‘அஞ்சான்’ இசை விமர்சனம்

‘அஞ்சான்’ இசை விமர்சனம்

இசை விமர்சனம் 25-Jul-2014 12:11 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : யுடிவி, திருப்பதி பிரதர்ஸ்
இயக்கம் : என்.லிங்குசாமி
நடிப்பு : சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், சூரி
இசை : யுவன் ஷங்கர் ராஜா

‘சண்டக்கோழி’, ‘பையா’ என ஏற்கெனவே சூப்பர்ஹிட் ஆல்பங்களைத் தந்துள்ள லிங்குசாமி - யுவன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது ‘அஞ்சான்’ படத்தின் மூலம். இந்தமுறை சூர்யா என்ற மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தும் இப்படத்திற்குக் கிடைத்திருப்பதால், எக்கச்சக்க எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கிறது ‘அஞ்சான்’ பாடல்கள். இப்போதெல்லாம் ஆக்ஷன் படங்களென்றாலே அந்த ஆல்பத்தில் தீம் மியூசிக் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ‘அஞ்சான்’ ஆல்பத்தில் தீம் மியூசிக் எதுவும் இல்லாமல், ‘நச்’சென ஐந்து பாடல்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அதில் தமிழ் சினிமாவின் புதிய பாடகராக களமிறங்கியிருக்கும் சூர்யாவின் பாடலும் அடக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த ‘அஞ்சான்’ ஆல்பம் எப்படி இருக்கிறது?

பேங்... பேங்... பேங்...
பாடகர் : கே.ஜி.ரஞ்சித்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


‘அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணி இசையாக ஏற்கெனவே ஹிட்டடித்த டியூன் என்பதால் கேட்ட முதல் தடவையிலேயே சட்டென பிடித்துப் போகிறது ‘பேங்... பேங்...’ ஆக்ஷன் தமாகா! இந்தப் பாடல் ராஜு பாயின் அறிமுகப் பாடலாக ‘மான்டேஜ்’ பாணியில் உருவாக்கப்பட்டிருக்கலாம். யுவனின் அதிரடி இசை, ரஞ்சித்தின் எனர்ஜியான குரல், கார்க்கியின் மாஸ் வரிகள் என இப்பாடல் ‘செம’ ஷார்ப்! சூர்யா ரசிகர்களின் காலர் டியூனாக இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ள பாடல்.

ஒரு கண் ஜாடை...
பாடகர் : பென்னி தயாள், ஸ்வேதா பண்டிட்
பாடலாசிரியர் : விவேகா


சூர்யா, சமந்தாவிற்கான டூயட் பாடலாக திரையில் இடம்பிடிக்க இருக்கும் இப்பாடல் முதல்முறை கேட்கும்போதே ஏற்கெனவே நிறைய இடங்களில் கேட்டதுபோன்ற உணர்வைத் தருகிறது. ஆனாலும், யுவனின் எலக்ட்ரிக் கிடார் பாடலின் பின்னணியில் எனர்ஜியை ஏற்றுகிறது. பென்னி தயாள், ஸ்வேதா பண்டிட் குரல்கள் இப்பாடலுக்கு சரியான தேர்வு. ‘வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்... எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்ததால் மெய் மறந்தேன்’ என விவேகாவின் வரிகளில் ரொமான்ஸ் டச்! காட்சிகளோடு பார்க்கும்போதுதான் இப்படாலின் வெற்றி எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரிய வரும்.

ஏக், தோ, தீன், சார்...
பாடகர்கள் : சூர்யா, ஆன்ட்ரியா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்


‘இப்பாடலைப் பாடிக் கொண்டிருப்பது எங்கள் அஞ்சான்’ என ஒவ்வொரு சூர்யா ரசிகரும் தியேட்டரில் எழுந்து நின்று ஆடுவதற்கு ஏற்ற ஐட்டம் சாங் இது. மெலடிப் பாடல்களுக்குப் பெயர் பெற்ற கவிஞர் நா.முத்துகுமாரை ‘குத்து’ப் பாடலுக்கு வரிகள் தரச் சொல்லியிருக்கிறார்கள். யுவனின் அதிரடி இசையில் சூர்யாவின் வாய்ஸில் உருவான பாடல் என்பது மட்டுமே இப்பாடலின் சிறப்பு. இதுவும் ‘காட்சியோடு பார்க்கும்போது மட்டுமே பிடிக்கலாம்’ ரகம்தான்!

காதல் ஆசை...
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, சூரஜ் சந்தோஷ்
பாடலாசிரியர் : கபிலன்


‘இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம் யுவன்’ என மனதில் நினைக்கத்தோன்றுகிறது இந்த ‘காதல் ஆசை’ மெலடிப் பாடலைக் கேட்டதும்! யுவனின் மயக்கும் குரலுடன், சூரஜ் சந்தோஷின் ஹம்மிங்கும் கைகோர்த்து உருவாகியிருக்கும் இந்த ‘சூஃபி ஸ்டைல்’ மெலடி திரும்பத் திரும்ப கேட்கும் ரகம்! அனேகமாக இந்த வருடத்தின் ‘டாப் 10’ மெலடியில் இப்படாலுக்கு கண்டிப்பாக இடமுண்டு.

சிரிப்பு என்...
பாடகர் : எம்.எம்.மானஸி
பாடலாசிரியர் : விவேகா


‘பப்’பில் பாடப்படும் வழக்கமான கேப்ரே வகையறாதான் இந்த ‘சிரிப்பு என்...’ பாடலும். ஆனாலும், கிலோ கணக்கில் ‘கிக்’ ஏற்றுகிறது மானஸியின் ‘ஹஸ்கி’ வாய்ஸ்! ‘டான்’களுக்கிடையே நடக்கும் சந்திப்பின்போது ஒலிக்கும் பாடலாக இது திரையில் தோன்றலாம். அல்லது பாடல் முடிந்ததும் ‘திருப்புமுனை’ ஏதாவது நிகழலாம் என பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மனக்கண்ணில் ‘அஞ்சான்’ படமும் ஓடுகிறது.

மொத்தத்தில்.... ‘அஞ்சான்’ ஆல்பத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அதில் யுவன் வாய்ஸில் உருவாகியிருக்கும் ‘காதல் ஆசை...’ பாடல் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது. மற்ற பாடல்கள் அனேகமாக படத்தோடு பார்க்கும்போதே பெரிய அளவில் கவர வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;