பொறியாளன் - விமர்சனம்

பேஸ்மென்ட் +  பில்டிங் வீக்!

விமர்சனம் 6-Sep-2014 5:03 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஏஸ் மாஸ் மீடியாஸ், கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி
இயக்கம் : தாணுகுமார்
நடிப்பு : ஹரிஷ் கல்யாண், ஆனந்தி, மோகன்ராம்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ்
எடிட்டிங் : ஜீ.பி.வெங்கடேஷ்

‘வேலையில்லா பட்டதாரி’யைத் தொடர்ந்து கட்டடக்கலை பொறியாளரைப் பற்றி வெளிவந்திருக்கும் இன்னொரு படம்தான் ‘பொறியாளன்’.

கதைக்களம்

அடுத்தவரிடம் வேலை செய்வது பிடிக்காத இன்ஜினியர் ஹரிஷ் கல்யாண், சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்க ஆசைப்படுகிறார். கந்து வட்டி ரௌடி ஒருவரிடம் அடியாளாக இருக்கும் ஹரிஷின் நண்பன், தன் பாஸுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து வந்து கொடுத்து கம்பெனி தொடங்க ஹரிஷிற்கு பண உதவி செய்கிறான். அந்த பணத்தை வைத்து இடம் ஒன்றை வாங்கி பதிவு செய்கிறார்கள். ஆனால், அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமானது என்பதும், பணத்தை புரோக்கரிடம் ஏமாந்திருக்கிறோம் என்பதும் அதன்பிறகே நாயகன் ஹரிஷுக்கு தெரிய வருகிறது. அதேநேரம், தன்னிடமிருந்து பணம் திருடியிருப்பதை கந்து வட்டி ரௌடி தெரிந்து கொண்டு, ஹரிஸின் நண்பனை மிரட்டத் தொடங்குகிறார்.

இந்த இக்கட்டான சூழலில் நாயகன் என்ன செய்யப்போகிறார் என்பதை செயற்கையான பரபரப்புடன் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

படம் பற்றிய அலசல்

ரியல் எஸ்டேட் ஏமாற்று வேலையையும், கந்து வட்டி ரௌடிஸத்தின் பின்னணியையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ‘பொறியாளன்’ என்ற டைட்டில் எதற்காக வைக்கப்பட்டது என்பது இயக்குனருக்கே வெளிச்சம். கட்டடக்கலையில் நாயகன் எதையோ பெரிதாக சாதிக்கப்போகிறான் போல என படம் பார்க்க ஆரம்பித்தால், தான் ஏமாந்த பணத்தைத் தேடி நாயகன் படம் முழுவதும் அலைந்து கொண்டே இருக்கிறார். அதேபோல் இந்தக்கதையில் காதலுக்கே இடமில்லை. ஆனால், கதாநாயகி வேண்டுமென்பதால் காதலையும் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைத்திருக்கிறார்கள். படம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்ற நினைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதற்காக பின்னணி இசை பயங்கரமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் காட்சிகளில் எந்த பரபரப்பும் இல்லை.

மொத்தமே இரண்டு மணி நேரம்தான் படம். ஆனாலும் ‘கொஞ்சம் பெரிய படமோ’ என யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒண்ணுமில்லாத விஷயத்தை இழுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள். குறிப்பாக இப்படத்தின் டெக்னிக்கல் விஷயங்களான இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், டப்பிங் என எல்லா விஷயங்களுமே படத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

‘சிந்து சமவெளி’யில் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு, இப்போது ‘பொறியாளன்’ படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார் ஹரிஷ். கொஞ்சமும் ‘ஸ்கோப்’ இல்லாத அந்த கேரக்டரில் தன்னால் முயன்ற அளவுக்கு நடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நல்ல வாய்ப்பு அவருக்கு கிடைக்கட்டும். நாயகி ஆனந்திக்கு வழக்கமான கதாநாயகி வேலை. மூணு காட்சி, ரெண்டு பாட்டு... அவ்வளவுதான்! பிராடு புரோக்கராக வரும் மோகன்ராம் கலக்கியிருக்கிறார். ஆனால் அவரின் கேரக்டர்தான் அமெச்சூர்தனமாக இருக்கிறது. இவர்களைத்தவிர கந்து வட்டி ரௌடியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. முடிந்தளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

பலம்

1. நில மோசடி, கந்து வட்டி ரௌடிஸத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க முயன்றிருக்கும் கதை.
2. படத்தை இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே முடித்திருப்பது.

பலவீனம்

1. திரைக்கதை
2. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

மொத்தத்தில்...

‘பொறியாளன்’ என ஒரு சூப்பர் டைட்டிலை வைத்துக்கொண்டு, டைட்டிலுக்கு தகுந்த ஒரு சுவாரஸ்யமான படத்தை கொடுக்கத் தவறியிருக்கிறார்கள்.
ஒரு வரி பஞ்ச்: பேஸ்மென்ட் + பில்டிங் வீக்!

ரேட்டிங்: 2.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புகழ் - டிரைலர்


;