‘சந்திரமுகி’ ரிட்டர்ன்... வெல்கம்பேக் ஜோதிகா!

‘சந்திரமுகி’ ரிட்டர்ன்... வெல்கம்பேக் ஜோதிகா!

செய்திகள் 14-Aug-2014 8:46 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கதாநாயகி கோலோச்சிக் கொண்டிருப்பார். அப்படி 1999ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை கோலிவுட்டை கலக்கியவர் ஜோதிகா. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு வெளியேறிய பிரபலங்களில் ஜோதிகாவும் ஒருவர். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டபின், இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜோதிகா, சினிமாவிற்கு தற்காலிகமாக ‘குட்பை’ சொன்னார். இந்த சூப்பர் ஜோடிக்கு இப்போது இரண்டு அழகான குழந்தைகள். மனைவியாக, அம்மாவாக... தன் கடமையை செவ்வனே செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் தன் கலை ஆர்வத்திற்கு நேரம் ஒதுக்கிவிட்டார். ஆம்... ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத தமிழ் சினிமாவில், தான் நடித்த பெரும்பாலான படங்களில் தன் கேரக்டரை தனியாக நிலைநிறுத்தியதில் ஜோதிகாவின் அபார நடிப்புத் திறனுக்கு முக்கியப் பங்குண்டு. ‘வாலி’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘குஷி’, ‘சிநேகிதியே’, ‘தெனாலி’, ‘12பி’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மன்மதன்’, ‘மாயாவி’, ‘சந்திரமுகி’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘மொழி’ என இவர் நடித்த எந்தப் படமாக இருந்தாலும் அதில் ஹீரோவுக்கு இணையாக ஜோதிகாவும் பேசப்படுவார். அதிலும் ‘சந்திரமுகி’ எல்லாவற்றிற்கும் சிகரம். இப்படத்தில் கண்களாலேயே ரசிகர்களை மிரட்டிய ஜோதிகாவை ரஜினிக்கு இணையாக வைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இத்தனை புகழோடு இருந்தவர், மீண்டும் நடிக்க வருவதென்றால் எப்படிப்பட்ட தீனி போடும் கேரக்டர் அவருக்கு அமைய வேண்டும்? அவரின் காத்திருப்பு வீண் போகவில்லை. மலையாளத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பில் சூப்பர்ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்கில்தான் இப்போது ஜோதிகா நடிக்கப் போகிறார். வருமான வரித்துறையில் கிளார்க் வேலை செய்யும் மத்திய வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் ஜோதிகாவை இயக்குகிறார். சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பட்டியல் விரைவில் வெளிவரும்.

வெல்கம் ஜோதிகா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;