‘இன் டு த ஸ்டோர்ம்’ - ஹாலிவுட் பட விமர்சனம்

இந்தப் புயல் நிச்சயம் நம்மையும் தாக்கும்!

விமர்சனம் 7-Aug-2014 3:24 PM IST Top 10 கருத்துக்கள்

ஹாலிவுட்டில் அடிக்கடி ஏதாவது பேரழிவை ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். ஏற்கெனவே ‘ட்விஸ்ட்டர்’ மூலம் சூறாவளியைக் காட்டி பயமுறுத்தியவர்கள் இந்த முறை அதைவிடப் பெரிய மரணப்புயலோடு வந்திருக்கிறார்கள். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிலீஸாகியிருக்கிறது ‘இன் டு தி ஸ்டோர்ம்’. இந்த மரணப்புயல் ரசிகர்களை எந்தளவுக்கு தாக்கியிருக்கிறது எனப் பார்க்கலாம்.

சில்வர்டன் நகரத்தில் அவ்வப்போது ‘டெர்னடோ’ எனப்படும் சூறாவளி காற்று சுழன்றடிப்பது வழக்கம். இப்படிப்பட்ட அந்த ‘டெர்னடோ’வை எதிர்பார்த்து வீடியோ எடுக்க காத்துக் கொண்டிருக்கிறது ஆலிசன், பீட் குரூப். மணிக்கு 170 மைல் வேகத்தில் வீசும் காற்றிலிருந்து தப்பிப்பதற்காகவே பிரத்யேக ‘டாங்கர்’ வாகனம் ஒன்றையும், வானிலை நிலைகளை அறிந்துகொள்வதற்காகவே தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய வேன் ஒன்றையும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். தாங்கள் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் அந்தப் புயல் வருவதை கணிக்கும் இவர்கள் அதை நோக்கி பயணிக்கிறார்கள்.

அந்தப் புயல் சில்வர்டன் நகரைத் தாக்கும் அந்த நேரத்தில்தான் புரொபஸர் கேரியின் கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே விழாவில் அவரின் இரண்டாவது மகன் ட்ரேயும் இருக்கிறான். புரொபஸரின் முதல் மகன் டோனியும், அவனது காதலி கேட்லினும் புராஜெக்ட் ஒன்றிற்காக பாழடைந்த பங்களா ஒன்றிற்கு அதே நேரத்தில் சென்றிருக்கிறார்கள். திடீரெனத் தாக்கும் இந்தப் புயலால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கல்லூரிக்குள் ஓடுகிறார்கள்.

இன்னொருபுறம் அந்த புயலால் பழடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குகிறார்கள் டோனியும், கேட்லினும். கடைசியாக தன்னிடம் பேசிய டோனி பாழடைந்த பங்களா ஒன்றில் தான் மாட்டிக் கொண்டிருப்பதாக புரொபஸர் கேரிக்கு போனில் தெரிவிக்கிறான். அதோடு தொலைத்தொடர்பு சாதனங்களும் செயலிழந்து போகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், டோனியைத் தேடிக் கண்டு பிடித்து அவனைக் காப்பாற்றுவதற்காக புறப்படுகிறார்கள் கேரியும், ட்ரேயும். வழியில் அவர்களுக்கு உதவுகிறார்கள் ஆலிசனும், பீட்டும்.

அதே நேரம் அடுத்தடுத்து உருவாகும் இரண்டு ‘டெர்னடோ’க்கள் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய சூறாவளி ஒன்றும் உருவாகிறது. மொத்த நகரமே அழிந்து போகுமோ என்ற அச்சத்தோடு செல்கிறது அவர்களின் பயணம்? அந்தப் பயணத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? டோனியையும், கேட்லினையும் அவர்கள் காப்பாற்றினார்களா? புயலைப் படமெடுக்க வேண்டும் என்று நினைத்த ஆலிசன், பீட் ஆகியோரின் நிலை என்ன? என்பதற்கான விடைதான் இப்படத்தின் க்ளைமேக்ஸ்!

வழக்கமாக சொல்லப்படும் அதே கதைதான் இப்படத்திலும். பெரிய ஆபத்து ஒன்று வரும். அதில் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் எங்காவது ஒரு மூலையில் மாட்டிக் கொள்வார். அவரைத்தேடி யாராவது கிளம்பிப் போவார்கள்... பல சாகஸங்களுக்குப் பிறகு எல்லாம் சுபம்! இதையேதான் ‘இன் டு த ஸ்டோர்ம்’ படத்திலும் காட்டியிருக்கிறார்கள். கதை இப்படித்தான் பயணிக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளை சுவாரஸ்யமாக படமாக்கத் தவறவில்லை. குறிப்பாக இந்த பரபர கதையிலும் ‘கிச்சுகிச்சு’ மூட்டுவதற்காகவே இரண்டு கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். ஆபத்தான சூழ்நிலையிலும் தங்களைத் தாங்களே படமெடுத்து அதை ‘யு-டியூப்’பில் பதிவேற்றம் செய்து, பணம் சம்பாதிக்கத் துடிக்கும் அந்த இரண்டு பேர் வரும் காட்சிகள் கல கல!

வெறும் கிராபிக்ஸை மட்டும் நம்பாமல், கதைக்குள் ஒரு அழகான காதல், அப்பா - மகன் பாசம், இன்றைய இளைஞர்களின் மனோபாவம் என பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். சுழன்றடிக்கும் சூறாவளியை தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சூறாவளிக் காற்று தீப்பீழம்பாக மாறி, ஒரு ஆளை சுருட்டித் தூக்குமிடத்தில் ‘பகீரெ’ன்று இருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற விஷயங்கள் பரபரப்பான காட்சிகளுக்கு பக்கபலமாக இருக்கின்றன. எல்லாமே ஓகேதான் என்றாலும், அவ்வளவு பெரிய புயல் தாக்கும் நகரத்தில் மொத்தமே ஒரு 50, 60 பேர்களைத்தான் காட்டுகிறார்கள். யாருமே இல்லையா அந்த நகரத்தில்? அதேபோல் மீட்புப் பணிகளையும் பெரிய அளவில் காட்டவில்லை. இதுபோன்ற ‘லாஜிக்’ விஷயங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இந்தப் புயல் நிச்சயம் நம்மையும் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

John Swetnam திரைக்கதையை அமைத்திட, Steven Quale படத்தை இயக்கியுள்ளார். Richard Armitage, Sarah Wayne Callies, Matt Walsh என பலரும் இதில் நடித்துள்ளனர்! Brian Tyler இசை அமைக்க, Brian Pearson ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;