தீபாவளி ரேஸ் : யார் உள்ளே? யார் வெளியே?

தீபாவளி ரேஸ் : யார் உள்ளே? யார் வெளியே?

கட்டுரை 25-Aug-2014 5:35 PM IST Chandru கருத்துக்கள்

பண்டிகை காலங்களில் புது டிரெஸ், ஸ்வீட், விருந்து ஆகியவற்றிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களோ, அதேபோல் புதுப்பட ரிலீஸுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி ரிலீஸ் என்றால் சொல்லவே வேண்டாம்... தங்களின் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் இந்த பண்டிகை காலங்களில் வெளிவராதா என தவம் கிடப்பார்கள். அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் இந்த வருட தீபாவளிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

இந்த வருட தீபாவளி ரேஸில் கலந்து கொள்வதற்கு முதல் ஆளாக தன்னை அறிவித்தது விஜய்யின் ‘கத்தி’ படம்தான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் இரட்டை வேடம், ஜோடிக்கு சமந்தா, இசைக்கு அனிருத் என சூப்பர் விஷயங்களுடன் களம் இறங்கக் காத்திருக்கிறது ‘கத்தி’ டீம். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படம் குறித்த ஒரு சில சர்ச்சைகளால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருப்பதையும் மறுக்க முடியாது. இந்த சர்ச்சைகள் தீர்க்கப்படும் பட்சத்தில் கட்டாயம் தீபாவளிக்கு ‘கத்தி’ வெளியாகும் என்கிறார்கள்.

தீபாவளி ரேஸில் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படம். தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் இப்படத்தைத் தயாரிக்கும் விஷாலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களின் ரிலீஸ் தேதியை முதலிலிலேயே அறிவித்து, சொன்னபடியே படத்தை ரிலீஸ் செய்தும் காட்டியிருப்பதால், இந்த ‘பூஜை’ படத்தையும் கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்கள் என்கிறது ‘பூஜை’ நெருக்கமான வட்டாரம். குறிப்பாக தனது படங்களை முழுவதுமாக திட்டமிட்டு முடித்த பின்புதான் ஹரி களத்தில் இறங்குவார் என்பதால் ‘பூஜை’ ரிலீஸ் மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

அடுத்ததாக தனுஷ் நான்கு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘அனேகன்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இப்படமும் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு, போஸ்ட்புரொடக்ஷனில் பிஸியாக இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதால் ‘அனேகன்’ படம் தீபாவளிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆக... அனேகனும் தீபாவளி ரேஸில் ஆஜர்.

‘கத்தி’, ‘பூஜை’, ‘அனேகன்’ என 3 படங்கள் ஏற்கெனவே களத்தில் இருக்க, ஷங்கரின் ‘ஐ’ படமும் தீபாவளி ரிலீஸ்தான் என நேற்றிலிருந்து செய்திகள் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. விக்ரமின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி என்றால், ஏற்கெனவே வெளியாகவிருக்கும் 3 படங்களில் எந்தப் படம் ‘ஐ’யுடன் போட்டி போடும்? எது வெளியேறும்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேலான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ஐ’ வெளியாகுமானால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட்டால் மட்டுமே அவர்கள் நினைத்த வசூலை வாரிக்குவிக்க முடியும். ஏனென்றால், தற்போதைய சூழ்நிலையில் படம் ரிலீஸாகி முதல் வாரத்தில் எடுக்கப்படும் கலெக்ஷன் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் விஜய்யின் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீஸானாலும் இதே நிலைதான். முக்கிய தியேட்டர்கள் அனைத்தையும் வளைத்துப் போட்டே ரிலீஸ் செய்ய முற்படுவார்கள். ஆக, இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனென்றால் இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான பெரிய படங்களான ‘வீரம்’, ‘ஜில்லா’ ஆகிய இரண்டுமே தனித்தனியாக வெளியாகியிருந்தால் இன்னும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என விநியோகஸ்தர்கள் கூறியதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, தீபாவளியைப் பொறுத்தமட்டில் ரேஸில் ‘கத்தி’யோ, ‘ஐ’யோ எதாவது ஒரு படம் மட்டுமே வெளியாக முடியும் என அடித்துக் கூறுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

அதே நேரத்தில், ‘கத்தி’ வந்தாலும், ‘ஐ’ வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விஷால் தன்னுடைய ‘பூஜை’ படத்தை கண்டிப்பாக களமிறக்குவார் என்று கூறுகிறார்கள் அவரின் நெருங்கிய நண்பர்கள். ஏனென்றால் கடந்த வருட தீபாவளிக்கு அஜித்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘அழகுராஜா’ ஆகிய படங்கள் வெளியான போதுகூட தன் ‘பாண்டியநாடு’ படத்தை தைரியமாக அப்படங்களுடன் ரிலீஸ் செய்தார் விஷால். எனவே, இந்த முறையும் அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாக விஷால் பின் வாங்க மாட்டார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆக, மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஐ’ தீபாவளிக்கு வரும் பட்சத்தில் அதனுடன் போட்டி போட ‘பூஜை’ மட்டுமே தயாராக இருக்கும் என தியேட்டர் அதிபர் ஒருவர் நம்மிடம் கருத்துக் கூறினார். அதோடு, இப்படத்தை வாங்கி வெளியிடும் ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் இப்போதே ‘பூஜை’ படத்திற்கான தியேட்டரையும் ‘புக்’ செய்துவிட்டது என்றும் சொல்கிறார் அவர்.

இந்த ‘உள்ளே வெளியே’ போட்டியில் நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;