பர்மா - விமர்சனம்

திருட்டு விளையாட்டு!

விமர்சனம் 12-Sep-2014 11:11 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு: ஸ்கொயர் ஸ்டோன் ஃபிலிம்ஸ்
இயக்கம்: தரணீதரன்
நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, ரேஷ்மி மேனன், சம்பத், அதுல் குர்கர்னி
இசை : சுதர்ஷன் எம்.குமார்
எடிட்டிங்: விவேக் ஹர்ஷன்

க்ரைம் த்ரில்லர் வரிசையில் ரிலீசாகியிருக்கும் மற்றுமொரு படம் ‘பர்மா’!

கதைக்களம்

கார்களை கடத்தும் திருட்டுத் தொழிலை செய்பவன் பரமானந்தம் என்கிற பர்மா (மைக்கேல் தங்கதுரை). இதே தொழிலை செய்யும் மற்றொரு கும்பலின் தலைவன் குணா (சம்பத் ராஜ்). திருடப்படும் கார்களை விலைக்கு வாங்குபவர் சேட் (அதுல் குர்கர்னி). இவர்களுக்குள் நடக்கும் கார் திருட்டு களேபரங்கள்தான் படம்! சேட்டுக்காக BMW கார் ஒன்றை கடத்துகிறார் பர்மா! ஆனால் அந்த காரை அவனிடமிருந்து வேறொரு கும்பல் கடத்திச் செல்கிறது. இதனால் பர்மா மீது சந்தேகம் அடையும் சேட், பர்மாவின் காதலி கல்பனாவை (ரேஷ்மி மேனன்) சிறை வைக்கிறார். ‘24 மணி நேரத்திற்குள் காரை மீட்டு வந்து, உன் காதலியை அழைத்துப் போ’ என்று பர்மாவுக்கு கெடு வைக்கிறார் சேட்! இதன் பிறகு தன் காதலியை காப்பாற்ற பர்மா என்ன செய்கிறார் என்பதே க்ளைமேக்ஸ்!

படம் பற்றிய அலசல்

பெரு நகரங்களில் நடக்கும் கார் திருட்டையும், ஏ.டி.எம். பணக் கொள்ளையையும் மையக் கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் தரணீதரன். படத்தின் கதைக் களம் புதுசுதான்! ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு புரியும்படி திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்! ஏ.டி.எம். பணத்தை கொள்ளை அடிக்கும் பெண் ஒருவர், விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை திருடி விற்கும் பெண் ஒருவர் என படத்தில் ஏராளமான களவாணிகள்! ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அழுத்தம் தரப்படவில்லை! இருந்தாலும் தான் சொல்ல வந்த விஷயத்தை 100 நிமிடங்களுக்குள்ளேயே சொல்லி முடித்திருப்பதால் பெரிதாக போரடிக்கவில்லை. இந்த த்ரில்லர் கதைக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையமைத்திருக்கும் சுதர்ஷன் எம்.குமார் கவனம் ஈர்த்திருக்கிறார். ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

பர்மாவாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பயம் அறியா இளம் காளையாக, கார்களை திருடும் போது அவரது பாடி லாங்வேஜும், நடிப்பும் பாராட்டும் ரகம்! இவரது காதலி கல்பனாவாக வரும் ரேஷ்மி மேனனுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. இருந்தாலும், சேட்டுவால் சிறைவைக்கப்பட்டு அவஸ்தைப்படும் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். குணா கேரக்டரில் நடித்திருக்கும் சம்பத், படத்தில் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை! கடத்தல் கார்களை வாங்கும் ‘சேட்’டாக வரும் அதுல் குர்கனி சரியான வில்லன்! நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பர்மாவின் கூட்டாளி பூமராக வரும் கார்த்திக் சபேஷ் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

பலம்

1. தமிழில் அதிகம் சொல்லப்படாத புதிய கதைக்களம்
2. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு கைகொடுத்திருப்பது
3. ‘நச்’சென 100 நிமிடங்களுக்குள் படத்தை முடித்திருப்பது.

பலவீனம்

1. அழுத்தமில்லாத திரைக்கதை
2. காமெடிகள் சேர்க்க இடமிருந்தும் அதில் கோட்டை விட்டிருப்பது.
3. படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்திருக்கும் பாடல்கள்.

மொத்தத்தில்...

படத்தின் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்து, காட்சிகளை புரியும்படி அமைத்திருந்தால் ‘பர்மா’ ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்திருக்கும்!

ஒரு வரி பஞ்ச்: திருட்டு விளையாட்டு!

ரேட்டிங்: 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராஜா ரங்குஸ்கி - மோஷன் போஸ்டர்


;