அஜித் ரசிகர்கள் VS விஜய் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் VS விஜய் ரசிகர்கள்

செய்திகள் 31-Aug-2014 12:35 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு காலத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் தங்கள் நாயகர்களின் படம் வரும்போது முட்டி மோதிக் கொள்வது வாடிக்கை. அப்போதைய காலகட்டத்தில் போஸ்டர்கள் அடிப்பதிலும், கட்-அவுட் வைப்பதிலும் ஒவ்வொரும் தாங்களே சிறந்த ரசிகர்கள் என்பதைக் காட்டுவதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் ரஜினியும், கமலும் கைகோர்த்து எல்லா விழாக்களிலும் பங்கேற்கத் தொடங்கியபோது இந்த மோதல்கள் குறைந்து பரஸ்பரம் இரண்டு தரப்பு ரசிகர்களும் அமைதியாக ரஜினி, கமல் இருவருக்கும் தங்களது ஆதரவுகளை கொடுக்கத் துவங்கிவிட்டார்கள்.

தற்போது, அவர்களுக்கு அடுத்து அதிக ரசிகர் வட்டாரங்களைக் கொண்டிருக்கும் அஜித், விஜய் ஆகியோரின் ரசிகர்கள் தற்போது தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்-அவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது என்பதையும் தாண்டி நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சமூக வலைதளங்களிலும் தங்களுடைய வலிமையை இருதரப்பு ரசிகர்களும் மாறி மாறி காட்டி வருகிறார்கள். என்னதான் விஜய்யும், அஜித்தும் தாங்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறோம் என தங்களின் ரசிகர்களுக்கு விளக்கினாலும் ரசிகர்களின் காதுகளில் அது எட்டியதாகவே தெரியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருதுகள் விழாவில் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெளியான தினம் ‘வீரம்’ படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு. எந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகம் என அஜித், விஜய் ரசிர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு எதிராக #CheckmateFromSuntv என்ற வாசகத்தை ட்விட்டரில் இந்திய அளவில் ‘டிரன்ட்’ செய்து வைத்தார்கள்.

இன்று... அஜித் ரசிகர்களை பழி தீர்த்துக்கொள்ள தங்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக இன்று ட்விட்டர் களத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியாகி இன்று மூன்றாவது வருடம் ஆகிறது. அதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #3YearsOfMASSiveAJITH50Mankatha என்ற வாசகத்தை இந்திய அளவில் ‘டிரன்ட்’ செய்ய, அவர்களுக்குப் போட்டியாக விஜய் ரசிகர்கள் #KATHTHIArrivesOnDiwali என்பதை ‘டிரன்ட்’ செய்து வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போதைய நிலவரப்படி இந்த ‘மல்லுக்கட்டு’ சண்டையில் முன்னணியில் இருப்பது விஜய் ரசிகர்கள். இதை முறியடித்து தங்களின் வீரத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகர்கள் தங்களின் படைகளை ஒன்று திரட்டி வருகிறார்கள்.

இவர்களின் சண்டையைப் பார்க்கும்போது ‘ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்றொரு பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;