டி.எஸ்.பாலையா நூற்றாண்டு பிறந்தநாள் கட்டுரை!

டி.எஸ்.பாலையா நூற்றாண்டு பிறந்தநாள் கட்டுரை!

கட்டுரை 23-Aug-2014 2:34 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களை எடுத்துக்கொண்டல் அதில் டி.எஸ்.பாலையாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக, குணச்சித்திர நடிகராக, காமெடி நடிகராக கோலோச்சியவர் டி.எஸ்.பாலையா! அவருக்கு அன்றைய காலகட்டத்து பெரிய கதாநாயக நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இருந்தது மாதிரியான் புகழும், செல்வாக்கும் இருந்தது. இதற்கு காரணம், அவர் ஏற்று நடிப்பது எந்த வேடமாக இருந்தாலும் அதில் அவரது தனித்தன்மையான நடிப்பும், பங்களிப்பும் தான்! ஒரு சந்தர்பத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும்போது, ‘‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் டி.எஸ்.பாலைய்யாவும் ஒருவர்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த காலத்தில் சிவாஜியிடம் பாராட்டு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று கூறுவார்கள்! அப்படிப்பட்ட நடிகர் திலகம் சிவாஜியே தன்னை பாராட்டியது குறித்து கேள்விப்பட்ட பாலையா, அது குறித்து தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்! அது மாதிரி, பாலையா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார்! டி.எஸ்.பாலையாவை இன்னமும் நம் நினைவில் வைத்துக் கொள்ளும் படங்களாக அவர் நடித்த அம்பிகாப்தி, மதுரை வீரன், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் உட்பட பல படங்களை வரிசைப்படுத்தலாம். அப்பேர்பட்ட மாபெரும் கலைஞரான டி.எஸ்.பாலையா இந்த மண்ணில் பிறந்த நாள் இன்று! அதாவது 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார் பாலையா! அவர், இந்த பூவுலகில் 57 ஆண்டுகள் வாழ்ந்து 1972 ஜூலை 22-ஆம் தேதி காலமானார்! இன்று பாலையாவின் 100-ஆவது பிறந்த நாள்! இந்நாளில் அவரை நினைவு கூர்வதில் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் அடைகிறது. அவரைப்பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்காக....

எவ்வளவுதான் மிகபெரிய நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும் உடன் நடிக்கும் வில்லன் நடிகரோ அல்லது குணச்சித்திர நடிகரோ அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கும்போதுதான் அந்தக் காட்சியும் அந்தப்படமும் சிறப்பாகப் பேசப்படும். இன்றளவும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் ஜொலித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைசிறந்த நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் வில்லனாகட்டும், அல்லது குணச்சித்திர வேடமாகட்டும் அதை சரிவிகித நகைச்சுவையுடன் கலந்து கொடுத்து தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் மிகச்சிலரே. அதில் முதலிடம் பிடிப்பவர் பாலண்ணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட டி.எஸ்.பாலையா!

டி.எஸ்.பாலையா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் மதுரையில் ‘யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை’ நடத்திவந்த பாலகான நாடக கம்பெனியில் நடித்து வந்தார். அதை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் நுழைந்த இவர் நடித்த முதல் திரைப்படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’. 1934-ல் வெளிவந்த இந்தப் படத்தில் பாலையா வில்லனாக அறிமுகமானார். இதில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும்கூட அறிமுகமானார்கள்.

1937ஆம் ஆண்டு எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில் தளபதியாக வில்லன் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. அதேபோல பி.யு.சின்னப்பாவின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்கள் அவரைத் தேடி வரத் தொடங்கின.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’யிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. இப்படத்தில் எம்.ஜி. ஆரும், பாலையாவும் போடுகின்ற கத்திச் சண்டை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களிலும் சிவாஜி படங்களிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. மதுரைவீரன் படத்தில் ஆற்றில் விழுந்த பொம்மியைக் காப்பாற்றியதாக அவர் சொல்லும் கதையும் அதை அவர் சொல்லும் பாவனையும் இருக்கிறதே.. சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தரும் காட்சி அது.

சிவாஜியுடன் பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஊட்டிவரை உறவு என நிறைய கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்த பட்ங்கள் தில்லானா மோகனாம்பாளும் திருவிளையாடலும். ‘திருவிளையாடல்’ படத்தில் இசையில் புகழ்பெற்ற ‘ஹேமநாத பாகவதர்’ எனும் பாடகர் வேடத்தில் நடித்திருப்பார் டி.எஸ். பாலையா. "ஒருநாள் போதுமா" என்ற பாடலைப் பாடும்போது பாலையா அப்பாடலுக்கு வாயசைப்பதும் பலவிதமான தலையசைப்பு, கையசைப்புடன் கூடிய அபிநயங்கள் காட்டுவதும் உண்மையிலேயே அவர்தான் அப்பாடலைப் பாடுகிறாரோ என்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்துவானாக ரயிலில் அவர் அடிக்கும் கூத்துகளையும் அதற்கு சிவாஜி முறைக்கும்போதெல்லாம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதும் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிடக்கூடிய காட்சிகளா..
அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அதுமட்டுமல்ல அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார். ஜெமினிகணேசனுடன் நடித்த பார்த்திபன் கனவு, ஜெயகாந்தன் இயக்கத்தில் நடித்த ‘யாருக்காக அழுதான்’ போன்ற படங்கள் டி.எஸ்.பாலையாவின் நடிப்பிற்கு கட்டியம் கூறின.

என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு பாகவதர், சின்னப்பா, எம்.ஜிஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த இன்னொரு நடிகர் டி.எஸ்.பாலையா மட்டுமே. 'மணமகள்' படத்தில் பாலையாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரையே அவருக்குப் பரிசளித்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

உலகப்போரை பின்னணியாக வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்த ‘சித்ரா’ படத்தில் டி. எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி.வசந்தா. பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956-ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கௌபாய் வேடம். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாட்டியப் பேரொளி பத்மினி.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் படங்களில் மைல்கல் என்று சொல்ல்லாம்.. இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே. இந்த யுக்தியை இப்படத்திலும் பாலையா கையாண்டிருப்பார். இன்றைக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் பெயரைச் சொன்னதும் உடனே நினைவிற்கு வருவது நாகேஷ் ஒரு மர்மக் கதையைச் சொல்ல அதைக்கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சிதான். நகைச்சுவையின் உச்சகட்டமாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.

‘தூக்கு தூக்கி’ படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடித்திருப்பார். இன்று வரை தமிழ்ப் படங்களில் வடநாட்டு சேட் வேடத்தில் நடிப்பவர்கள் பாலையாவின் பாணியைத்தான் பின்பற்றி நடித்து வருகிறார்கள். அதேபோல கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியராக டி.எஸ் .பாலையா நடித்த பாமா விஜயம் அவருக்கு குணச்சித்திர நடிகராக மேலும் புகழ் சேர்த்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;