ஜிகர்தண்டா - விமர்சனம்

முதல் பாதி தித்திப்பு... பிற்பாதி திகட்டல்!

விமர்சனம் 1-Aug-2014 8:59 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : குரூப் கம்பெனி
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
நடிப்பு : சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா, கருணாகரன்
ஒளிப்பதிவு : கேவ்மிக் யு ஆரி
இசை : சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங்: விவேக் ஹர்ஷன்

‘பீட்சா’ எனும் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படம் ’ஜிகர்தண்டா’ என்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வந்தது! அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பூர்த்தி செய்துள்ளாரா?

கதைக்களம்

இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும் என்கிறார். இதனால் ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கை வரலாறைத் தெரிந்து கொண்டு அதையே படமாக்கலாம் என்ற முடிவுக்கு வரும் சித்தார்த் ரவுடிகளின் ஹிஸ்ட்ரியைத் தோண்டி எடுக்கிறார். அவரின் தேடலின் முடிவில் மதுரையை கலக்கிக் கொண்டிருக்கும் அதி பயங்கர ரௌடி அசால்ட் சேது (பாபி சிம்ஹா) கண்களில் சிக்குகிறார். அசால்ட் சேதுவின் வாழ்க்கை வரலாறைத் தெரிந்துகொள்வதற்காக தன் மதுரை நண்பன் கருணாகரன் உதவியுடன் அவனை நெருங்க முயற்சிக்கிறார் சித்தார்த். ஒரு கட்டத்தில் அசால்ட் சேதுவின் அடியாள் ஒருவனுடன் சித்தார்த்க்கு தொடர்பு ஏற்படுகிறது. அவனை பகடை காயா வைத்து சேதுவை பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கும் கார்த்திக், ஒரு இக்கட்டான சூழலில் சேதுவிடம் செமத்தியாக மாட்டிக் கொள்ள, புலியின் வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது சித்தார்த்துக்கு. சேதுவின் கைகளில் சிக்கிக் கொள்ளும் சித்தார்த்தின் நிலைமை என்னாவாகிறது என்பதை பரபரப்பும், கலகலப்பும் கலந்த இரண்டாம் பாதி திரைக்கதையில் விவரிக்கிறது ‘ஜிகர்தண்டா’.

படம் பற்றிய அலசல்

கேங்ஸ்டர் கதை என்பது தமிழுக்குப் புதிதல்ல. ஆனாலும், தன் ஸ்டைலில் வித்தியாசம் கலந்து அதை சொன்ன விதத்தில் தனித்துவம் பெறுகிறார் கார்த்திக் சுப்பராஜ். முதல் பாதியில் ரவுடிகளின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் கதையை வேறொரு பாதைக்கு மாறும்போது, முதல்பாதியில் இருந்த பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ‘தி டர்டி கார்னிவல்’ கொரியன் படத்தின் சாயல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டாம்பாதி திரைக்கதையில் செய்த சில மாற்றங்களால் படம் தடுமாறுகிறது. அதிலும் க்ளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் படத்திலிருந்து தனித்து நிற்கிறது. அதேபோல் இரண்டாம்பாதியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோவாக சித்தார்த்! ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படியாக அவருக்கு எந்த ஸ்கோப்பும் இப்படத்தில் இல்லை. படத்தின் ஹீரோ சித்தார்த்தான் என்றாலும் திரைக்கதையில் ஹீரோவாக மிரட்டுபவர் சிம்ஹாதான்! அவரது அதிரடி வில்லத்தனங்களும், காமெடிகளும் மொத்த தியேட்டரையும் மிரளும் வைக்கிறது, சிரிக்கவும் வைக்கிறது. நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்! லட்சுமி மேனன் கேரக்டரிலும் அழுத்தமில்லை! இவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது ’ஜிகர்தண்டா’ ஏமாற்றமே தருகிறது. சித்தார்த்துடனான காதல் காட்சிகளிலும் அழுத்தமே இல்லை. இவர்களைத்தவிர பாபி சிம்ஹாவின் அடியாட்களாக வரும் மூன்று பேரின் நடிப்பு ரொம்பவும் யதார்த்தம்.

பலம் :
1. விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த முதல் பாதி
2. பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பும், கருணாகரனின் காமெடி காட்சிகளும்.
3. சந்தோஷ் நாராயணின் இசையில் அமைந்துள்ள பாடல்களும், பின்னணி இசையும்.
4. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்:
1. ரொம்பவும் நீளமான இரண்டாம் பாதி திரைக்கதை.
2. திருப்தியைக் கொடுக்காத க்ளைமேக்ஸ்.
3. அழுத்தமில்லாத காதல் காட்சிகள்.

மொத்தத்தில்...

இரண்டாம்பாதி திரைக்கதையின் தேவையில்லாத காட்சிகளைக் குறைத்து, இன்னும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தால் ‘ஜிகர்தண்டா’வின் தனித்துவம் நிச்சயம் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : முதல் பாதி தித்திப்பு... பிற்பாதி திகட்டல்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;