அஞ்சான் விமர்சனம்

வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும்!

விமர்சனம் 16-Aug-2014 5:17 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : திருப்பதி பிரதர்ஸ், யுடிவி
இயக்கம் : என்.லிங்குசாமி
நடிப்பு : சூர்யா, வித்யூத் ஜாம்வால், சமந்தா, சூரி, மனோஜ் பாஜ்பாய்
ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
எடிட்டிங் : ஆண்டனி

சூர்யா - லிங்குசாமி கூட்டணியின் ஆக்ஷன் தமாக்காவுக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு எப்படி?

கதைக்களம்

பழிவாங்கல் கதையை மும்பை தாதாக்களின் பின்னணியில் சொல்கிறது ‘அஞ்சான்’.

அண்ணன் ராஜு பாயைத் (சூர்யா) தேடி சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு வருகிறார் கிருஷ்ணா (சூர்யா). வந்த இடத்தில் ராஜு பாயைப் பற்றி ஒவ்வொரு இடமாக விசாரிக்க, அவரைப் பற்றிய விவரங்கள் ஆச்சரியமூட்டுவதாக இருக்கின்றன. சந்துரு (வித்யூத ஜாம்வால்) மும்பையின் முக்கிய தாதாக்களில் ஒருவர். அவருக்கு வலதுகரமாக இருந்து எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுப்பதில் கில்லாடி ராஜு பாய். இதனால் சந்துருவும், ராஜு பாயும் இணைபிரியாத நண்பர்களாக மும்பையில் கடத்தல் வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கின்றனர்.

இவர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயலும் மும்பை போலீஸ் கமிஷனரின் பெண்ணான ஜீவாவை (சமந்தா) மணக்கோலத்தில் கடத்தி வந்து மிரட்டுகிறார் ராஜுபாய். பின்னர் தங்கள் வேலை முடிந்ததும் ஜீவாவை வீட்டிற்கு திரும்ப அனுப்பலாம் என நினைக்கும்போதுதான் தெரியவருகிறது அவர் அந்த கல்யாணம் பிடிக்காததால்தான் எந்தவித முரண்டும் பிடிக்காமல் தானாகவே ராஜு பாயுடன் கிளம்பி வந்தது. அதன்பிறகு ராஜு பாய்க்கும் ஜீவாவுக்கும் இடையே காதல் மலர்கிறது.

இது ஒருபுறமிருக்க, மும்பையின் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் (மனோஜ் பாஜ்பாய்) சந்துருவை அவமானப்படுத்துகிறார். இதனால் இம்ரான் பாயை ராஜு பாய் கடத்தி வந்து மிரட்டுகிறார். இதனால் ஆத்திரமடையும் இம்ரான் பாய் சந்துருவை தீர்த்துக்கட்டுகிறார். அதன்பிறகு தன் நண்பன் சந்துருவை கொன்றவர்களைப் பழிவாங்க புறப்பட்டுச் சென்ற ராஜு பாய்க்கு என்ன நடந்தது என்பது அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் போகிறது. ராஜு பாய்க்கு என்னவானது? கிருஷ்ணா அவரை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதற்கான விடையை பல திருப்பங்களுடன் இரண்டாம் பாதி திரைக்கதையில் விவரித்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

படம் பற்றிய அலசல்

ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும், ராஜு பாய் பற்றி ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தொடங்கியதும் கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்குகிறது படம். அதன் பிறகு, சூரியின் சின்னச் சின்ன காமெடி, சூர்யா & சமந்தாவிற்கான ரொமான்ஸ் என போரடிக்காமல் பயணிக்கிறது. கூடவே ராஜு பாயின் அதிரடி சண்டைக் காட்சிகளும் சூர்யா ரசிகர்களை விசிலடிக்க வைத்திருக்கிறது. இடைவேளையில் ‘ட்விஸ்ட்’ ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அந்த ‘ட்விஸ்ட்’ ரசிகர்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு இதுதான் நடக்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு எளிதாகத் தெரிந்துவிடுவதால், நீளமான இரண்டாம்பாதியை கடப்பதற்கு ரசிகர்கள் ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதோடு லாஜிக் மீறல்களும் நிறைய இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் தாண்டி படத்தை தாங்கி நிற்க வைப்பவர் ஒருவர்தான். அவர் சூர்யா மட்டுமே. ஆனால், அவருக்கான பாத்திரப் படைப்பிற்கு பெரிய அளவிலான மெனக்கெடல்கள் இல்லை. ராஜு பாய்க்கான பஞ்ச் டயலாக், அவருக்கான லுக் ஆகியவற்றில் இருக்கும் கம்பீரம் காட்சிகளில் காட்டப்படாததால் ரசிகர்களால் அந்த கதாபாத்திரத்தின் வலுவை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. சூர்யாவைத் தவிர்த்து படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது சந்தோஷ் சிவனும், யுவன் ஷங்கர் ராஜாவும்தான். படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர்களுடைய உழைப்பே பக்க பலம்.

நடிகர்களின் பங்களிப்பு

வழக்கம்போல் அபாரமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் சூர்யா. கிருஷ்ணா, ராஜு பாய் என இரண்டு லுக்கிற்குமே சூர்யா கச்சிதம். டான்ஸ், ஃபைட் ஆகியவற்றோடு ஒரு பாட்டையும் பாடி தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்வது வித்யூத் ஜாம்வால்தான். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் தங்குகிறார். வழக்கமான ‘க்யூட்’ சமந்தா இப்படத்தில் கிளாமர் அவதாரம் எடுத்திருக்கிறார். பாடல்களில் சமந்தாவா இது என ஆச்சரியப்படுத்துகிறார். நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட சூரி சிரிக்க வைக்கவில்லை. வில்லன் மனோஜ் பாஜ்பாயின் நடிப்பு சிரிப்பை வர வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்தாலும், அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பலம்

1. சூர்யா, வித்யூத் ஜாம்வால்
2. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு
3. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை

பலவீனம்

1. திரைக்கதை அமைப்பும், பாத்திரப் படைப்பும்
2. 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளம்
3. எளிதாக யூகிக்கக்கூடிய திருப்பங்கள்

மொத்தத்தில்...

‘‘சின்னதா வேட்டு சத்தம் கேட்டவுடனே பறந்துபோறதுக்கு நான் புறா இல்ல... நின்னு நிதானமா இரையைத் தூக்கிட்டுப் போற கழுகுடா’’ன்னு ராஜு பாய் பேசும் வசனத்தில் இருக்கும் ‘கெத்’தை, அவருக்கான காட்சியமைப்பிலும் காட்டியிருந்தால் வெகுவாகக் கவர்ந்திருப்பான் இந்த அஞ்சான்!

ஒரு வரி பஞ்ச்: ஆச்சரியப்படுத்தவில்லை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;