இயக்கம் : இராஜமோகன்
நடிப்பு : கிருஷ்ணா, மா.பா.கா.ஆனந்த், மோனல் கஜார், சந்தானம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எம்.ஆர்.பழனிகுமார்
எடிட்டிங் : கிஷோர்

‘யாமிருக்க பயமே’ படத்திற்குப் பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என்பதோடு, விஜய் டிவி புகழ் மா.கா.பா.ஆனந்த் நடிகராக அறிமுகமாகியிருக்கும் படம்.

கதைக்களம்

அண்ணன் தம்பியான வானவராயனுக்கும் (கிருஷ்ணா), வல்லவராயனுக்கும் (மா.கா.பா.ஆனந்த்) முழு நேர வேலையே ஊரில் வெட்டியாக சுற்றித் திரிந்து கொண்டு வம்பு செய்வதுதான். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக் கொண்டே இருந்தாலும் எந்நேரமும் பிரியாமல் ஒன்றாகவே சுற்றுவார்கள். இந்நிலையில் வானவராயனுக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த அஞ்சலிக்கும் (மோனல் கஜார்) காதல் வருகிறது. இதனால் அண்ணன் & தம்பி உறவில் விரிசல் விழுகிறது. இவர்களுக்குள் பிரிவு ஏற்பட என்ன காரணம்? மீண்டும் இணைந்தார்களா இல்லையா? வானவராயனின் காதல் கைகூடியதா இல்லையா? என்பதே ‘வானவராயன் வல்லவராயன்’ படம்!

படம் பற்றிய அலசல்

அரதப்பழசான கதை தான்! அதை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட் வைத்து இயக்கியிருக்கிறார் இராஜமோகன். இடைவேளை வரை வானவராயன் வல்லவராயனின் சேட்டைகள் தான்! இவர்களது சேட்டைகள் சில இடங்களில் அலுப்பை ஏற்படுத்தினாலும், இடை வேளைக்குப் பிறகு விறுவிறுப்பான காட்சிகளுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். இந்த இரண்டு பேருடன் சந்தானமும் க்ளைமேக்ஸில் இணைந்துகொள்ள தியேட்டரில் சிரிப்பு சரவெடி!

நடிகர்களின் பங்களிப்பு

தனது வழக்கமான பாணியில் நடித்து தன் கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார் கிருஷ்ணா. பார்ப்பதற்கு உண்மையிலேயே கிருஷ்ணாவின் தம்பிபோல் இருப்பதால் ‘வல்லவராயன்’ கேரக்டருக்கு அறிமுக நடிகர் மா.கா.பா.ஆனந்த் ஏக பொருத்தம்! ‘‘நாம எல்லாத்தையும் சேர்ந்து தானே குடிப்போம், விஷத்தை மட்டும் ஏன்டா நீ தனியே குடிச்சே..’’ என்று மா.கா.பா.ஆனந்த் கிருஷ்ணாவிடம் உருகும்போது சென்டிமென்ட்டும் தனக்கு வரும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆனந்த். கிராமத்து பெண் வேடத்துக்கு மோனல் கஜார் அவ்வளவாக பொருந்தவில்லை என்றாலும், நடிப்பில் ‘பாஸ்’ மார்க் வாங்கி விடுகிறார். பொறுப்புமிக்க அண்ணனாக எஸ்.பி.பி.சரணுக்கு நல்ல வேடம்! கடைசி 10 நிமிட காட்சிகளில் வரும் சந்தானம் ‘காமெடியில் எப்போதும் நான் ராஜா’தான் என்பதை நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையா, கோவை சரளா, ஜெயபிரகாஷ் முதலானோர் அவரவர் வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

பலம்

1. குடும்பத்தினருடன் சென்று பார்க்க கூடிய வகையிலான காட்சி அமைப்புகள்!
2. சந்தானம் சம்பந்தப்பட்ட கடைசி 10 நிமிட காமெடி காட்சிகள்.
3. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள இரண்டு பாடல்களும், பின்னணி இசையும்.
4. பொள்ளாச்சியின் இயற்கை அழகை அழகாக படம் பிடித்திருக்கும் பழனிகுமாரின் ஒளிப்பதிவு.

பலவீனம்

1. பல படங்களில் பார்த்து சலித்த கதை!
2. சில இடங்களில் சலிப்பூட்டும் கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்தின் சேட்டைகள்!
3. எடிட்டிங்

மொத்தத்தில்...

படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் இராஜமோகன் கதையில் புதுமையைப் புகுத்தி, சேட்டைகளைக் குறைத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ‘வானவராயன் வல்லவராயனு’க்கு ஒரு சபாஷ் போட்டிருக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் சலிப்பு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;