திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்

‘நச்’சென்று ஆரம்பித்து ‘சப்’பென்று முடிந்த கல்யாணம்!

விமர்சனம் 24-Jul-2014 6:05 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ்
இயக்கம் : அனீஷ்
நடிப்பு : ஜெய், நஸ்ரியா, தீக்ஷிதா
ஒளிப்பதிவு : லோகநாதன்
இசை : ஜிப்ரான்
எடிட்டிங் : காசி விஸ்வநாத்

நஸ்ரியா தமிழில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரின் கடைசிப் படமாக வெளிவந்திருக்கிறது ‘திருமணம் எனும் நிக்காஹ்’. இந்து - முஸ்லீமை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?

கதைக்களம்

ஒரு சின்ன ரயில் பயணத்தின் தேவைக்காக தங்களின் ஒரிஜினல் மதப் பெயர்களை மாற்றி வேறு மதப் பெயரில் பயணம் செய்யும் நாயகன், நாயகிக்கிடையே உருவாகும் காதலும், அதனால் ஏற்படும் சுவாரஸ்யமான குழப்பங்களுமே இந்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’.

ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும், அபு பக்கர் எனும் பெயரில் பயணம் செய்யும் ஜெய்யும் முதல் சந்திப்பிலேயே ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இருவருமே ஆச்சாரமான இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், எங்கே தான் ஒரு இந்து என்பது தெரிந்துவிட்டால் காதல் கைவிட்டுப்போய்விடுமே எனப்பயப்படும் இருவருமே தங்கள் ஒரிஜினல் மதங்களை மறைத்து முஸ்லீமாகவே தங்களைக் காட்டிக் கொண்டு காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் தங்கள் மதத்திலேயே வேறொரு வரனைப் பார்த்து மண முடிக்க நிச்சயம் செய்கிறார்கள் ஜெய், நஸ்ரியா குடும்பத்தினர். இதன் பிறகு ஜெய்யும், நஸ்ரியாவும் என்ன செய்கிறார்கள்? தாங்கள் இருவருமே ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிந்ததா? இல்லையா? என்பதே ‘திருமணம் எனும் நிக்காஹ்’.

படம் பற்றிய அலசல்

இந்து - முஸ்லீம் காதல், இந்து - கிறிஸ்து காதல் என ஏகப்பட்ட மதம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால், இதிலிருந்து முற்றிலுமாக வேறு வகையான காதல் ஒன்றை தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்து ‘சபாஷ்’ வாங்குகிறார் இயக்குனர் அனீஷ். ரொம்பவும் ‘சென்சிட்டிவான’ ஒரு கதைக்களத்தைக் கையிலெடுத்து அதைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்.

படத்தின் அறிமுகக் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து, அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் அமைத்து ரசிகர்களை கதைக்குள் ஈஸியாக உள்ளிழுக்கிறது முதல் பாதி திரைக்கதை. ஆனால், தாங்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என நாயகனுக்கும் நாயகிக்கும் தெரிந்த பிறகு அவர்கள் எடுக்கும் முடிவும், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களும் செம போர்! அதேபோல் க்ளைமேக்ஸும் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தான் சொல்ல வந்த கருத்திலிருந்து இயக்குனர் விலகி வேறு எதையோ சொல்ல வர, கடைசியில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. இரண்டாம் பாதி திரைக்கதையிலும், க்ளைமேக்ஸிலும் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத காதல் படமாக அமைந்திருக்கும் இந்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’.

நடிகர்களின் பங்களிப்பு

வழக்கமான ஜெய். அதே பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு. ஆனாலும் போரடிக்கவில்லை. நடிப்பதற்கே வாய்புள்ள நல்ல வேடம் நஸ்ரியாவுக்கு. அவரின் மற்ற படங்களைவிட இதில் அவரின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. நஸ்ரியாவின் கடைசிப் படம் என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய வருத்தமாகத்தான் இருக்கும். இவர்கள் இருவரைத் தவிர, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து போனாலும் கதையை நகர்த்துவதற்கு பயன்பட்டார்களே தவிர யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. நஸ்ரியாவின் ஃப்ரெண்டாக வரும் தீக்ஷிதா மட்டுமே நினைவில் நிற்கிறார். பாண்டியராஜன் படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் தேவையில்லாமல் வந்து போயிருக்கிறார்.

பலம்

1. இந்து - முஸ்லீம் கதையையே வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயன்றிருக்கும் கதைக்களம்.
2. ஜிப்ரான் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும்
3. ஜெய், நஸ்ரியா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மற்றும் அவர்களின் நடிப்பு

பலவீனம்

1. குழப்பமான இரண்டாம்பாதி திரைக்கதை
2. க்ளைமேக்ஸ்
3. வழக்கமான லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்... தமிழ் சினிமா மறந்துபோன காதல் கதையை மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’வின் சின்னச் சின்ன குறைகளைக் களைந்திருந்தால் பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ‘நச்’சென்று ஆரம்பித்து ‘சப்’பென்று முடிந்த கல்யாணம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;