கார்த்திக் சுப்பராஜுக்கு இயக்குனர் ராம் ஆறுதல்!

கார்த்திக் சுப்பராஜுக்கு இயக்குனர் ராம் ஆறுதல்!

செய்திகள் 22-Jul-2014 9:50 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தை எடுப்பதைவிட, அதை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சவால் என்பதை மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது ‘ஜிகர்தண்டா’ படத்தின் ரிலீஸில் நடந்த களேபரங்கள். முதலில் வரும் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், அந்தத் தேதியில் ரிலீஸாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக இணையதளங்களில் செய்தி பரவ, அதை மறுத்து ட்வீட் செய்த சித்தார்த்தும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், அதுதான் உண்மை என்பதை சித்தார்த் உணர்ந்தபோது, தங்களிடம் தெரிவிக்காமலேயே இப்படி ஒரு ரிலீஸ் தேதி மாற்றம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தயாரிப்பாளர் கதிரேசன், ‘வேலையில்லா பட்டதாரி’ படம் நன்றாக ஓடுவதாலும், ‘ஜிகர்தண்டா’வை இந்த நேரத்தில் வெளியிட்டால் குறிப்பிட்ட அளவில் தியேட்டர் கிடைப்பது சிக்கலாகி, படத்தின் வெற்றிக்கு அது பாதிப்பைத் தரும் என்பதால், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியாகும் என விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனவருத்தத்தை உணர்ந்து, ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குனர் ராம் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் கீழே....

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு,

தங்களின் படம் “ஜிகர்தண்டா” அறிவித்த தேதியில் இருந்து (ஜீலை 25) அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போவதாக இப்போதுதான் கேள்விபட்டேன். தங்கமீன்கள் வெளிவருவதாக தினசரி இதழ்களில் விளம்பரம் வந்த தேதி ஜீலை 26, போன வருடம். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. இறுதியில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வந்தது.

தின செய்தித்தாள்களில் தேதியிட்டு விளம்பரம் வந்தபின் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் சொன்ன தேதி சொன்ன நேரம் வந்து சேரும் என்று நாம் சொல்லிய பின் தேதி மாறினால் எத்தனை மனவருத்தம் ஏற்படும் என்பதையும் அது எத்தனை பெரிய சுமையாய் அழுத்தும் என்பதையும் போன வருடம் இதே நாட்களில் நான் உணர்ந்தேன். அனுபவித்தேன். ஏன் தள்ளிப் போனது என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லச் சொல்ல என்ன எரிச்சல் ஏற்படும் என்பதையும் கண்டுணர்ந்தேன்.

இன்றைய உங்களின் இரவு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. கவலைப்படாதீர்கள், தடைகளை தாண்டி பெருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்கும். சாதனையாக மாறும். உங்களின் “பீட்சா” இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள். மதுரைக்கு ஜிகர்தண்டா எப்படியோ அப்படி தமிழ் சினிமாவிற்கு உங்கள் ஜிகர்தண்டா இருக்கும் என நான் நம்புகிறேன்.

பிரியங்களுடன்
ராம்.

இவ்வாறு தனது ஸ்டேட்டஸில் எழுதியிருக்கிறார் ராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;