சூர்யாவுக்கு வயது 18!

சூர்யாவுக்கு வயது 18!

கட்டுரை 6-Sep-2014 11:45 AM IST Chandru கருத்துக்கள்

‘மார்கண்டேயன்’ சிவகுமாரின் மகன் சரவணன் சினிமாவிற்காக நடிகர் ‘சூர்யா’வாக மாறி நேற்றோடு 17 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்று (செப்டம்பர் 6) 18ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா. ‘பிரபலத்தின் மகன்’ என்ற விசிட்டிங் கார்டோடு அவர் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும், இப்போது அவர் தொட்டிருக்கும் உயரத்திற்கு, முழுக்க முழுக்க அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணம்! சூர்யாவின் வளர்ச்சி அசாதாரணமானது.

மணிரத்னத்தின் தயாரிப்பில் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்த முதல் படம் ‘நேருக்கு நேர்’ 1997ஆம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளிவந்தது. அதன் பிறகு அவர் நடித்த சில படங்கள் சூர்யா ஹீரோவாக நடித்த படம் என்று சொல்லும் அளவுக்கே இருந்தன. ஆனால், மீண்டும் சூர்யாவும் விஜய்யும் இணைந்து நடித்த ‘ஃப்ரண்ட்ஸ்’ படம் சூப்பர்ஹிட் ஆனதோடு, சூர்யாவுக்கு நிறைய ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. சூர்யாவிற்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் இயக்குனர் பாலா. ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றையும் முற்றிலுமாக மாற்றி அமைத்தார் அவர். அதன் பிறகு அமீர் ‘மௌனம் பேசியதே’ படத்திலும், கௌதம் மேனன் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களிலும் சூர்யாவின் உழைப்பை மிகச்சரியாக பயன்படுத்தி வெற்றி கொடுத்தார்கள். சூர்யாவிற்குள் இருக்கும் ‘மாஸ் ஹீரோ’வை கோடம்பாக்கத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த படங்களான ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம்2’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களும், கே.வி.ஆனந்தின் ‘அயன்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘கஜினி’ போன்ற பிளாக் பஸ்டர்களும்தான்!

கெட்-அப் மாற்றுவதில் கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் யாருமில்லை என்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலைமையை மாற்றி அமைத்தவர்களில் சூர்யா மிக முக்கியமானவர். ‘பேரழகன்’ படத்தில் கூன் விழுந்த மனிதனாக, ‘கஜினி’யில் மொட்டைத்தலை மறதி வியாதிக்காரராக, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சிக்ஸ்பேக் இளைஞராகவும், 65 வயது முதியவராகவும், ‘ஏழாம் அறிவு’ படத்தில் போதி தர்மராக, ‘மாற்றான்’ படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக என சூர்யா போட்ட கெட்-அப்கள் தமிழ்சினிமா உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

17 வருடங்களில் சூர்யா தந்திருப்பது வெறும் 30 படங்கள்தான். ஆனால், அவர் தமிழ்சினிமாவில் தொட்டிருக்கும் உயரம் வெகு உச்சத்தில். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் சூர்யாவிற்கு ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள்.

கிசுகிசுவில் அதிகம் சிக்காதவர், மனிதநேயம் மிக்கவர், வெற்றி தோல்வியை சரிசமமாக எடுத்துக் கொள்பவர், இயக்குனர்களின் நடிகர் என கோலிவுட்டில் சூர்யா சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் அதிகம்!

புகழும், வசதியும் அதிகரிக்க அதிகரிக்க... சூர்யாவின் கல்வி சேவைகளும், சமூகப்பணிகளும் இன்னொருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடரட்டும் அவரது வெற்றிகளும் சேவைகளும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;