‘ஜொள்ளு’க்கு விளக்கம் கொடுத்த வசந்தபாலன்!

‘ஜொள்ளு’க்கு விளக்கம் கொடுத்த வசந்தபாலன்!

செய்திகள் 2-Sep-2014 10:43 AM IST Chandru கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘காவியத்தலைவன்’ பாடல்கள்தான் தற்போதைய இளசுகளின் காலர் ட்யூன். சூப்பர்ஹிட் ஆகியுள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை மறைந்த காவியக்கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். அப்பாடலின் ஒரு வரியில் ‘அல்லி மலருல கள்ளு வடியுது.... அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது’ என்ற வார்தைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் வரும் ‘ஜொள்ளு’ என்ற வார்த்தை நாடகம் தோன்றிய காலகட்டங்களில் தமிழ் மொழியில் இல்லாத வார்த்தை எனவும், அது சமீபத்தில் தோன்றிய ஒரு வார்த்தை எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து வந்தனர். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதன் விவரம்....

‘காவியத் தலைவன்’ பாடலொன்றில் ‘ஜொள்ளு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வாலியைக் கிண்டலடித்து ஒரு ட்வீட் பார்த்தேன். கதைப்படி, இந்தியச் சுதந்தரத்துக்கு முன்பு ஒரு மேடையில் பாடப்படும் பாடல் அது. அதில் ‘ஜொள்ளு’ என்ற நவீன சொல் வரலாமா?

பலரும் நினைப்பதுபோல் ’ஜொள்ளு’ என்பது புதுச்சொல் அல்ல, பழையதுதான். ‘சொள்ளு’ என்றால் வாய் நீர் என்று அர்த்தம். ’சொளுசொளு என்ற வடிவதால் அதற்குச் சொள்ளு என்று பெயர் வந்தது’ என்கிறார் பாவாணர். பேசத் தொடங்கும் குழந்தைகளுக்கு வாயில் சொள்ளு வடியுமாம். சொள்ளு வடிந்தால், குழந்தை விரைவாக நன்கு பேச ஆரம்பித்துவிடும் என்று நம்பிக்கை. ‘சொள்ளுப் பெருத்தால் சொல்லுப் பெருக்கும்’ என்று பழமொழி.

அந்தச் சொள்ளுதான் பின்னர் இளம்பருவத்தில் வேறுவிதமாக (எதிர்பாலினரைப் பார்த்தால்) வடிகிறது.அதையே வாலி மேடைப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் பாடலின் மொழி எதேச்சையானதல்ல. வாலிக்கு நிஜமாகவே மேடை நாடக அனுபவம் உண்டு. நேரம் கிடைத்தால் அவரது சுயசரிதத்தைப் படியுங்கள்.

என இயக்குனர் வசந்தபாலன் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;