சலீம் - விமர்சனம்

‘திக்... திக்’ ட்ரீட்மென்ட்!

விமர்சனம் 29-Aug-2014 1:55 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்டுடியோ 9, கிரீன் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பொரோஷன்
இயக்கம் : என்.வி.நிர்மல் குமார்
நடிப்பு : விஜய் ஆண்டனி, அக்ஷா பர்தசானி, ஆர்.என்.ஆர்.மனோகர்
ஒளிப்பதிவு : எம்.சி.கணேஷ் சந்திரா
இசை : விஜய் ஆண்டனி
எடிட்டிங் : எம்.வி.ராஜேஷ்குமார்

‘நான்’ படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக வந்த விஜய் ஆண்டனி, இப்போது ‘சலீம்’ படத்தில் மருத்துவராகியிருக்கிறார். அவரின் ட்ரீட்மென்ட் எப்படி?

கதைக்களம்

ஏழைகளுக்கு உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக இருக்கும் விஜய் ஆண்டனி பணத்திற்காக அலையும் ஒரு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார். எல்லாவற்றிலும் விஜய் ஆண்டனிக்கு நேர்மாறாக இருக்கும் அக்ஷாவுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். ஆனால், விஜய் ஆண்டனியின் பொறுமையான குணமும், தனக்காக நேரம் ஒதுக்காமல் எப்போதும் மருத்துவமனையே கதி என இருக்கும் அவரின் சேவை மனப்பான்மையும் அக்ஷாவுக்கு பிடிக்காமல் போகிறது. இதனால் ஒரு கட்டத்தில், விஜய் ஆண்டனியை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார் அக்ஷா. அதே நேரம்... ஏழைகளிடம் பணம் வாங்காமல் அடிக்கடி சிகிச்சை செய்யும் விஜய் ஆண்டனியை பணி நீக்கம் செய்கிறது அவர் வேலை பார்க்கும் மருத்துவமனை. அந்த விரக்தியில் சரக்கு அடித்துவிட்டு, ‘ஒன்வே’யில் வரும் போலீஸ்காரர் ஒருவருடன் சண்டை போட விஜய் ஆண்டனியை ஜெயிலில் தள்ளுகிறது போலீஸ்.

எல்லா பக்கமும் தன்னை நோக்கி பிரச்சனையாக வெடிக்க, போலீஸின் துப்பாக்கியை பிடிங்கிக் கொண்டு தப்பிச் செல்கிறார். அங்கிருந்து ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் விஜய் ஆண்டனி மத்திய அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை ஹோட்டல் ரூமில் கடத்தி வைக்கிறார். அதன் பிறகு மொத்த சிட்டியும் பதட்டமாக, அந்த ஹோட்டல் முன் குவிகிறது போலீஸும், மீடியாவும். விஜய் ஆண்டனி எதற்காக அமைச்சரின் மகனை கடத்துகிறார்? போலீஸ் என்ன செய்யப்போகிறது என்பதே ‘சலீம்’ படத்தின் ‘படபட’க்க வைக்கும் இரண்டாம் பாதி!

படம் பற்றிய அலசல்

வழக்கமான ‘த்ரில்லர்’ கதைதான். ஆனால், அதையே சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் எல்.வி.நிர்மல் குமார். தன் முதல் படத்திலேயே பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்... வாழ்த்துக்கள்!

சலீம் யார்? அவர் எப்படிப்பட்டவர்? சலீமுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை முதல்பாதி முழுக்க நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இடைவேளைக்கு சிறிது நேரத்திற்கு முன்பு வேகமெடுக்கும் திரைக்கதை, பரபரவென இரண்டாம்பாதியிலும் பயணித்து, க்ளைமேக்ஸில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இரண்டாம்பாதியில் போலீஸுக்கும், சலீமுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை கொஞ்சம் நீளமாக இருந்தாலும், சுவாரஸ்யமான வசனங்கள் மூலம் போரடிக்காமல் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். ‘‘பேரைச் சொன்னவுடனே தீவிரவாதினு முடிவு பண்ணாதீங்க... வேணும்னா என் பேரு விஜய்னு வச்சுக்குங்க.... இல்ல ஆண்டனினு வச்சுக்குங்க...’’ என ‘சலீம்’ போலீஸிடம் பேசும் வசனம் சாட்டையடி!

‘த்ரில்லர்’ கதையாக இருந்தால் கூட அதில் சென்டிமென்டை சரியாக பயன்படுத்தியிருப்பது படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் விஜய் ஆண்டனி டெலிபோனில் பேசும் வசனம் ஒன்று கண்கலங்க வைத்திருக்கிறது. படத்தை பரபரவென நகர்த்துவதில் பின்னணி இசை முக்கியப்பங்கு வகித்திருக்கிறது. சில இடங்களில் ‘நான்’ படத்தில் வந்த ‘தீம்’ மியூசிக்கே இப்படத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பது விஜய் ஆண்டனி டச்! ஆனால், பாடல்கள் ‘நான்’ அளவுக்கு ரசிக்க வைக்கவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற விஷயங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

தன் இரண்டாவது படத்திலும் தனக்கான சரியான கதையை தேர்வு செய்து தெளிவாக ‘ஸ்டெப்’ எடுத்து வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பின் மூலம் நிறைய பாராட்டுக்களை வாங்கியவர், இப்போது ‘சலீமி’ல் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்திருக்கிறார். குறிப்பாக, அப்பாவியாக இருக்கும் விஜய் ஆண்டனி சரக்கடித்துவிட்டு ரோட்டில் பண்ணும் அலம்பலால் தியேட்டர் அதிர்கிறது. ஹீரோயிசத்தில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற கதைகளில் விஜய் ஆண்டனி நடித்தால், அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் கண்டிப்பாக உருவாகும். நடிப்பில் அசத்தியிருக்கும் நாயகி அக்ஷா ‘ஜிம்’முக்குப் போக வேண்டியது அவசியம். ஹீரோவைத் தாண்டி இப்படத்தில் ஸ்கோர் செய்வது ‘செழியன்’ என்ற போலீஸ் அதிகாரியாக நடித்தவரும், மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகரும். இவருமே அந்தந்த கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

பலம்
1. அதிகாரவர்க்கத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கதையும், வசனமும்
2. பரபரப்பான இரண்டாம்பாதியும், ‘நச்’ க்ளைமேக்ஸும்
3. விஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு
4. ‘த்ரில்லர்’ ஸ்டோரிக்கு கைகொடுத்திருக்கும் பின்னணி இசை.

பலவீனம்
1. மெதுவாக நகரும் முதல்பாதி
2. தேவையில்லாத இரண்டு பாடல்கள்
3. சில இடங்களில் ‘லாஜிக்’கை மீறியிருப்பது.

மொத்தத்தில்...

மெதுவாக நகரும் முதல்பாதியை மறக்கடிக்கும் வகையில் இரண்டாம்பாதியில் ‘பரபரப்பை’ பற்ற வைத்து, க்ளைமேக்ஸில் ‘அட’ போட வைத்திருக்கிறது ‘சலீம்’.

ஒரு வரி பஞ்ச்: ‘திக்... திக்’ ட்ரீட்மென்ட்!

ரேடிங்:5/10.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;