சிறப்புக் கட்டுரை : உழைப்பால் உயர்ந்த ‘அஞ்சான்’

சிறப்புக் கட்டுரை :  உழைப்பால் உயர்ந்த ‘அஞ்சான்’

கட்டுரை 23-Jul-2014 10:40 AM IST Chandru கருத்துக்கள்

இன்று... 39-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ‘இளைய மார்கண்டேயன்’ சூர்யா! நடிகர் சிவகுமாரின் மகன் சரவணனாக வாழ்க்கையைத் தொடங்கி, சூர்யாவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், இன்று அஞ்சானாக ரசிகர்கள் நெஞ்சில் உயர்ந்து நிற்கிறார். சூர்யாவின் இந்த வளர்ச்சிக்கு மூன்று காரணங்கள்தான் நிச்சயம் இருக்க முடியும். உழைப்பு, கடின உழைப்பு, அயராத உழைப்பு. இதுதான் அவரின் வெற்றி ரகசியம்!

‘நேருக்கு நேர்’ படத்தில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய நடிகர் சூர்யா தனது முதல் ஆறு படங்களில் ஒரு சாதாரண ஹீரோவாகத்தான் வலம் வந்தார். அதன் பிறகு, விஜய்யுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த ‘ஃப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வெள்ளிவிழா காண, மீடியா வெளிச்சம் சூர்யா மேல் விழத் தொடங்கியது. ‘இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்’ என ‘நந்தா’ பட வாய்ப்பு வர, தனக்குள் இருந்த தனிப்பட்ட திறமைகளை புடம் போட்டுப் பார்த்தார் சூர்யா. அவரின் சினிமா பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் இயக்குனர் பாலாவிற்கு முக்கியப் பங்குண்டு. ‘நந்தா’ படத்திற்கு பிறகு நடந்தவையெல்லாம் ‘சூர்யாவின் மேஜிக்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

‘மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன்’ என அடுத்தடுத்து வரிசையாக சூர்யாவின் படங்கள் சூப்பர்ஹிட்டாக, தான் நடிக்க வந்த 7 வருடங்களுக்குள்ளேயே முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு வந்தார் சூர்யா! அதன் பிறகு ஆய்த எழுத்து, மாயாவி என இரண்டு படங்கள் கொஞ்சம் சறுக்க, ‘கஜினி’, ‘ஆறு’ படங்களின் மூலம் அதற்கும் சேர்த்து வைத்து சூப்பர்ஹிட் கொடுத்தார்.

அயன், சிங்கம், ஏழாம் அறிவு, மாற்றான், சிங்கம் 2 என சூர்யாவின் மார்க்கெட் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, வெளிநாடு என ரஜினி, கமலின் படங்களுக்கு இணையாக தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது. உண்மையில் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனித்தால் ரஜினி, கமல் இருவருமே சூர்யாவுக்குள் இருப்பது தெரியவரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை விதமான ரசிகர்களையும் கொண்டிருப்பதில் - ரஜினி, எந்த கேரக்டராக இருந்தாலும் அந்தக் கேரக்டராக மாறும் அளவிற்கு தனது கெட்-அப்களை மாற்றிக்கொள்வதில் - கமல் என இரண்டு பேரும் சேர்ந்த கலவைதான் சூர்யா.

முதல் படத்திலேயே பட்டம் வைத்துக்கொள்ளும் சில நடிகர்களுக்கு மத்தியில், இத்தனை உயரத்திற்கு வந்த பிறகும்கூட பெயருக்கு முன்னால் எந்தப் பட்டமும் போட்டுக் கொள்ளாதவர் சூர்யா. அவரின் இந்த பண்பும், அவரின் ஒழுக்கமும்தான் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களைத் திரட்டித் தந்துள்ளது. அதோடு தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ‘சூர்யா நற்பணி இயக்கங்களும்’ ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

தன்னை ஒரு நடிகனாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளாமல் சேவையிலும் பங்குகொண்டு, மனிதநேயத்தை வெளிப்படுத்தவும் அவர் எப்போதும் தவறியதில்லை. அத்துடன் வசதியற்ற மாணவ மாணவியருக்கு தனது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் கல்வி கற்பதற்கான உதவிகளையும் செய்து வருபவர் சூர்யா! அவரைப்போலவேதான் அவரின் ரசிகர்களும்... சூர்யாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தங்கள் சந்தோஷத்திற்கு போஸ்டரையும், பேனரையும் அடித்துக் கொண்டாலும், இரத்த தானம் செய்வதையே பிரதான வழக்கமாகக் கொண்டவர்கள்.

தந்தை சிவகுமார் கற்றுக்கொடுத்த மனதை அமைதிப்படுத்தும் யோகா, ஒழுக்கம், வெற்றி ரகசியம் ஆகியவற்றைப் பின்பற்றி தன் சினிமா பயணத்தை அமைத்துக் கொண்டதும், சூர்யாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் என்பது சினிமா உலகம் கண்ட உண்மை.

இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘அஞ்சான்’ பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்திருக்கிறார் சூர்யா. இதுவரை சூர்யாவின் எந்தப் படத்தின் டீஸரும் இல்லாத அளவிற்கு ‘அஞ்சான்’ டீஸரை ரசிகர்கள் மாபெரும் வெற்றியாக்கி ரசிகர்களும் அவரை உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளனர்.

வெற்றிமேல் வெற்றிகள் குவித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிற்கு இன்னும் காத்திருக்கின்றன பல உயரங்கள். இந்த சந்தோஷமான தருணத்தில், ரசிர்களோடு சேர்ந்து உற்சாகமாக நாமும் சொல்லலாம் ‘ஹேப்பி பர்த் டே அஞ்சான்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;