அமர காவியம் - விமர்சனம்

காவியம் இல்லை... வலி நிறைந்த கவிதை!

விமர்சனம் 5-Sep-2014 5:32 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : தி ஷோ பீப்பிள்
இயக்கம் : ஜீவா சங்கர்
நடிப்பு : சத்யா, மியா, அனந்த் நாக், தம்பி ராமையா
ஒளிப்பதிவு : ஜீவா சங்கர்
இசை : ஜிப்ரான்
எடிட்டிங் : சூர்யா

தமிழ் சினிமா மறந்துபோன ‘ரொமான்ஸ் ஏரியா’வை மீண்டும் ஞாபகப்படுத்த வந்திருக்கிறது ‘அமர காவியம்’. எப்படி இருக்கிறது இந்த காதல் காவியம்?

கதைக்களம்

கைதியாக இருக்கும் ஜீவாவை (சத்யா) காவல்நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த இடத்திலிருந்து துவங்குகிறது ஜீவாவின் ஃப்ளாஷ்பேக்....

தன் நண்பன் பாலாஜிக்காக (அனந்த் நாக்) கார்த்திகாவிடம் (மியா) காதலைச் சொல்ல தூதுவனாக போகிறான் ஜீவா. ஆனால், கார்த்திகா ஜீவாவைத்தான் காதலிக்கிறேன் என சொல்ல, அங்கே தொடங்குகிறது ஜீவா - கார்த்திகா காதல் காவியம்! அதன் பிறகு இருவரும் சந்தோஷப் பறவைகளாக சுற்றித் திரிகிறார்கள். ஒரு நாள் மலைப்பகுதி ஒன்றில் தனிமையில் இருக்கும்போது திடீரென அங்கே போலீஸ் நுழைய, ஜீவா - கார்த்திகா காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது. இதனால் இருவரும் பிரித்து வைக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து வெடிக்கும் சில பிரச்சனைகளால், பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊட்டியை காலிசெய்து கோயம்புத்தூருக்கு செல்கிறது கார்த்திகா குடும்பம். மீண்டும் ஜீவாவை சந்திப்பதற்காக பாலாஜியின் உதவியை நாடுகிறாள் கார்த்திகா. ஆனால் ஜீவா மேல் கொண்ட பொறாமையில் பாலாஜி சிலபல பொய்களைச் சொல்லி அவர்கள் இருவரையும் பிரிக்க முயல்கிறான்.

மீண்டும் நிகழ்காலம்... போலீஸிடமிருலிருந்து தப்பி ஓடுகிறான் ஜீவா. ஜீவா எங்கே செல்கிறான்? எதற்காக அவனை போலீஸ் கைது செய்தது? ஜீவா - கார்த்திகா காதல் என்னவானது? என்பதை ஆற, அமர சொல்லியிருக்கிறது இந்த அமர காவியம்.

படம் பற்றிய அலசல்

குளு குளு ஊட்டி, 80களின் இறுதி காலகட்டம், ஸ்வெட்டர் போட்ட பள்ளி மாணவ மாணவிகள் என படம் ஆரம்பிக்கும்பேதே லேசாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் ஞாபகம் வந்துபோகிறது. ‘நான்’ படத்தில் த்ரில்லர் கதையைச் சொன்ன ஜீவா சங்கர், இப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார். செல்போன், குடி கும்மாளம், குத்தாட்டம், கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் என எதுவும் இல்லாமலும் இளைஞர்களைக் கவர முடியும் என்ற நம்பிக்கையோடு, அதற்குத்தகுந்த ஒரு கதையை படமாக்கியிருப்பதற்காக ஜீவா சங்கருக்கு வாழ்த்துக்கள்!

‘ஹீரோ ஒரு கைதி’ என்பதோடு படம் துவங்குவதால், ஒரு எதிர்பார்ப்போடு கதைக்குள் நம்மால் நுழைய முடிகிறது. ஆனால் அதன் பிறகு வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரொம்பவும் மெதுவாக நகர்கிறது. இடையிடையே வரும் காதல் காட்சிகளும், ஜிப்ரானின் பாடல்களும் பின்னணி இசையும்தான் நம்மை படத்தோடு அழைத்துச் செல்ல பெரிதும் உதவியிருக்கிறது. ஒரு ‘திடுக்’ காட்சியோடு இடைவேளை போட, ‘அதன் பிறகு என்ன நடந்திருக்குமோ’ என்ற பதைபதைப்போடு வந்தமர்ந்தால், அதை மிகப் பொறுமையாக க்ளைமேக்ஸில்தான் நமக்கு விளக்குகிறார்கள்.

நடிகர்களின் பங்களிப்பு

சத்யாவிற்காக ஜீவா சங்கர் அற்புதமான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், அவர் அந்த கேரக்டரின் முழுமையான உணர்ச்சிகளை தன் நடிப்பின் மூலம் கொண்டு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். குறிப்பாக முகபாவனைகளிலும், பாடி லாங்குவேஜிலும் அவர் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் ஹீரோயின் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு இளமைக்கால தேவயானி போல் இருக்கும் மியா கண்களால் கவிதை பாடியிருக்கிறார். ரொமான்ஸ், சோகம் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருக்கிறது மியாவின் ‘க்யூட்’ எக்ஸ்பிரஷன்ஸ்! இவர்களைத் தவிர படத்தில் அதிக கவனம் ஈர்ப்பது ‘பாலாஜி’ கேரக்டரில் நடித்திருக்கும் அனந்த் நாக். ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு தன் நடிப்பு மூலம் பாலாஜி கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். தம்பி ராமையாவிற்கு இந்தப்படத்தில் எந்த வேலையும் இல்லை. மற்றவர்கள் அவரவர் கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பலம்

1. ஹீரோயின் மியாவின் யதார்த்தமான நடிப்பு
2. ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும்
3. அழகான லொகேஷன்களும் அதை அற்புதமாக படம்பிடித்த ஒளிப்பதிவும்.
4. க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி, நீளத்தை குறைத்திருக்க வேண்டிய திரைக்கதை
2. ஹீரோ சத்யாவின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு கைகொடுக்காதது

மொத்தத்தில்...

மனதில் அழுத்தமாக பதிய வேண்டிய படம்... ஆனால், க்ளைமேக்ஸ் மட்டுமே அந்த அழுத்தத்தை தர முயன்றிருக்கிறது. திரைக்கதையையும், ஹீரோவின் நடிப்பையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் ‘அமர காவியம்’ காதல் காவியங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச்: காவியம் இல்லை... வலி நிறைந்த கவிதை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;