சென்னை டூ மலேசியா : ‘அஞ்சான்’ வெற்றி பயணம்

சென்னை டூ மலேசியா : ‘அஞ்சான்’ வெற்றி பயணம்

கட்டுரை 13-Aug-2014 3:15 PM IST Chandru கருத்துக்கள்

இன்னும் இரண்டு நாட்களில் ராஜு பாயின் தரிசனம் சூர்யா ரசிகர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. சுதந்திர தினத்தன்று சென்னையில் காலை 6 மணி முதல் ‘அஞ்சான்’ படத்தின் சிறப்புக் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. அதற்கான புக்கிங் வேலைகள் படு பிஸியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்னையைத் தவிர வெளியூர்களிலும் 8 மணிக்கெல்லாம் ‘அஞ்சான்’ காட்சிகள் தொடங்கவிருக்கின்றன. எகிறும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் ‘அஞ்சான்’ படத்தின் ஹைலைட்ஸ் சில...

* திருப்பதி பிரதர்ஸ், யுடிவி நிவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்காக பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி சென்னை, ஹைதராபாத், மும்பை, கோவா, பஞ்ச்கனி மற்றும் வெளிநாடுகளிலும் இடங்களில் பறந்து பறந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். சூர்யா - சமந்தா ஆடும் ‘ஏக் தோ தீன்’ பாடலை கோவாவில் படமாக்கியுள்ளனர். இப்படத்தின் முதல் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கியது.

* கிட்டத்தட்ட 28 படங்களில் நடித்துள்ள சூர்யா முதல்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இப்படத்தில் சமந்தா, வித்யூத் ஜாம்வால், சூரி, பிரம்மானந்தம், ராஜ்பல் யாதவ், மனோஜ் பாஜ்பாய், திலீப் தஹில், முரளி ஷர்மா, ஜோ மல்லூரி, மரியம் ஷக்ரியா என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.

* உலக சினிமா வரலாற்றிலேயே ‘அஞ்சான்’ படத்தில்தான் ரெட் டிராகன் கேமராவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அதிநவீன கேமராவின் மூலம் ‘6கே’ ரெஸொல்யூஷனில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

* முழுக்க முழுக்க டிஜிட்டல் வெர்ஷனாக வெளிவரும் முதல் தமிழ் படம் ‘அஞ்சான்’தான்.

* இப்படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, ‘அஞ்சான்’ வெளியாகும் ஆகஸ்ட் 15ஆம் தேதியே ஆந்திராவிலும் வெளியாகிறது.

* யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கிய 5 பாடல்கள் கொண்ட ‘அஞ்சான்’ ஆல்பம் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு ‘ஏக் தோ தீன்...’ பாடல் மூலம் முதல் முறையாக பாடகர் அவதாரமும் எடுத்தார் சூர்யா. சூர்யாவுக்கு யுவன் இசையமைக்கும் 7வது படம் ‘அஞ்சான்’. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தையும் சேர்த்து சூர்யா & யுவன் கூட்டணிக்கு 8வது படம்.

* ‘அஞ்சான்’ படத்தின் எதிர்பார்ப்பு இந்தளவுக்கு உயர்ந்ததற்கு ‘திருப்பதி பிரதர்ஸ்’, ‘யுடிவி’ நிறுவனங்களின் தாராளமான புரமோஷன்களும் முக்கிய காரணம். குறிப்பாக ‘அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும், ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கும் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு மலைக்க வைத்தது. இந்த வருடத்தில் வெளிவந்த டீஸர்களிலேயே ‘கோச்சடையானு’க்கு அடுத்த இடத்தில் ‘அஞ்சான்’தான் இருக்கிறது. இதுவரை இந்த டீஸரை 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதும் ஒரு பெரிய சாதனைதான். அதோடு சமீபத்தில் வெளிவந்த ‘அஞ்சான்’ டிரைலரையும் இதுவரை 15 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

* இப்படத்தில் சூர்யா ராஜு பாய், கிருஷ்ணா என இரண்டு பெயர்களில் நடித்திருக்கிறார். இது இரண்டு கெட்அப்பா? அல்லது இரண்டு சூர்யாவா என்பது இப்போது வரை சஸ்பென்ஸ். ஒருவேளை இப்படத்தில் இரட்டை வேடங்களில் சூர்யா நடித்திருந்தால், ‘பேரழகன்’, ‘வேல்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘ஏழாம் அறிவு’, ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கும் 6வது இரட்டை வேட படமாக இது இருக்கும்.

* சூர்யாவுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் சமந்தா, தமிழில் கிளாமராக நடித்த முதல் படமும் இதுதான்.

* ‘பில்லா 2’வில் அஜித், ‘துப்பாக்கி’யில் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் வித்யூத் ஜாம்வால். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரான வித்யூத்தின் சண்டைக்காட்சிகள் படத்தில் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள். ‘ஏழாம் அறிவு’ படத்திற்காக சூர்யாவும் ஏற்கெனவே மார்ஷியல் பயிற்சி பெற்றிருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து வரும் ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரில் அனல் பறக்குமாம். ‘சந்துரு’ என்ற கேரக்டரில் ராஜு பாயின் இணை பிரியாத நண்பராக இப்படத்தில் நடித்திருக்கிறார் வித்யூத் ஜாம்வால்.

* சூர்யா படத்தில் முதல்முறையாக காமெடியில் களமிறங்கியிருக்கிறார் சூரி. படத்தின் முதல் காட்சியிலேயே சூரி தோன்றுவாராம். அதேபோல் முடிவிலும் சூரியுடன்தான் படம் முடியுமாம். இவருடன் இன்னொரு காமெடியனாக இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தமும் நடித்திருக்கிறார்.

* கமலின் ‘நாயகன்’, ரஜினியின் ‘பாட்ஷா’, விஜய்யின் ‘தலைவா’, அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து மும்பையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் முதல்முறையாக நடிக்கிறார் சூர்யா.

* இதுவரை எந்த சூர்யாவின் படத்திற்கும் இல்லாத அளவில் கிட்டத்தட்ட 1500 திரையரங்குகளில் வெளியாகிறது ‘அஞ்சான்’. முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலான தியேட்டர்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

* ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘அஞ்சான்’ படம் உலகமெங்கும் வெளியானாலும், நாளை (ஆகஸ்ட் 14) மலேசியாவில் ‘பிரீமியர் ஷோ’ ஒன்றும் திரையிடப்படுகிறது. இந்த ‘ரெட் கார்பெட் பிரீமியரி’ல் லிங்குசாமி, தனஞ்செயன் ஆகியோருடன் சூர்யாவும் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

‘அஞ்சான்’ பயணத்தின் வெற்றிக்கனியைப் பறிக்க இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ளன. பேங்... பேங்... பேங்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;