பட்டைய கௌப்பணும் பாண்டியா - விமர்சனம்

பட்டைய கௌப்பியிருக்கலாமே பாண்டியா?

விமர்சனம் 5-Sep-2014 10:19 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : முத்தியாரா ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் : எஸ்.பி.ராஜகுமார்
நடிப்பு : விதார்த், மனீஷா யாதவ், சூரி
ஒளிப்பதிவு : டி.எம்.மூவேந்தர்
இசை : அருள்தேவ்
எடிட்டிங் : கே.தணிகாசலம்

விஜய்க்கு ‘சுறா’ தந்த இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார், விதார்த்தை வைத்து பட்டைய கௌப்ப களத்தில் குதித்திருக்கிறார். விளைவு?

கதைக்களம்

பழனியில் பஸ் ஒன்றில் டிரைவராக வேல்பாண்டியனும் (விதார்த்), கண்டக்டராக முத்துபாண்டியனும் (சூரி) வேலை செய்கிறார்கள். தினமும் அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் நர்ஸ் கண்மணியை (மனீஷா) ஒரு தலையாகக் காதலிக்கிறார் வேல்பாண்டியன். எவ்வளவோ முயற்சி செய்தும் தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால், கண்மணியை முறைப்படி பெண் கேட்கலாம் என அவரது வீட்டிற்குச் செல்கிறார் வேல்பாண்டியன். அங்கே போன பிறகுதான் வேல்பாண்டியனுக்குத் தெரிய வருகிறது... கண் தெரியாத அக்கா ஒருவர் இருப்பதால்தான் தன் காதலை கண்மணி ஏற்க மறுக்கிறாள் என்பது. பிறகென்ன... அக்காவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தன் ரூட் க்ளியர் என நினைத்து வண்டியை விரட்டுகிறார் விதார்த். முடிவு சுபம்!

படம் பற்றிய அலசல்

எந்தவித திருப்புமுனைகளும் இன்றி சாதாரண ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதில் சூரியின் காமெடிகள் மூலம் முழுப்படத்தையும் ‘பட்டைய கௌப்ப’ முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார். நிச்சயம் இப்படம் எந்த வெளிநாட்டுப் படத்தின் பிரதியாகவும் இருக்க வாய்ப்பில்லை. அதற்காகவே இயக்குனருக்கு ஒரு பாராட்டு! படம் ரொம்பவும் லோ&பட்ஜெட் போல. பாதி காட்சிகள் பஸ்ஸுக்குள்ளேயே நடக்கிறது. மீதி காட்சிகள் டாஸ்மாக் பாரிலோ, ஏதோ ஒரு வீட்டிற்குள்ளேயோ அல்லது தெருவிலேயோ நடக்கிறது. இரண்டு பாடல்களுக்கு மட்டும் ‘சூப்பர் லொகேஷன்களை’ப் பிடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் ஆகியவையும் படத்திற்கு ஏற்றபடி ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. வன்முறைக் காட்சிகள் அதிகம் வைக்காமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு படத்தை தர முயன்ற இயக்குனர், முகம் சுளிக்க வைக்கும் அந்த ‘டபரா செட்’ காமெடியைத் தவிர்த்திருக்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோ விதார்த் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். காட்சிகளில் குடும்பப்பாங்காக நடித்திருக்கும் மனீஷா, பாடல்களில் தாராளம் காட்டியிருக்கிறார். ஏறக்குறைய இப்படத்தின் ஹீரோ சூரிதான். போரடிக்க வைக்கும் ஒரு திரைக்கதையில் தனி ஒரு ஆளாக ஆங்காங்கே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கும் இமான் அண்ணாச்சி கலகலப்பூட்டுகிறார். விதார்த், சூரியின் அப்பாவாக இளரவசும், அம்மாவாக கோவை சரளாவும். இவர்களும் முடிந்தளவுக்கு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

பலம்

1. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது.
2. சூரி + இமான் அண்ணாச்சியின் காமெடி
3. இயற்கையான படப்பிடிப்புத்தளங்கள்

பலவீனம்

1. ரொம்பவும் அரதப்பழசான கதை
2. சுவாரஸ்யங்கள், திருப்பங்கள் இல்லாத திரைக்கதை
3. பாடல்கள்

மொத்தத்தில்...

அரைமணி நேர டிவி சீரியல்களிலேயே, ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கும் சின்ன சின்ன திருப்பங்களை வைத்து ரசிகர்களை டிவி முன் அமர வைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், இரண்டரை மணி படத்தில் எந்தவித சுவாரஸ்யமான சம்பவமும், திருப்பமும் இல்லாத படத்தைக் கொடுத்திருப்பது ஏமாற்றமே! இருந்தாலும் சூரியின் காமெடிக்காக பி அன்ட் சி ரசிகர்களிடம் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கலாம்!

ஒரு வரி பஞ்ச்: பட்டைய கௌப்பியிருக்கலாமே பாண்டியா?

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;