கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும்!

விமர்சனம் 16-Aug-2014 3:00 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ரேவ்ஸ் கிரியேஷன்ஸ்
இயக்கம் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
நடிப்பு : சந்தோஷ், அகிலா, தினேஷ், தம்பி ராமையா
ஒளிப்பதிவு : ராஜரத்தினம்
இசை : சி.சத்யா
எடிட்டிங் : ஆர்.சுதர்சன்

வித்தியாசத்துக்குப் பெயர்போன பார்த்திபன் அப்படி என்ன வித்தியாசமா பண்ணிருக்கார்?

கதைக்களம்

தங்களோட முதல் படத்தின் கதைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கைதான் இந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.

நாயகன் சந்தோஷ் பிரதாப் தன் முதல் படத்தின் கதையை உருவாக்குவதற்காக தன் உதவியாளர்களுடன் டிஸ்கஷனைத் தொடங்குகிறார். இவர்களுடன் சினிமாவில் பல காலமாக உதவி இயக்குனராக இருந்து வரும் தம்பி ராமையாவும் இருக்கிறார். இது ஒருபுறமிருக்க, சந்தோஷ் பிரதாப்புக்கும் அவரின் காதல் மனைவி அகிலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டையும் நடக்கிறது. இதனால் தன் வீட்டில் நடத்திக் கொண்டிருந்த ‘டிஸ்கஷனை’ வேறொரு இடத்திற்கு மாற்றுகிறார்கள். அங்கே சந்தோஷ் மேல் காதல் கொள்கிறார் இன்னொரு பெண். ஆனால், தான் திருமணமானவன் என்பதை அவரிடம் சொல்லி காதலை ஏற்க மறுக்க, மறுநாள் தற்கொலை செய்து இறந்து போகிறார் அந்தப் பெண். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தியேட்டரில் தெரிந்து கொள்ளுங்கள்.

படம் பற்றிய அலசல்

சுனாமியில் சிக்கித்தவிக்கும் விஷால், வீட்டில் சீலிங் ஃபேனை திருடிக் கொண்டு போகும் விஜய் சேதுபதி என வழக்கம்போல படத்தை வித்தியாசமாகவே ஆரம்பித்திருக்கிறார் பார்த்திபன். அதன் பிறகு அவை கதை டிஸ்கஷனில் உருவாக்கப்பட்ட கற்பனைக் காட்சிகள் என்பது தெரிந்ததும் அவ்வளவுதானா? என்ற நினைப்பு வந்துவிடுகிறது. அதன் பிறகு வழக்கமாக சினிமாவுக்குள் சினிமாவால் கஷ்டப்படும் ஒரு சாதாரண திரைக்கதைக்குத் தாவியிருக்கிறார் இயக்குனர் ரா.பார்த்திபன். இருந்தாலும், தன் பாணி வசங்களையும், ‘ட்விஸ்ட்’ காட்சிகளையும் ஆங்காங்கே வைக்கத் தவறவில்லை. குறிப்பாக நடப்பதை முன்கூட்டிய தெரிந்கொள்ளும் ‘இன்டியூஷன்’ பெண் கேரக்டர் சுவாரஸ்யம். அதையே படத்தின் கதைக்கும் பயன்படுத்தியிருப்பது பார்த்திபன் ‘டச்’. யூகிக்கக்கூடிய வகையில் க்ளைமேக்ஸ் இருந்தாலும் இப்படத்தை இப்படித்தான் முடித்தாக வேண்டும்.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படம் முழுவதும் நிறைந்திருப்பது தம்பி ராமையாதான். பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் ‘சீனு’ சீனிவாசனாக மனிதர் அசத்தியிருக்கிறார். ஆனாலும், ஒரு சில இடங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறாரே என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. நாயகன் சந்தோஷிற்கு பொருத்தமான கேரக்டர். அலட்டல் இல்லாமல் சரியாக நடித்திருக்கிறார். அதேபோல் நாயகி அகிலாவிற்கும் நல்ல கேரக்டர். அவரும் நன்றாகவே செய்திருந்தாலும், பின்னணிக்குரல் அவருக்கு ‘செட்’டாகவில்லை. நாயகன் கூடவே வரும் மூன்று உதவி இயக்குனர்களும் புதுமுங்களாக இருந்தாலும் நடிப்பு ஓகே. இவர்களைத் தவிர ஆர்யாவும், அமலா பாலும் முக்கியமான சில காட்சிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். தவிர ஏகப்பட்ட நடிக, நடிகையர் சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார்கள்.

பலம்

1. பார்த்திபனின் வித்தியாசமான ஃபார்முலா
2. தம்பிராமையா + சிறப்புத் தோற்றத்தில் வந்த நடிகர்களின் பங்களிப்பு
3. சுவாரஸ்யமாக வைக்கப்பட்ட சில ‘ட்விஸ்ட்’ காட்சிகள்.
4. ஒருசில நகைச்சுவை காட்சிகள்

பலவீனம்

1. படத்தோடு ஒன்றிப் பயணிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை.
2. ஆங்காங்கே ‘பிட் பிட்’டாக வரும் பாடல்கள்.

மொத்தத்தில்...

ஆங்காங்கே பார்த்திபன் ஸ்டைல் வசனங்கள், காட்சிகள் என வழக்கமான பார்த்திபன் ஸ்டைல் படம்தான். சினிமா கனவோடு இருப்பவர்கள், ரொம்ப காலமாக சினிமாவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், ஒரு படம் எடுக்கப்படுவதற்கு பின்னணியில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா எனத் தெரியாத சாதாரண ரசிகனுக்கு இப்படம் எந்தளவுக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை.

ஒரு வரி பஞ்ச் : வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டீசர்


;