ஜீவா - டிரைலர் விமர்சனம்

ஜீவா - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 11-Sep-2014 11:24 AM IST Chandru கருத்துக்கள்

‘சென்னை 28’ல் வெங்கட் பிரபு ஜாலியாய் விளையாடிய கிரிக்கெட்டை கொஞ்சம் சீரியஸாய் விளையாட முடிவு செய்து ‘ஜீவா’வை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்கும் இப்படத்தை சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி டீம்’, ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அதை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனமும் இணைந்து வெளியிடவிருக்கின்றன. டி.இமான் இசையில் உருவான பாடல்கள் இன்று (செப்டம்பர் 11) வெளியாகிறது. அதோடு இப்படத்தின் டிரைலர் ஒன்றையும் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். சுசீந்திரனின் ‘மட்டைப்பந்து ஆட்டம்’ எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த டிரைலர் ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறதா?

‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டிகளில் நிஜ கிரிக்கெட் நாயகனாக விளங்கும் விஷ்ணுவை இப்படத்தின் நாயகனாக்கியிருப்பது இப்படத்தின் கதைக்கும், அவர் ஏற்றிருக்கும் கேரக்டருக்கும் நிச்சயம் மிகப்பெரிய பலம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது படமல்ல... நிஜ விளையாட்டு என்பதை உணர்த்துவதற்காக உண்மையிலேயே கிரிக்கெட் ஆடத் தெரிந்த விஷ்ணுவை கிரிக்கெட் வீரனாக களமிறக்கியிருக்கும் சுசீந்திரனின் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

இப்படத்தின் டிரைலரில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது வசனங்கள்தான். ‘இந்த ஜெர்ஸில பேர் வரணும்ங்கிறதுதான் உங்க ஒவ்வொருத்தரோட கனவும்....’, ‘கிரிக்கெட்ல கூட நல்ல ஃப்யூச்சர் இருக்கு சார்...’, ‘முடியாதத முடிக்கும்போதுதான் அது ரெக்கார்டா மாறுது’, ‘கிரிக்கெட்ங்கிறது டீம் எஃபெர்ட்!’ என ஒவ்வொரு வசனமும் மிக சீரியஸாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சூரி பேசும் ‘செகன்ட்டுக்கு செகன்ட் மாறுறவங்கதான் பொண்ணுங்க... செத்தாலும் மாறாதவங்கதான் பசங்க’ என்ற பெண்களை மட்டம் தட்டும் வசனத்தை தவிர்த்திருக்கலாம்... ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக இன்னும் எத்தனை படத்தில்தான் இதுபோன்ற ‘புளித்துப்போன’ வசனங்களை பயன்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை.

இந்த டிரைலரைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சீரியஸாய் விளையாடும் கிரிக்கெட்டை கண்முன் கொண்டு வருவதற்காக ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் விஷயங்களுக்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு போரடிக்கலாம் என்பதற்காக ஸ்ரீதிவ்யாவின் காதலையும் ‘ஜீவா’ கதையில் நுழைத்திருக்கிறார் சுசீந்திரன். நாயகிக்கு எந்தளவுக்கு வேலையிருக்கும் என்பது படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிய வரும். அதோடு இப்படத்தில் சூரி நடித்திருந்தாலும், இந்த டிரைலரில் பெரிதாக அவரின் காமெடிக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. ஒருவேளை சூரியும் சூரியஸாக கிரிக்கெட் ஆடியிருக்கிறாரோ என்னவோ?

மொத்தத்தில்.... இந்த டிரைலரைப் பார்க்கும்போது கிரிக்கெட் என்பதை மறந்துவிட்டுப் பார்த்தால், ‘வெண்ணிலா கபடி குழு’, ‘வல்லினம்’, ‘சக்தே இந்தியா’ போன்ற படங்கள் கண்முன் வந்துபோகிறது. இருந்தாலும்... கிரிக்கெட்டை இவ்வளவு சீரியஸாய் தமிழில் வேறெந்த படத்திலும் காட்டியிருப்பதாகத் தெரியவில்லை.

மொத்த ஆட்டத்தையும் பார்க்கத் தூண்டியிருக்கிறது ‘ஜீவா’ டிரைலரில் காட்டப்பட்டிருக்கும் கிரிக்கெட் ஹைலைட்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;