கோலிவுட்டில் வலம் வரும் பேரன்கள்!

கோலிவுட்டில் வலம் வரும் பேரன்கள்!

கட்டுரை 22-Jul-2014 4:58 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இதர மொழி சினிமாக்களிலும் முன்னாள் நட்சத்திரங்களின் வாரிசுகள், பேரன்கள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி நடித்து வரும் ஒரு சில ‘பேரன்’ நடிகர்கள் பற்றிய ஒரு சிறு கட்டுரை இது.

‘கும்கி’யில் கலக்கிய நடிகர் திலகத்தின் பேரன்!

மறைந்த ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் புதல்வர் என்ற பின்னணியோடு சினிமாவில் நடிகராக களம் இறங்கியவர் விக்ரம் பிரபு. தனது முதல் படமான ‘கும்கி’ மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவரது நடிப்பில் அடுத்து வந்த படங்கள் ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’. இதில் விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமாக அமைந்த ‘இவன் வேற மாதிரி’ விக்ரம் பிரபுவுக்கு சுமாரான வெற்றியையே தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘அரிமா நம்பி’ படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படங்கள் ’சிகரம் தொடு’, ‘தலப்பாக்கட்டி’ ஆகியவை. இதில் ‘சிகரம் தொடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படங்களை தொடர்ந்து எழில் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம் பிரபு! இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, தனது தாத்தா மற்றும் தந்தை பிரபுவின் பெயரை காப்பாற்றிவிட்டார் என்றே சொல்லலாம்.

‘கடல்’ தந்த முத்துராமனின் பேரன்!

விக்ரம் பிரபுவை தொடர்ந்து நடிகராக களம் இறங்கிய இன்னொரு பேரன் நடிகர் கௌதம் கார்த்திக். பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரன், நடிகர் கார்த்திக்கின் புதல்வர் என்ற முத்திரைகளுடன் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்! தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் அமைந்த இவரது அறிமுகம் அமர்க்களமாகவே அமைந்தது. ஆனால் ‘கடல்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருந்தாலும் நன்றாக நடிக்க தெரிந்தவர் கௌதம் கார்த்திக் என்ற நற்பெயரோடு அவருக்கு தொடர்ந்து பல படங்கள் கிடைத்தன. அந்த வரிசையில் அவர் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் ‘என்னமோ ஏதோ’. ஆனால் இந்தப் படமும் கௌதம் கார்த்திக்குக்கு பெயர் சொல்லும் படியான படமாக அமையவில்லை. இருந்தாலும் இவர் கைவசம் இப்போது ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ என பல படங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்து வரவிருக்கும் இப்படங்களின் ரிசல்ட்டை பொறுத்து கௌதம் கார்த்திக்கின் கேரியர் கிராஃப் எப்படி அமையும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு பொன்மாலையில் அறிமுகமான கண்ணதாசன் பேரன்!

தமிழ் சினிமாவில் வலம வந்து கொண்டிருக்கும் இன்னொரு பேரன் நடிகர் ஆதவ் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசனின் பேரன் என்ற அறிமுகத்துடன் நடிக்க வந்த இவரது முதல் படம் ஏ.சி.துரை இயக்கிய ‘பொன்மாலை பொழுது’. தனது அறிமுக படமே தனக்கு கை கொடுக்காத நிலையில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து சமீபத்தில் வெளியாகி, நல்ல வசூலை தந்த ‘யாமிருக்க பயமே’ படம் இவருக்கு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது.

காதல் மன்னனின் பேரன் அபினய்!

ஒரு காலத்தில் சினிமாவில் ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். இவரது பேரன் அபினய் தான் ஞானராஜ சேகர் இயக்கி, சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ராமானுஜன்’ படத்தில் கணித மேதை ராமானுஜனாக நடித்தவர். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி பெரும்பாலானோரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் அபினய்.

நகைச்சுவை நாயகன் நாகேஷின் பேரன்!

மேற்குறிப்பிட்ட பேரன் நடிகர்களுடன் இன்னும் சில வாரிசுகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ். நடிகர் ஆனந்த பாபுவின் மகனான கஜேஷ் நந்தகுமார் இயக்கும் ‘கல்கண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். இவர் தந்தை ஆனந்தபாபு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடித்த ‘ஆதவன்’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரியாகி, தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்!

கஜேஷை தொடர்ந்து மற்றுமொரு சினிமா பிரபலத்தின் வாரிசும் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் பழம் பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன் பிரபாகரன் ஹரிஹரன். ஆனால் இவர் நடிகராக இல்லாமல் தமிழிலும், ஹாலிவுட்டிலும் படங்களை தயாரித்து தயாரிப்பாளாராக சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார்.
அனைவரையும் வரவேற்போம், வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;