‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3’ - ஹாலிவுட் விமர்சனம்

தாராளாமாக விசிட் அடிக்கலாம்!

விமர்சனம் 25-Aug-2014 12:18 PM IST Top 10 கருத்துக்கள்

ஒரே படத்தில் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறதா? ஆனால், தொடர்ந்து மூன்று படங்களில் இதை சாதித்துக் காட்டியுள்ளார்கள் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ டீம். ஆம்.... ஹாலிவுட்டின் சூப்பர் ஜாம்பவான்களான சில்வெஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட், ஹாரிஸன் ஃபோர்டு, மெல் கிப்ஸன், ஜேசன் ஸ்டேத்தம், வெஸ்லி சினிப்ஸ், வான் டேம், ஜெட் லீ உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம்தான் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. தற்போது இதன் 3ம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு இப்படத்திற்கும் தொடர்ந்திருக்கிறதா?

உலகின் தீய சக்திகளை பார்னி ராஸின் (சில்வெஸ்டர் ஸ்டாலோன்) தலைமையில் வேரறுக்கும் குரூப்தான் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. இந்த குரூப்பிற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமோ அல்லது அரசின் நேரடித் தொடர்போ கிடையாது. ஆனால், தங்களால் நேரடியாக சாதிக்க முடியாத விஷயங்களை இந்த பார்னி டீமை வைத்து ரகசியமாக முடித்துக்கொள்ளும் அமெரிக்க அரசும், சி.ஐ.ஏ. உளவுத்துறையும்.

பார்னி ராஸுடன் இணைந்து ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ இயக்கத்தை உருவாக்கிய ஸ்டோன்பேங்க்ஸ் (மெல் கிப்ஸன்), தற்போது அந்த டீமிலிருந்து பிரிந்து அரசுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சோமாலியாவில் இயங்கி வரும் தீவிரவாத கும்பல் ஒன்றை அழிப்பதற்காக செல்லும் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ டீம் அங்கே தங்களின் பழைய பங்காளி ஸ்டோன்பேங்க்ஸை கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகிறது. அப்போது நடக்கும் கடுமையான சண்டையின் முடிவில் பார்னி டீமில் உள்ள டெர்ரி குரூஸை சுட்டு வீழ்த்துகிறார் ஸ்டோன்பேங்க்ஸ். உயிருக்குப் போராடும் டெர்ரி குரூஸுடன் அந்த அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறது பார்னி அன்ட் கோ.

ஏற்கெனவே தங்கள் டீமில் உள்ள பலபேரை இழந்ததால், இனி அவர்களில் யாரையும் இழக்க விரும்பாத பார்னி தன்னுடைய பழைய கூட்டாளிகளை தவிர்த்துவிட்டு, புதிய டீம் ஒன்றை உருவாக்குகிறார். அந்த டீமுடன் சென்று ஸ்டோன்பேங்க்ஸை உயிருடன் பிடித்துவிட்டு திரும்பும் வழியில், அவர்களைத் தாக்கிவிட்டு ஸ்டோன்பேங்க்ஸ் தப்பிக்கிறார். அதோடு, பார்னியின் புது டீமையும் சிறைபிடித்துச் செல்கிறார்கள். அவர்களிடம் பிடிபட்டிருக்கும் தங்கள் புதுப்படையை மீட்டெடுப்பதற்காக தனது பழைய சகாக்களுடன் புறப்படுகிறார் பார்னி. அந்தப் போராட்டத்தின் முடிவில் வெற்றி யாருக்கு என்பதே இந்த மூன்றாம் பாகத்தின் கதை.

பயங்கர குற்றவாளி வெஸ்லி சினிப்ஸை தனி சிறைச்சாலைக்கு மாற்றும் வழியில் பார்னி டீம் தப்பிக்க வைக்கும் படத்தின் ஆரம்பக் காட்சியே அதிரடி அசத்தல். அதன் பிறகு சோமாலியாவில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் செம ஜோர். ஆனால், அதன் பிறகு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், இடையிடையே சின்ன சின்ன வசனத்தின் மூலம் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் பேட்ரிக். தங்களின் பழைய டீமோடு சென்று, ஸ்டோன்பேங்க்ஸுடன் பார்னி மோதும் அந்த க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றே, நாம் கொடுத்த காசிற்கு போதும் என்கிற அளவுக்கு, திகட்டத் திகட்ட சுட்டுத் தள்ளுகிறார்கள். அதிலும் அந்த கடைசி ‘திக் திக்’ நிமிடம் எதிர்பார்த்ததுதான் என்றாலும்... மாஸ்!

இத்தனை சூப்பர் ஹீரோக்கள் நடித்திருந்தாலும், எந்த ஹீரோவுக்கும் எந்த பில்டப்பும் கொடுக்காமல் சாதாரணமாகவே அறிமுகமாகிறார்கள். ஆனாலும், தியேட்டர் அதிர்கிறது. இப்படத்தில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ டீமில் புதிதாக இணையும் ‘பவன்சர்’ ரோன்டா, அன்டோனியா, க்ளென் போவல், கெல்லன் லூட்ஸ் ஆகியோரின் துடிப்பான சண்டைகள் படத்திற்கு கூடுதல் பலம் அளிக்கிறது. குறிப்பாக அன்டோனியா அடிக்கும் லூட்டிகள் ஜாலி கலாட்டா! இவர்களுடன் வழக்கம்போல் ஸ்டேத்தமின் கத்தி வீச்சுக்களும், அர்னால்டின் கர்ஜனையும், ஸ்டாலோனின் துப்பாக்கி சாகஸங்களும் இணைந்தால் சொல்லவும் வேண்டுமா? அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள். நெகட்டிவ் என்று பார்த்தால்.... வழக்கமான கதை, இடையில் கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் என்பன போன்ற விஷயங்களைச் சொல்லலாம்.

ஆனாலும், இத்தனை ஜாம்பவான்களையும் 120 ரூபாய் செலவில் ஒரே படத்தில் பார்க்கும் பாக்கியத்தைக் கொடுப்பதற்காகவே தாராளாமாக விசிட் அடிக்கலாம் இந்த ‘தி எக்ஸ்பென்டபிள் 3’ படத்திற்கு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;