ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கும் ‘சூப்பர்’ படங்கள்!

ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கும் ‘சூப்பர்’ படங்கள்!

கட்டுரை 27-Aug-2014 4:47 PM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடம் இதுவரை (கிட்டத்தட்ட 8 மாதங்கள்) 120க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வெளியான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதாவது, வருட ஆரம்பத்தில் வெளியான ஜில்லா, வீரம், அதன் பிறகு வெளியான தெனாலிராமன், கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி, அஞ்சான் ஆகியவையே. ஆனால், ரசிகர்கள் காத்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இன்னும் சில படங்களின் ரிலீஸ் இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறது.

ஆம்... ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் ‘ஐ’ படம் தீபாவளிக்கு ரிலீஸாவது 100% உறுதி என அடித்துக் கூறுகிறார்கள். அதன் முதற்கட்டமாக அர்னால்டு, ஜாக்கிசானை அழைத்து வந்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆடியோ விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நேற்று அர்னால்டை அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்தித்து அழைப்பு விடுத்து வந்திருக்கிறது ‘ஐ’ தயாரிப்பு நிறுவனம். ஆக, அக்டோபர் 22ஆம் தேதி ரசிகர்களின் காத்திருப்புக்கு முதல் விருந்து ரெடி!

‘ஐ’ படத்திற்கு முன்பே தீபாவளி ரிலீஸ் என உறுதிசெய்யப்பட்டு பட வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் இன்னொரு படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. ‘ஐ’யுடன் ‘கத்தி’யும் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் இளையதளபதி ரசிகர்கள். அதோடு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகனு’ம், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’யும் தீபாவளிக்கு வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

‘ஐ’ தயாரிப்பாளர்களின் இன்னொரு படமான உலகநாயகனின் ‘விஸ்வரூபம் 2’ படம், நவம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அவர்களே கூறியிருக்கிறார்கள். தற்போது கிராஃபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் கமலின் இன்னொரு படமான ‘உத்தம வில்லன்’ தீபாவளிக்கு முன்பே வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தியன்று (ஆகஸ்ட் 29) வெளிவருகிறது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘லிங்கா’வும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இயங்கி வருகிறது. அதோடு, சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ‘லிங்கா’ படம் தன்னுடைய பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார்.

ஆக இந்த அக்டோபரில் ‘உத்தமவில்லன்’, ‘ஐ’, ‘கத்தி’, ‘அனேகன்’, ‘பூஜை’, நவம்பரில் ‘விஸ்வரூபம் 2’, டிசம்பரில் ரஜினியின் ‘லிங்கா’ என சூப்பர் லிஸ்ட் இப்போதே ரெடி!

இன்னும் ஒரு சர்ப்ரைஸாக இந்த வருட இறுதியில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் படமும் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என விநியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

என்ன ரசிகர்களே.... ரெடியா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;