‘சிகரம் தொடு’ - விமர்சனம்

உயரம் குறைவு!

விமர்சனம் 12-Sep-2014 6:00 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் : கௌரவ்
நடிப்பு : விக்ரம் பிரபு, மோனல் கஜார், சத்யராஜ், கௌரவ்
ஒளிப்பதிவு : விஜய் உலகநாத்
இசை : டி.இமான்
எடிட்டிங் : பிரவீன் கே.எல்.

‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ படங்களைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு க்ரைம் த்ரில்லர் படம்தான் ‘சிகரம் தொடு’.

கதைக்களம்

தன்னைப்போலவே தன் மகனையும் போலீஸாக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பா சத்யராஜ், போலீஸ் வேலையே பிடிக்காத மகன் விக்ரம் பிரபு, தன்னை திருமணம் செய்துகொள்பவர் கண்டிப்பாக போலீஸாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் மோனல் கஜார், போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏடிஎம் கொள்ளைன் இயக்குனர் கௌரவ் இவர்கள் நான்கு பேருக்குமிடையே நடக்கும் சடுகுடு ஆட்டமே ‘சிகரம் தொடு’.

படம் பற்றிய அலசல்

விமலை வைத்து ‘தூங்கா நகரம்’ தந்த கௌரவ், விக்ரம் பிரபுவை வைத்து ‘சிகரம் தொடு’ படத்தைத் தந்திருக்கிறார். வழக்கமான போலீஸ் கதையில் ஏடிஎம் கொள்ளையையும் இணைத்து சுவாரஸ்யமான ஒரு த்ரில்லரைத் தர முயன்றிருக்கிறார். படத்தின் முதல்பாதியில் விக்ரம் பிரபு போலீஸ் வேலையில் சேருகிறாரா இல்லையா என்பதையும், மோனல் கஜாருக்கும் விக்ரம் பிரபுக்கும் உருவாகும் காதலையும் ஸ்லோவான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இரண்டாம்பாதியில் ஏடிஎம் கொள்ளையின் பின்னணியையும் அதை நாயகன் கண்டுபிடிக்கும் யுக்தியையும் காட்டி திரைக்கதையில் கொஞ்சம் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். இமானின் இசையில் ‘பிடிக்குதே...’ பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுகம். மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. விஜய் உலகநாத்தின் கேமரா ஹரித்துவார் மலைப்பிரதேசங்களை அழகாக படம் பிடித்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

‘கும்கி’க்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்த 3 படங்களுமே க்ரைம் த்ரில்லராகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும் இதில் அவர் ஏற்றிருக்கும் போலீஸ் வேடம் அவருக்குப் புதிதுதான். தான் ஏற்ற கதாபாத்திரத்திற்காக முந்தைய படங்களைவிட கொஞ்சம் உடல் இளைத்து கம்பீரத் தோற்றுத்துடன் காட்சியளித்திருக்கிறார். ரொமான்ஸில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மோனல் கஜாருக்கு பெரிய வேலை இல்லை. அழகாக வந்து ரசிகர்களை வசீகரித்துச் செல்கிறார். கம்பீர போலீஸாக சத்யராஜ். செல்லப்பா பாண்டியனாக வாழ்ந்திருக்கிறார். அவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ‘அப்பா...’ பாடல் கண்கலங்க வைக்கிறது. வில்லன் வேடமேற்றிருக்கும் கௌரவ், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. நடிப்பும் சுமார்தான். சதீஷ், ‘விஜய் டிவி’ மகேஷ் என இரண்டு காமெடியன்கள் இருந்தும் பெரிதாக சிரிப்பு வரவில்லை.

பலம்

1. ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை விலாவரியாக காட்டியிருப்பது.
2. கொஞ்சம் பரபரப்பாக செல்லும் இரண்டாம் பாதி.
3. பின்னணி இசை.

பலவீனம்

1. மெதுவாக நகரும் முதல்பாதி திரைக்கதை.
2. நிறைய லாஜிக் மீறல்கள்.
3. தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படத்தின் நீளம் குறைந்திருக்கும்.

மொத்தத்தில்...

போலீஸ் வேலையின் அவசியத்தை உணர்த்துவதா அல்லது ஏடிஎம் கொள்ளையின் பின்னணியை விளக்குவதா என்பதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். கம்பீரத்தையும், சுவாரஸ்யத்தையும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் ‘சிகரம் தொடு’விற்கு சல்யூட் அடித்திருக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : உயரம் குறைவு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;