நீத்து சந்திராவுக்காக ‘திலகர்’ விழாவுக்கு வந்த அமீர்!

நீத்து சந்திராவுக்காக ‘திலகர்’ விழாவுக்கு வந்த அமீர்!

கட்டுரை 2-Sep-2014 1:08 PM IST VRC கருத்துக்கள்

‘அரவிந்தன்’ படத்தை இயக்கிய டி. நாகராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெருமாள் பிள்ளை முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் ‘திலகர்’. அறிமுகம் துருவா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருதுளா பாஸ்கர் நடித்திருக்க, இன்னொரு முக்கிய கேரக்டரில் மலையாள நடிகை அனுமோள் நடித்திருக்கிறார். மற்றும் கிஷோர், ‘பூ’ ராம், நீத்து சந்திரா முதலானோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (2-8-14) காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
படத்தின் டிரைலரை தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட, இயக்குனர்கள் சமுத்திரகனி, அமீர், கரு பழனியப்பன், நடிகர்கள் ஆதி, ஸ்ரீகாந்த், நடிகைகள் நமீதா, இனியா, சஞ்சிதா ஷெட்டி முதலானோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து படத்தின் ஆடியோவை இயக்குனரும், நடிகருமான அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். விழாவில் அமீர் பேசும்போது, ‘‘நான் இந்த விழாவுக்கு வர இரண்டு பேர் முக்கிய காரணம்! அவர்களில் ஒருவர் இப்படத்தை வாங்கி வெளியிடும் ‘கலைப்புலி’ எஸ். தாணு அவர்கள். இன்னொருவர் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் நீத்து சந்திரா! இவர்களில் தாணு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சில ஆண்டுகள் எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு பொதுவான பிரச்சனை காரணமாக சுமுகமான நட்பு இருந்தது கிடையாது. ஆனால் இப்போது எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு காதல் ஜோடிக்கு இடையில் இருக்கும் நட்பு, காதலைப் போன்று எங்களுக்குள் இப்போது நல்ல புரிதல் இருந்து வருகிறது. அவர் தான் இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்று தெரிந்ததும் இந்த விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்.

நீத்து சந்திராவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் என்னுடன் ‘யுத்தம் செய்’ படத்தில் நடித்ததிலிருந்து அவர் எனக்கு நல்ல ஒரு தோழியாக இருந்து வருகிறார். இந்தப் படத்தின் ஆடியோ விழாவில் அவர் கலந்து கொள்ள மும்பையில் இருந்து நேற்று வந்திருக்கிறார். வந்ததிலிருந்தே அவர் எனக்கு அடிக்கடி ஃபோன் செய்து, ‘நீங்கள் விழாவுக்கு வருவீர்கள் இல்லையா? கண்டிப்பாக வரவேண்டும்’ என்று அன்பு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். இவர்கள் இரண்டு பேருக்காகதான் இந்த விழாவுக்கு வந்தேன். ‘அமீர் எப்போதும் விழாக்களுக்கு லேட்டாக தான் வருவார்’ என்று ஒரு பேச்சு இருக்கு. ஆனால் இந்த விழாவுக்கு நான் யதேச்சையாக விழா நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டேன். அதனால் விழா அரங்கத்திற்குள் செல்லாமல் காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். ஏனென்றால் விழா அரங்கத்திற்கு சீக்கிரமாகவே வந்திருந்தால் ‘நீத்து சந்திரா வந்திருக்கிறார் அதனால் தான் அமீரும் சீக்கிரமாக விழாவுக்கு வந்திருக்கிறார்’ என்று பேசுவார்கள்’’ என்று அமீர் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை பேசும்போது, ‘‘இப்படத்தை ஒரு நிஜ சமபவத்தின் பின்னணியில், 1990 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரி இயக்கியிருக்கிறேன். இப்படத்தின் ஹீரோ துருவா நான்கு விதமான கெட்-அப்களில் நடித்திருக்கிறார். ஹீரோவின் அந்த நான்கு வித தோற்றத்திற்காகவே நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டியாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் தேவைப்பட்டது. படத்தின் டிரைலர், பாடல்களை பார்த்தவர்கள் எல்லாம் இப்படம் ‘கிழக்கு சீமையிலே’, ‘பருத்தி வீரன்’ படங்கள் ஞாபகப்படுத்துகிற மாதிரி மண்வாசனை படமாக இருக்குன்னு சொன்னார்கள். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு. இப்படம் எல்லோரது எதிர்பார்ப்புக்கும் ஏற்ற மாதிரி மண்வாசனை கலந்த ஒரு நல்ல படமாக இருக்கும்’’ என்றார்.

இந்த படத்தை ஃபிங்கர் பிரின்ட்ஸ் எனும் புதிய பட நிறுவன்ம் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா, நாசே ஆர்.ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;