சரபம் - விமர்சனம்

கர்ஜிக்கவில்லை இந்த சிங்கப் பறவை!

விமர்சனம் 1-Aug-2014 8:47 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : அருண் மோகன்
நடிப்பு : நவீன் சந்திரா, சலோனி, ‘ஆடுகளம்’ நரேன்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
இசை : பிட்டோ மைக்கேல்
எடிட்டிங் : லியோ ஜான் பால்

சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த வரவு ‘சரபம்’.

கதைக்களம்

வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் நவீன் சந்திராவிற்கு, பிரபல தொழிலதிபர் நரேனின் மகள் சலோனியை ஒரு நாள் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. தன் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வந்திருப்பதாக சொல்லும் சலோனி, அன்று ஒருநாள் இரவு மட்டும் நவீன் சந்திராவின் வீட்டிலேயே தங்குவதற்கு உதவி கேட்கிறார். அன்றைய இரவின் சந்திப்பில் இருவருக்குமே மிகப்பெரிய பணத்தேவை இருப்பதை ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து கொள்கிறார்கள். இதனால் இருவரும் சேர்ந்து திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார்கள். தன்னை கடத்தியிருப்பதாகக்கூறி தன் அப்பாவை மிரட்டி 30 கோடிகளை வாங்கிக் கொண்டு, அதை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என நவீன் சந்திராவிற்கு ஐடியா கொடுக்கிறார் சலோனி. எல்லாம் சரியாக நடந்து முடிந்து, சலோனியை திட்டமிட்டபடி இரவில் நடுரோட்டில் இறக்கிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்புகிறார் நவீன் சந்திரா. ஆனால், காலையில் சலோனியை யாரோ கொலை செய்து கடற்கரையில் பிணத்தைப் போட்டிருப்பதாக டிவியில் செய்தி வந்ததைப் பார்த்ததும் நவீன் சந்திராவிற்கு தூக்கிவாரிப் போடுகிறது. அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள்தான் ‘சரபம்’ படத்தின் ஹைலைட்ஸ்!

படம் பற்றிய அலசல்

இப்படத்தை 30 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார்களாம். இரண்டு வீடுகள், இரண்டு ஆபிஸ், இரண்டு மூன்று அவுட்டோர் காட்சிகள் என இப்படத்தை எடுப்பதற்கு 30 நாட்களே அதிகமோ என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது இப்படத்தின் ‘மேக்கிங்’! வெறும் ட்விஸ்ட்டுகளை மட்டுமே நம்பி திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அதுவும் இடைவேளைக்குப் பிறகே அந்த திருப்பங்களும் படத்தில் வருகின்றன. முதல்பாதியில் கதையை நகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு, வசனங்களை வைத்தே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண் மோகன். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டும் ஏற்கெனவே ஒரு படத்தில் பார்த்ததுதான். திரைக்கதையில் ட்விஸ்ட் வைக்க காட்டிய மெனக்கெடல்களை சுவாரஸ்யமான காட்சிகளை வைப்பதற்கு காட்டியிருந்தால் ‘சரபம்’ கவர்ந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

ஒன்றிரண்டு படங்களில் நடித்திருக்கும் நாயகன் நவீன் சந்திராவிற்கு இப்படத்தில் நடிப்பதற்கேற்ற நல்ல வேடம்தான். ஆனால் பெரும்பாலும் ஒரேமாதிரியான ‘ரியாக்ஷன்’களை கொடுக்கிறார். நாயகனைவிட நாயகிக்கே இப்படத்தில் அதிக முக்கியத்தவம். எதைப்பற்றியும் கவலைப்படாத பணக்கார யுவதியாக தன் வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சலோனி. ‘ஆடுகளம்’ நரேனுக்கு வழக்கமான கேரக்டர்தான். தொடர்ந்து இதுபோன்ற கேரக்டர்களாகவே அவர் நடித்து வருவதாலோ என்னவோ நரேனின் நடிப்பு கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது. வேறு யாருக்கும் இப்படத்தில் பெரிய வேலையில்லை.

பலம் :
1. இரண்டாம்பாதியில் வைக்கப்படும் சில ட்விஸ்ட்டுகள்.

பலவீனம்:
1. மெதுவாகவும், சுவாரஸ்யமில்லாமலும் நகரும் முதல்பாதி.
2. லாஜிக்கைப் பற்றி கவலையே படாத திரைக்கதை
3. டெக்னிக்கலாகவும் இப்படத்தில் எந்த பெரிய மெனக்கெடலும் இல்லாதிருப்பது


மொத்தத்தில்...

‘ட்விஸ்ட்’ இருந்தால் மட்டும் போதும் ரசிகர்கள் திருப்தியாகிவிடுவார்கள் என்ற ‘சரபம்’ டீமின் எண்ணம் நிறைவேறுவது கொஞ்சம் கடினம்தான்!

ஒரு வரி பஞ்ச் : கர்ஜிக்கவில்லை இந்த சிங்கப் பறவை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;