இரும்பு குதிரை - விமர்சனம்

‘த்ரில்லிங்’ இல்லாத போரடிக்கும் பந்தயம்!

விமர்சனம் 30-Aug-2014 11:51 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : யுவராஜ் போஸ்
நடிப்பு : அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி , ஜானி நியூ ட்ரியன்
ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ், கோபி அமர்நாத்
இசை : ஜீ.வி.பிரகாஷ்
எடிட்டிங் : டி.எஸ்.சுரேஷ்

தமிழின் முதல் ‘பைக் ரேஸ்’ ஸ்டோரி... பிக்-அப் எப்படி?

கதைக்களம்

பைக் ஆக்ஸிடென்ட் ஒன்றில் தன் அப்பா இறந்துவிட, அதன் பிறகு பைக் ஓட்டுவதற்கே மிகவும் பயப்படும் அதர்வாவை, அவருடைய அம்மா தேவதர்ஷினி ‘பீட்சா டெலிவரி’ கொடுக்கும் வேலையில் சேர்த்துவிடுகிறார். ஆனாலும், அங்கேயும் அவர் மெதுவாகச் சென்று லேட்டாகவே டெலிவரி செய்கிறார். இந்நிலையில், கஸ்டமராக வரும் ப்ரியா ஆனந்துக்கும் அதர்வாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. ப்ரியா ஆனந்திற்கு ‘பைக்’ என்றால் அலாதியான ப்ரியம். எனவே, அவரை ‘இம்ப்ரஸ்’ செய்வதற்காக காஸ்ட்லி பைக் ஒன்றை வாங்க ஆசைப்படுகிறார். ப்ரியா ஆனந்தின் விருப்பத்திற்கேற்ப ‘டுகாட்டி’ சூப்பர் பைக் ஒன்றை வாங்கி, அவருடன் ஜாலியாக பயணம் செய்கிறார். ஏழெட்டுப் பேருடன் நாலைந்து சூப்பர் பைக்கில் வரும் ஜானி நியூ ட்ரியன் திடீரென அவர்களைச் சுற்றி வளைக்கிறார். அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு ப்ரியா ஆனந்தை தூக்கிச் செல்கிறார்கள். அவர்கள் யார்? எதற்காக ப்ரியா ஆனந்தை தூக்கிச் செல்கிறார்கள்? ப்ரியா ஆனந்தை அதர்வா எப்படி மீட்கிறார் என்பதற்கான விடைதான் ‘இரும்பு குதிரை’.

படம் பற்றிய அலசல்

தமிழில் இதுவரை யாரும் தொடாத ‘பைக் ரேஸ்’ ஸ்டோரியை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற இயக்குனரின் எண்ணமெல்லாம் ஓ.கே.தான். ஆனால், அதற்காக கதையிலோ, திரைக்கதையிலோ, கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலோ எந்தவித சுவாரஸ்யத்தையும் தராததை எப்படி ஏற்றுக்கொள்வது? அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி, ஜானி நியூ ட்ரியன் என ஒரு இளமைக் கூட்டத்தையே வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கலாம். ஆனால், யுவராஜ் போஸ் தன்னுடைய முதல் படத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை சரியாகக் கையாளத் தவறிவிட்டார். அதிலும் இப்படத்தின் முதல் பாதி எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல் நத்தை போல் ஊர்கிறது. அதர்வா, ப்ரியா ஆனந்தின் காதலிலும், ரொமான்ஸிலும் சுத்தமாக ஈர்ப்பே இல்லை. இடைவேளைக்கு முன்புதான் கதைக்குள்ளே செல்கிறார்கள். சரி, அதன் பிறகாவது படம் பரபரவென பறக்கும் எனப் பார்த்தால், 40 கி.மீ. வேகத்திலேயே செல்கிறது. படத்தின் கடைசி 10 நிமிடங்கள்தான் உண்மையிலேயே ‘இரும்பு குதிரை’க்கு அர்த்தம் தருகிறது.

பாடல்களும் சுமார் ரகம்தான். பின்னணி இசை ஓ.கே. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைதான் இப்படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி இருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

‘பரதேசி’ ஹீரோவா இவர்? என யோசிக்க வைத்திருக்கிறார் அதர்வா! நடிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லாத அந்த கதாபாத்திரத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் படம் முழுக்க வந்து போகிறார். டான்ஸ், ஃபைட்டில் மட்டுமே கொஞ்சம் ஸ்கோர் செய்திருக்கிறார். ப்ரியா ஆனந்திற்கும் பெரிய வேலை இல்லை. அதோடு இப்படத்தில் அவரின் புது ஹேர்ஸ்டைல் அவருக்குப் பொருத்தமாக இல்லை. ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ராய் லட்சுமி, தன் வேலையை ஒரு பாட்டிலேயே செய்து முடித்துவிட்டுப் பறக்கிறார். ஜானி நியூ ட்ரியனின் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், திரைக்கதையில் அதற்கான தேவை என்ன என்பது கேள்விக்குறியே? ரியல் லைஃப் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லாவையெல்லாம் இப்படி வீணடித்திருக்க வேண்டாம். தேவதர்ஷினி, ‘நண்டு’ ஜெகன், மனோபாலா ஆகியோர் வழக்கம்போல தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பலம்

1. கடைசி 10 நிமிட பைக் ரேஸ் சாகஸ காட்சிகள்
2. ஒளிப்பதிவு, எடிட்டிங்

பலவீனம்

1. கதை, திரைக்கதை, இயக்கம்
2. கதாபாத்திர உருவாக்கம்
3. லாஜிக்கை சுத்தமாக மறந்திருப்பது
4. பாடல்கள்


மொத்தத்தில்...

கையில் கிடைத்த ஒரு சூப்பர் ‘ஒன்-லைனை’ 2 மணி நேர திரைக்கதையாக மாற்றுவதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு வரி பஞ்ச்: ‘த்ரில்லிங்’ இல்லாத போரடிக்கும் பந்தயம்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;